May 30, 2019

ரிஷாத்தை தூரப்படுத்தி, ஆட்சியை கவிழ்ப்பதே திட்டம்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர் எஸ்.சுபைதீன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வீ.ஜெயதிலக, மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நசீர் , உயர்பீட உறுப்பினர் கலாநிதி மரைக்கார், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர், இந்த சம்பவங்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரையும் தொடர்புபடுத்தி வேண்டுமென்றே முடிச்சிப்போட்டு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகவே நாங்கள் இதனை கருதுகிறோம் . அனைத்து இனங்களையும் அரவணைத்து செயற்பட்டு வரும் எமது கட்சியும், கட்சித்தலைவரும் பயங்கரவாத்த்தையோ தீவிரவாத்தையோ என்றுமே ஆதரிப்பவர்களல்ல. 52 நாள் அரசாங்கத்திற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க மறுத்ததன்  காரணமாகவே அதற்கு பழிதீர்க்க இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்.  எதிர்க்கட்சியில் உள்ள மக்கள் செல்வாக்கில்லாத சில அரசியல் வாதிகள் மஹிந்தவின் மடியில் கிடந்துகொண்டு இனவாதத்தை பரப்பி பெரும்பான்மை மக்களுக்கு உசுப்பேத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான தந்திரபாயமாகவே இதனை பார்க்கின்றோம். அமைச்சர் ரிஷாத்தை தூரப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்குள் ஒரு நெருக்கடியை கொண்டுவந்து ஆட்சியை கவிழ்ப்பதே இவர்களின் திட்டமாகும்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எதிர்க்கட்சிக்காரர்களின் கோரிக்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதம் செவிசாய்த்திருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்காது. அவரைத் தூக்கி உச்சாணி கொப்பில் இப்போது வைத்திருப்பார்கள். எனவே அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களையும் நாம் நிராகரிக்கின்றோம். நம்பிக்கையில்லாப்பிரேரணையை வெற்றிகரமாக முகம்கொடுத்து, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முறியடிப்பார்.

மக்கள் துன்பங்களில் இருக்கும் இந்தக்காலத்தில் ஊடகங்கள் இனவாத கருத்துக்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்காமல் மிகப் பொறுப்புடனும் தர்மத்துடனும் செயலாற்ற வேண்டும் என நாம் அன்பாக வேண்டுகின்றோம். எவர் பிழை செய்தாலும் அவர்களை சட்டத்தின்  முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழியே,சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தனி மனிதர்கள் எவரும் தீர்ப்புக்களை சொல்ல வேண்டாமென கோருகின்றோம். இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

வடமே மாகாணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடும் கொடுக்கும் வகையீல் ஜனாதிபதியிடன் எமது கட்சித்தலைவர் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.  எனவும் தெரிவித்தனர். 

0 கருத்துரைகள்:

Post a comment