Header Ads



இலங்கையிலிருந்து, நியூசிலாந்து பிரதமருக்கு ஒரு கடிதம்

'உங்கள் நாட்டு முஸ்லிம்கள்  மீது நடத்தப்பட்டது போன்ற மிலேட்சத்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத்தாக்குதலை நாமும்   அனுபவித்தவர்கள் என்ற வகையில்  உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறோம். இந்தச்  சந்தர்ப்பத்தில் நீங்கள் மேற்கொண்ட துணிகரமான மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கத்தேய நாடுகளின் இனவாத  அரசியல் தலைவர்களையும், ஏனைய சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்வாதிகளையும் வெட்கித்தலைகுனியச் செய்திருக்கிறது.  இந்த முன்மாதிரிமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் உங்களுக்காகவும் உங்கள் நாட்டு மக்களுக்காகவும் நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதித் தவிசாளர் நியூசிலாந்து பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இரண்டு பள்ளிவாயில்களின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேட்சத்தனமான பயங்கரவாத சம்பவம் தொடர்பில் நியூசிலாந்தின்  பிரதமருக்கு NFGGயின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'மதிப்பிற்குரிய நியுசிலாந்து  பிரதமர் அவர்களே!

நீங்கள் வெளிப்படுத்தியுள்ள உயர்ந்த மனிதாபிமான பண்புகளை பிரதிபலிக்கின்ற ஒரு சமூக அரசியல் கட்சியின் ஸ்தாபகர் என்ற வகையிலும் அதன் தற்போதைய  பிரதித்தவிசாளர் என்ற வகையிலும் உங்கள் வேதனைகளை பகிர்ந்து கொள்வதோடு, நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக   எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும்  பகிர்ந்து கொள்கின்றேன்.

கிரிஸ்ட்சேர்ச் பள்ளிவாயில் துன்பியல் நிகழ்வுகள் தொடர்பில் நீங்கள் முன்னெடுத்து வருகின்ற உறுதியான முன்மாதிரி மிக்க செயற்பாடுகளைப்
பாராட்டி இது போன்ற ஆயிரக்கணக்கான கடிதங்கள் இக்காலப்பகுதியில் நிச்சயம் வந்து குவிந்திருக்கும். இருப்பினும்  இந்த சந்தர்ப்பத்தில்  எமது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் உங்களுக்கு தெரிவிப்பது எமது கடமையென நம்புகின்றேன். 

எமது NFGG உருவான அதே பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 5 குடும்பங்கள் உங்களுடைய நாட்டின்  கிரிஸ்ட்சேர்ச்சில் வாழ்ந்து வருகின்றனர். அது மாத்திரமல்லாது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட பள்ளிவாயியில் குறித்த தினம் அவர்களில் சிலர் தொழுகைக்காகவும் சென்றிருந்தனர். எனினும் அதிர்ஸ்டவசமாக அவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.

இன்றிலிருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் 1990ம் ஆண்டு எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உருவான காத்தான்குடி மண்ணிலும் இதே கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு ஒப்பான மிலேட்சத்தனமான ஒரு பள்ளிவாயில் தாக்குதல் ஒன்று நடைபெற்றிருந்தமையினை நீங்கள் அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். அத்துன்பியல் சம்பவத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என 5 தொடக்கம் 80 வயது வரையான 103 பேர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாயில்களில் இரவு நேர வணக்கத்திற்காக சென்றிருந்த மக்களே அன்று இவ்வாறு எவ்வித காரணங்களோ நியாயங்களோ இன்றி 'புலிப்' பயங்கரவாதிகளால் கோழைத்தனமாக  படுகொலை செய்யப்பட்டனர்.

எனவேதான், உங்கள் நாட்டு மக்கள் அனுபவிக்கும் அதே வகையான மனவேதனையினை அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையில், எமது இந்தக் கடிதம்  உங்களினது பயங்கரவாதத்திற்கெதிரான உறுதிப்பாட்டுக்கு  பக்க பலமாக இருக்குமென நம்புகின்றோம்.

