May 05, 2019

மீன்பாடும் தேன்நாடு


- வ.ஐ.ச.ஜெயபாலன் -
.
வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு
மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு
பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு
ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க
மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.
எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க
சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.
காலமெல்லாம் இங்கே
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை.
திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே
கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.
.
காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில்
வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும்.
வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும்
இளவட்டக்கண்கள்
தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே
தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது.
.
குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன்
போருக்குப் போவான்
கொடும்பகையை வென்றிடுவான்.
எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து
செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர்
அண்ணாவிதட்டும் மத்தளத்தின்
தாளத்தின் சொற்படிக்கு
எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்,
படிக்கட்டில்
பொல்லாவறுமை பசியோடு இவனுடைய
கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.
போடியாரின் மாளிகையில் போரடித்த நெல்குவித்து
நாடோடிப் பாடல் மகிழ்ந்து பசிமறக்கும்.
ஊரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,
.
எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்
செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள
பொட்டல்வெளியில்
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!
1982.   

4 கருத்துரைகள்:

ஜயா நீங்கள் ஒரு நடு நிலை வாதி.எங்களுக்கு இன்னும் உங்களிடம்,மதிப்பும் மரியாதையும் இன்னும் உண்டு.ஆனால் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.எமது இரு இனத்தாரிடையையும் விரிசலை உண்டுபண்ணியது Muslim களை கொண்டது,சொந்த மண்ணில் இருந்து துரத்தியது யார்? இப்போதும் அனைத்து வகையான சமூக வலைத்தலங்கலிலும் முதலில் எம்மை வம்புக்கிழுப்பது யார்? முதலில் இனவாதம் பேசுவது யார்? நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள் அப்போது புரியும்,இன்னும் இன்னும் தவறுகளை யார் செய்கிறார்கள் என.(நாங்கள் இன்னும் ஒற்றுமையோடு வாழத்தான் முயல்கிரோம்.ஆனால் அவர்களுக்கு அதில் எந்த வித கரிசனையும் இல்லை)

தமிழ் குழுக்களும் இஸ்லாமிய வகாபி அமைப்புகளும்தான் பொறுப்பு. 1985ம் ஆண்டு அம்பாறைகலவரங்களின்பின் தோழர் தலைவர் அஸ்ரப் முஸ்லிமென்று சொல்ல வெட்க்கித் தலை குனிகிறேன் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையை வாசியுங்கள். கிழக்கில் வீரமுனை மற்றும் காத்தான்குடி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். தமிழ் இளைஞர்கள் சிலர் இயக்கங்களோடும் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் ஊர்காவல் படையுடனும் சேர்ந்து ஆடிய வெறிக்கூத்தில் கிழக்கில் சம அளவில் தமிழ் முஸ்லிம் வீடுகள் எரிக்கபட்டுள்ளது. வடக்கில் மட்டும்தான் தமிழ் இயக்கம் அப்பாவி முஸ்லிம்கள்மீது ஒருதலைபட்ச்சமாக படுபாதகம் செய்துள்ளது. இன்றைய சூழலும் கிழக்கில் கருக்கொண்டவைதான். இவற்றை நான் சொல்லுவது உண்மையான வரலாறு தெரியாமல் இன்று இனங்களுக்கிடையிலான புற்று நோக்கு மருத்துவம் செய்ய இயலாது. இதனால்தான் முஸ்லிம் ஜனநாயக சக்திகள் வெற்றிபெறுவதுதான் இன்றைய பிரச்சினைக்கு தீர்வென பிரார்திக்கிறேன்.

ஆனால் Muslim கள் யாரும் கோயில்களுக்குல் புகுந்து யாரையும் சுட்டுக்கொல்லவில்லை.தமிழ் ஊருக்குள் புகுந்து யாரையும் வெட்டிக் கொல்லவும் இல்லை.புலிகள் காத்தான்குடி,ஏராவூரில் செய்த அட்டூலியங்கலுக்கு பிறகுதான் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு ஊர்காவல் படையில் இணைந்தார்கள்

@Rizard, google பண்ணி பாருங்கள், 90களில் அம்பாறையில் மாவட்டத்தில் கோவில்களில் முஸ்லிம்களில் இந்துகளை வெட்டியுள்ளார்கள்

சில காலங்கள் சென்றபின்னர், தேவாலாயங்களில் ஈஸ்ட்ர் நாளில் தற்கொலை தாக்குதல்கள் முஸ்லிம்கள் செய்யவில்லை என்பீர்கள போல

Post a Comment