Header Ads



சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் - மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே

சிறிலங்கா இன்று -27- முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார்.

”ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தணிந்து, நாட்டின் இயல்பு நிலையில், நாளுக்குள் நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று நிலைமைகள் முற்றிலுமாக வழமைக்குத் திரும்பி விடும்.

இன்று தொடக்கம் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் முழுமையான வருகைகள் இருக்கும்.

நாள் முழுவதும், படையினர் நடத்தி வருகின்ற தேடுதல்களில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறோம்.

மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 100 வீதம் இருக்கும்.

பாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கியமான அரச, தனியார் நிறுவனங்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை, கேகாலை, புத்தளம், குருணாகல, கொழும்பு, கம்பகா மாவட்டங்களில், சனிக்கிழமை படையினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சிறிலங்கா படையினர் நடத்திய தேடுதல்களில் 90 சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.