 'உலகிலுள்ள அனைத்து நம்பிக்கையாளர்களுமே ஒரு உடலைப் போன்றவர்கள். உடலில் எந்தப்பகுதியில் காயம் ஏற்பட்டாலும் அது முழு உடலிற்கும்  பாதிப்பை ஏற்படுத்தும்'  என்பதுதான் முஸ்லிம்களாகிய  எங்களின் நம்பிக்கையாகும். நீங்கள் குறிப்பிட்டுக்காட்டிய இந்த  நபிமொழியானது மிகப் பொருத்தமானது மாத்திரமன்றி  இன்று உலகில் பல இடங்களிலும் காணப்படுகின்ற இனவாதிகளினதும் , இஸ்லாமிய மாரக்கத்திற்கெதிரான அரசியல் வாதிகளினதும் கவனத்திற்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டியதுமாகும்.

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே!

துரதிஷ்டவசமாக இத்துன்பியல் நிகழ்வு உங்களுடைய அழகான அமைதியான நியுசிலாந்தில் நடைபெற்றுவிட்டாலும் கூட , அந்த ஈனச்செயலை செய்த பயங்கரவாதி  உங்கள் நாட்டைச்சார்ந்த ஒருவரல்ல என்பது உங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்திருக்கும். இச்சம்பவத்தின் பின் நியுசிலாந்து மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காட்டிய இரக்கமும், அவர்களது சகிப்புத்தன்மையும், அரவணைப்பும் நியுசிலாந்து மக்களை உலக அளவில் மிகச்சிறந்த முன்மாதிரியான மக்களாக வேறுபடுத்திக்காட்டியுள்ளது.  அங்குள்ள ஒவ்வொரு குடிமகனும்  இச்சம்பவம்  நியூசிலாந்திற்கு  எப்படியான ஒரு வடுவாக மாறியுள்ளது என்பது குறித்து  கவலைப்படுவதையும்  அறிய முடிகிறது.

இச்சம்பவத்தின் ஊடாக இறைவன் உங்களையும் கூட உலக அளவில் இன்று ஒரு சிறந்த தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக மாற்றியுள்ளான். ஊழல் மோசடி மிக்க எத்தனையோ  தலைவர்களைக்கொண்ட இவ்வுலகில் உங்களுடைய இப்போதைய செயற்பாடுகள் உண்மையில் மிகவும் போற்றத்தக்கது. 

கடந்த 30 வருட பயங்கரவாத யுத்தத்தினால் எமது நாடான இலங்கையிலும் கூட நாம் சுமார் ஒரு லட்சம் உயிர்களை காவு கொடுத்துள்ளோம் தமிழ், முஸ்லிம், சிங்கள இன பேதமின்றி அனைவருமே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே !

 வெறும் 39 வயதைக் கொண்டுள்ள நீங்கள் இன்று செய்திருக்கின்ற சாதனை அளப்பெரியது.மத்திய கிழக்கு சுயநல அரசியல் தலைவர்களும் இனவாத மேற்கத்தேய அரசியல் தலைவர்களும் வெட்கித்தலைகுனிகின்ற அளவிற்கு இன்று நீங்கள்  நியூசிலாந்தினை மேலும் அமைதியான நாடாக, ஒற்றுமையான நாடாக ,மனிதர்கள் வாழச்சிறந்த நாடாக மாற்றியுள்ளீர்கள்.

உங்களுடைய மனிதாபிமானம் உண்மையில் உலக முஸ்லிம்களை சமாதான செயற்பாட்டாளர்களை  மெய்சிலிர்க்க வைத்துள்ளது. உண்மையிலேயே நீங்கள் எமது அன்பையும் பிரார்த்தனைகளையும் வென்றுள்ளீர்கள்.உங்களுடைய இந்த முன்மாதிரிமிக்க செயற்பாடுகளை இறுதிவரை நீங்கள் முன்னெடுக்கவும் உங்களுடைய நலனுக்காகவும் உங்களுடைய நாட்டு நலனுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்'

No comments

Powered by Blogger.