Header Ads



சஹ்ரான் குழு - தேசிய தவ்ஹித் ஜமாத் ஒழிக்கப்பட்டாலும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென கூறக்கூடாது

இலங்கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சஹ்ரானின் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத செயல்கள் நாட்டில் மீண்டும் நடக்காத அளவில் நடவடிக்கை எடுப்பதற்காக இருக்கும் நடைமுறைகளை மறுசீரமைப்பு செய்து மக்களுடன் நல்லிணக்கத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு பிரிவினர் மிகவும் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தை அடக்கியுள்ள நேரத்தில், சில தரப்பினர் வதந்திகளை பரப்பி, மக்களுக்கு தேவையாற்ற அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் 1983 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அம்பாறை நகர சபை மைதானத்தில் இன்று -30- நடைபெற்ற 6 லட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இந்த பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் செயற்பட வேண்டும். 1983 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது. நாட்டில் வாழும் எந்த இனப் பிரிவினரையும் ஒதுக்கக் கூடாது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அன்றைய தினமே நான் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடினேன். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக வேலைகளை ஆரம்பித்தனர். குண்டு தாக்குதல் சம்பந்தப்பட்ட பல தகவல்களை அன்றைய தினமே கண்டுபிடித்தனர்.

சஹ்ரான் குழுவின் ஒரு பகுதியினர் உயிருடன் இல்லை. அந்த குழுவை சேர்ந்த ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். அத்துடன் குழுவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரான் குழு மற்றும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டாலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறக் கூடாது.

இது விடுதலைப் புலிகளை போன்று பெரிய அமைப்புகள் செய்யும் வேலையல்ல. ஒரு குழு இல்லாமல் போனால், மற்றுமொரு குழு உருவாகலாம். இதற்கு அரசியல் நோக்கம் கிடையாது. ஐரோப்பாவில் சில சந்தர்ப்பங்களில் சிலர் தற்கொலை குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.

அவர்களின் நோக்கம் ஏனையோரை கொலை செய்யும் தற்கொலை தாக்குதல் நடத்துவது. சில நேரம் இரண்டு மூன்று பேர் இணைந்து தற்கொலை தாக்குதல்களை நடத்த முடியும்.

இந்த பயங்கரவாத்தை எதிர்கொள்ள புதிய சட்டங்களை கொண்டு வரும் தேவை உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய வியூகத்தை வகுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க புதிய வியூகத்தை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.