Header Ads



மர்ஹூம் இஸ்மாஈல் ஹzஸரத் - சிறு குறிப்பும், ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவலும்


- அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர் -

மர்ஹூம் இஸ்மாஈல் ஹzஸரத் அவர்களிடம் அறிவை கற்று பயனடைந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன். 1990 களில் நாவலப்பிட்டி தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யஹ் அரபுக் கலாசாலையில் கற்றுக் கொண்டிருந்த போது  அவர்களின் மாணவனாக அவர்களிடம் கல்வியை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது. அத்துடன் அக்கால கட்டங்களில் எழுத்துத் துறையில் அவர்களுக்கு ஊழியனாக கடமையாற்றும் சந்தர்ப்பமும் கிடைத்திருந்தது. 

மிகவும் பேணுதல் மிக்கவர்கள். ரஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மானசீகமான அன்பு வைத்திருந்தார்கள் என்பதை   அவர்களது பேச்சுக்களும், நடத்தையும், செயலும் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தன.  நபியவர்களது  ஸுன்னாக்கள் மீதும் அவற்றை பின் பற்றுவதிலும் மிக அதிக கவனமும், அலாதியான பிறியமும் கொண்டிருந்தார்கள்.

அடக்கமானவர்கள். எளிமையும் பணிவும் அவரகளிடம் காணப்படும் விசேட பண்புகளாகும். ஒருபோதும் அவர்கள் பணத்திற்கும் பணக்காரர்களுக்கும் பின்னால் சென்றதில்லை. பழகுவதற்கு மிகவும் மிருதுவானவர்கள்.  அன்பாக கதைப்பார்கள். மிகவும் மிருதுவான சுபாவம் கொண்ட ஹzஸரத் அவர்கள் நாமறிந்த வரை யாருடைய உள்ளத்தையும் புண்படுத்துயது கிடையாது.  சொற்பமாகவே கதைப்பார்கள்.  இலங்கையின் அக்குறணை நகரை பிறப்பிடமாக கொண்டவர்கள்.  அவர்கள் ஒரு துடிப்பான தாஈ.  இலங்கையின்  முன்னோடி உலமாக்களில் மிகவும் முக்கியமானவர்கள். நான்கு திருமணங்களை செய்திருந்த ஹzஸரத் அவர்கள் தனது நேரத்தை தனது குடும்பங்களுக்கு, சமூகத்திற்கு, தஃவாவிற்கு , இல்மிற்கு, அமலுக்கு என அழகாக பிரித்து வைத்திருந்தார்கள். 

இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல நாடுகளுக்கும் தப்லீக் ஜமாஅத்தில் சென்று  பாரிய அளவில் தஃவா பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள். தப்லீக் அமைப்பின் தாயக மர்கஸ் (டில்லி மர்கஸ்) இல் மர்ஹூம் இஸ்மாஈல் ஹஸ்ரத் அவர்களுக்கென தனியான இடமுண்டு. தப்லீக் ஜமாஅதின் உலக அளவிலான அமீர்களாக டில்லி மர்கஸில் செயற்பட்டு வரும்  மூத்த உலமாக்கள் கூட  இஸ்மாஈல் ஹஸ்ரத் அவர்களை மிகவும் மரியாதையாகவே நடாத்துவார்கள். 

ஹஸரத் அவர்கள் ஒரு வியாபாரியாகவும் செயற்பட்டுள்ளார்கள். தப்லீக் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு வெளியே ஏனைய தஃவா அமைப்புக்களுடன் தொடர்பு பட்டவர்கள், பொது மக்கள் என அதிகமான மக்களுடன் தொடர்பை பேணி வந்துள்ள ஹஸ்ரத் அவர்களை அறிந்து வைத்துள்ள அனைவரும் அன்னாரை நேசித்து, அன்னாருக்கு மரியாதை செய்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஹஸ்ரத்தின் வபாத்திற்கு பிறகு வரும் செய்திகள் சிலவற்றில்  இஸ்மாஈல் ஹzஸரத் (பின்னூரி) (தேவ்பந்தி) என அவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய கலாசாலை பற்றி சிலர் தவறுதலாக குறிப்பிட்டிருக்கின்ற போதிலும் ஹஸ்ரத் அவர்கள் இந்தாயாவின் டில்லி மர்கஸில் அமையப்பெற்றுள்ள காஷிfபுல் உலூம் அரபுக் கலாசாலையிலேயே சன்மார்க்க கல்வியை கற்று பட்டம் பெற்று வெளியேறி இருந்தார்கள். 

இன்று இலங்கையில்  பட்டம் பெற்று வெளியேறி பல்வேறு துறைகளிலும் சிறப்பாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உலமாக்கள் மர்ஹூம் இஸ்மாஈல் ஹஸ்ரத் அவர்களின் மாணவர்கள் ஆவார்கள். 

