April 28, 2019

முஸ்லிம்கள் சார்பில், கிருஷ்த்தவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரல்

- நஜீப் பின் கபூர் -

28.04.2019
பேராயர் மார்ஷல் மெல்கேலம் ரன்ஜித் பர்ணாந்து
உத்தியோகபூர்வ வாசஸ்தளம்
கொழும்பு. 

மேன்மைக்குரிய பேராயர் அவர்களே!

முதலில் ஈஸ்டர் தினப் படுகொலைகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் பேரால் தாங்கள் ஊடாக உலக கிருஷ்த்தவ சமூகத்தினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோருகின்ற என்னைப் பற்றிய சிறுகுறிப்பொன்றை இங்கு பதியவிரும்புகின்றேன். நடந்து முடிந்த கோரச் சம்பவத்திற்கு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் பேரால் தங்கள் ஊடாக பகிரங்க மன்னிப்பைக் கோருகின்ற நான் தழிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் அறிமுகமான ஒரு அரசியல் ஆய்வாளன்-பத்திரிகைக்காரன் மாத்திரமே. 

சமூத்தின் பேரால் இந்த பகிரங்க மன்னிப்புக் கோருகின்ற தகுதி எனக்கு உண்டோ இல்லையோ என்பது கூட தெரியாது. என்றாலும் சம்பவம் தொடர்ப்பில் முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது, அவைபோதுமான அளவில் இருக்கின்றதா இல்லையா? அதுகூட எனக்குத் தெரியாது. அதனால் தனிப்பட்ட ரீதியில் இந்தச் செய்தியை உலக கிருஷ்த்தவ மக்களுக்கும் குறிப்பாகப் பாதிக்ப்பட்ட மக்களுக்கும் எத்திவைக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற கிருஷ்த்தவ மக்கள் பொதுவாக எந்த ஒரு மாற்று சமூகங்களுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதை நான் இது வரை அறிந்திருக்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கிருஷ்த்தவ சமூகத்தின் போரால் ஒரு வார்தைகூட மனம் நோகும்படி பேசப்பட்டிருக்கின்றதா என்பதையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை.

இடிந்து போன கட்டங்களை கட்டித்தருவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இழந்த எல்லாவற்றையும் மீட்டுக் கொள்ள முடியும். ஆனால் பலியான இந்த அப்பாவி உயிர்களை எவரால் மீட்டுத்தர முடியும் என்று கேட்கத் தோன்றுகின்றது. என்னதான் சமாதானம் பேசினாலும் பாதிக்கப்பட்ட சமூகம் அதன் தலைமைத்துவங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்தாலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்துகின்ற  வடுக்களை வரலாறு ஒருபோதும் மறக்காது மன்னிக்காது.

பல நூறுவருடங்களாக கட்டிக்காக்கப்பட்ட கிருஷ்தவ - முஸ்லிம் நல்லுறவை கட்டுமிராண்டிகள் ஒருரிரு மணித்தியாலங்களுக்குள் சிதைத்து விட்டார்கள். ஆனால் உலகில் பல நாடுகளில் சில வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த வேலையை அவர்கள் துவங்கி விட்டார்கள் என்பதனை நீங்களும் உங்கள் சமூகமும் நன்கு அறிவீர்கள்.

ஈஸ்டர் தாக்குதலும் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புக் கூறலும் என்ற தலைப்பில் நான் முஸ்லிம்கள் அதிகம் பார்க்கின்ற விடிவெள்ளி (24.04.2019) மற்றும் ஊடகங்களில் எழுதி இருந்த கட்டுரையில் முஸ்லிம் சமூகத்திற்கு சில செய்திகைளைச் சொல்லி இருந்தேன். மேலும் இணையத்தளங்கள் வாயிலாகவும் பல செய்திகளைச் சொல்லி வருகின்றேன். இன்று கூட தினக்குரல் வாரஏட்டில் (28.04.2019) ஈஸ்டர் படுகொலை! உரிமை கோரலும் பொறுப்புக் கூறலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கின்றேன்.