ஹஸ்ரத் அவர்கள் குருநாகல் மெல்சிரிபுரவில் அமைந்துள்ள உஸ்வத்துன் ஹஸனஹ் அரபுக் கலாசாலையின் நிறுவனராகவும் அதன் தலைமை ஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளதுடன்  தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யஹ் (நாவலப்பட்டிய),  ஜாமிஆ அர் ரஹ்மானிய்யஹ் (அக்குறணை), ரஷாதிய்யஹ் (கொழும்பு மர்கஸ்),  ஜாமிஆ இன்ஆமுல் ஹஸன் (அட்டுளுகம, பண்டாரகம) தீனிய்யஹ் (பாணந்துறை) உஸ்மானிய்யஹ் (டிக்கோயா, ஹட்டன்) ஆகிய அரபுக்கலாசாலைகளில் நீண்ட காலம்  உஸ்தாக கடமை புரிந்துள்ளார்கள்.

அவர்களை தமது ஆத்மீக குருவாகக் கொண்டு செயற்பட்டு வருபவர்கள் இலங்கையிலும் உலகளவிலும்  ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர்.  அவ்வாறானவர்கள் இஸ்மாஈல் ஹஸ்ரத்திடம்  பைஅத் பெற்று தமது அன்றாட அமல்கள், அவ்ராதுகள், திக்ரு இஸ்திஃபார், ஸலவாத்துக்கள் போன்றவற்றை நாள்தோறும் பேணுதலாக செய்து வருகின்றனர். ரமழான் காலம் வந்து விட்டால் அவர்களுடன் இஃதிகாப் இருந்து அவர்கள் மூலம் பயனடைய ஒரு பெரும் கூட்டம் தயாராகி விடுவது வழமை. 

அன்னார் விட்டுச் சென்ற அழகிய முன்மாதிரிகளை கடைபிடிப்பதற்கான சந்தர்ப்பத்தை அள்ளாஹ் நமக்கும் தந்தருள்வானாக. அன்னாரின் தவறுகளை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நல்குவானாக. அன்னாரது குடும்பத்தினருக்கு பொறுமையை நஸீபாக்குவானாக. 
---------------------------------------------

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய செய்தி  

கொழும்பில் நேற்று 06/04/2019 சனிக்கிழமை வபாத்தான ஹஸ்ரத் அவர்களின் பூதவுடல் இன்று காலை  அக்குறணைக்கு கொண்டுவரப்பட்டு  அக்குறணை தெலும்புகஹவத்தையில் அமையப்பெற்றுள்ள அன்னாரின் தாயாரின் இல்லத்தில் மஹ்ரமான பெண்களின் பார்வைக்காக  காலை 09.30 வரை வைக்கப்பட்டிருந்தது. 

அன்னாரின் ஜனாஸா தற்போது  ஆண்கள் பார்வையிடுவதற்காக  அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ளது.  அன்னாரின் ஜனாஸா தொடர்ந்தும் இன்று மாலை அஸர் தொழுகை வரை    மக்களின் பார்வைக்காக அங்கு (அஸ்னா மத்திய பள்ளிவாசலில்) வைக்கப்படவுள்ளது. அஸ்னா மத்திய பள்ளிவாசலில் அஸர் ஜமாஅத் தொழுகை நிறைவுபெற்றதும்    அன்னாருக்கான ஜனாஸா தொழுகை அங்கு நடாத்தப்பட்டு, இன்ஷா அள்ளாஹ் இன்று (07/04/2019) மாலை 04.00 மணிக்கு அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக அக்குறணை பெரிய பள்ளிவாசலுக்கு (தாய்ப்பள்ளிவாசல்) எடுத்து செல்லப்படவுள்ளது. 

குறிப்பு: 
இலங்கையின் நாலாபுரங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னாரின் ஜனாஸாவை பார்வையிடவும், நல்லடக்கதில் கலந்துகொள்ளவும் வருகை தர அதிக சாத்திப்பாடுகள் இருப்பதனால் ஹஸ்ரத் அவர்களின் குடும்பத்தினரும் அக்குறணை ஜம்இய்யத்துல் உலமாவும் கீழ்காணும் பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றனர். 

(01) அக்குறணை மற்றும் அதனை சூழ வசிப்போர் முடியுமானளவு முயற்சித்து இன்று ளுஹர் தொழுகைக்கான அதான் ஒலிப்பதற்கு முன்பு அஸ்னா மத்திய பள்ளிவாசல் வந்து அன்னாரின் ஜனாஸாவை பார்வை இடுவது சிறந்ததாகும்.  ஏனெனில் அது வெளிப்பிரதேசங்களில் இருந்து தாமதித்து வருவோர் பிற்பகல் நேரங்களில் ஜனாஸாவை சிரமமின்றி பார்வை இடுவதற்கு மிகவும் உதவியாக அமையும் இன்ஷா அள்ளாஹ். 

(02) ஊருக்குள் வசிப்போர் வாகனங்களை கொண்டு வருவதை முடியுமானளவு தவிர்த்த்துக் கொள்ளுமாறும் வெளியே இருந்து வருவோர் அஸ்னா மத்திய பள்ளிவாசல் வலாகத்தற்குள் தமது வாகனங்களை  கொண்டுவருவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் அக்குறணை நகரின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தமது வாகனங்களை நிறுத்துக் கொள்ளுமாறும் அன்பாய் வேண்டிக் கொள்ளப் படுகின்றார்கள்.

1 comment:

  1. Innalillahi Winna ilaihi Rajioon. ALLAH YARHAMHU

    ReplyDelete

Powered by Blogger.