எதைத்தான் எழுதினாலும் செய்தாலும் அவை எதுவுமே இந்த விடயத்தில் என்னை சமாதானப்படுத்தவில்லை. சமூகத்தின் பெயர் தாங்கிகள் செய்த இந்த காட்டுமிராண்டித்தனமான செயலால் அனைத்து முஸ்லிம்களும் இன்று தலைகுனிந்து, முடங்கிப்போய் வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் நிற்க்கின்றார்கள்..

பாதிக்கப்பட நீங்களும் உங்கள் சமூகத்தினரும் கடைப்பிடிக்கின்ற அனுகுமுறைகளும் நிதானமும் ஒரு சராசரி மனிதன் என்றவகையில் கற்பனை செய்வது பார்க்கக் கஷ்டமாக இருக்கின்றது. அந்தளவுக்கு இந்த நாட்டில் வாழ்க்கின்ற கிருஷ்த்தவ சமூகம் பக்குவப்படுத்தப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். 

உங்களைப்போன்ற சமயத் தலைவர்கள் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலக மதத் தலைவர்களுக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு. நீங்கள் இந்தப் பூமியிலே ஒரு மனிதப்புனிதராக இன்று அனைவராலும் பார்க்கப்படுகின்றீர்கள். 

நாட்டில் வாழ்கின்ற முழுக் கிருஷ்தவ சமூகத்தினரும் உங்கள் வார்த்தைகளுக்கு வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு பொறுமையுடனும் நிதானத்துடனும் இருப்பது உங்கள் ஆளுமையின் உச்சத்தைக் காட்சிப்படுத்துகின்றது.

உலக நடப்புக்களை நன்கு அறிந்தவர் என்ற வகையில் என்ன நடக்கின்றது என்பதனை முஸ்லிம் சமூகத் தலைமைகளை விட நீங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

கிருஷ்த்தவமும் இஸ்லாமும் அண்ணன் தம்பிபோல் உறவுள்ள சமூகங்கள். எனது அவதானப்படி அதனைச் சிதைக்கின்ற வேலைகள் கடந்த ஓரிரு தாசப்தங்;களில் இருந்துதான் ஆரம்பித்திருக்கின்றது. இது மேற்கத்திய நாடுகளில் ஒரு விதமாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக - சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் வேறு விதமாகவும் இந்தக் கொலையாளிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

அரச பாதுகாப்பு தரப்பு இது விடயத்தில் தற்போது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கின்றது. அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் தற்போதய அமைதி சூழ்நிலையைப் பாவித்தி இந்தக் காட்டு மிராண்டிகள் எதாவது அழிவுகளைச் செய்திருப்பார்கள் என்பது எனது கருத்து. அமொரிக்க, ரஷ்யா போன்ற சக்தி மிக்க நாடுகளிலே பாதுகாப்புத் துறையினர் கண்ணில் மண்ணைத்தூவிட்டு  பயங்கரவாதிகள் காரியம் பார்த்திருக்கின்றார்கள்.

இந்த நெருக்கடியான நிலையில் கூட தாங்களே தாங்கள் சமூகத்தினரோ செல்வாக்கான கிருஷ்தவ நாடுகளிடம் கூட ஒரு சின்ன முறைப்பாட்டையாவது இது விடயத்தில் இதுவரை செய்யவில்லை. இது சர்வதேசப் பயங்கரவாதம் மட்டுமல்ல உலகில் பிரதான இரு சமயங்களையும் மோதவைத்து இந்த உலகில் ஒட்டு மொத்த மனித வாழ்வையும் இருப்பையும் இவர்கள் கேள்விக்குறியாக்கி இருக்கின்றார்கள். 

இவர்களின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி அமையும் என்று எவராலும் கூற முடியாது. எனவே உலகில் வாழ்கின்னற அனைத்து மதங்களும் இனங்களும் இந்தக் காட்டுமிராண்டிகளில் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வேலைத் திட்டங்களை கூட்டாகக் கண்டறிய வேண்டி இருக்கின்றது. 

பௌத்தன், இந்து, இஸ்லாமியன், கிருஷ்தவன், என்று வேற்றுமைகளை மறந்து ஒட்டுமொத்த மனித வர்க்கமும் இவர்களுக்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்திருக்கின்றது என்பதை மனித குலம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது எனக்கருதுகின்றேன். குறிப்பாக முஸ்லிம் சமூகம் இதுவிடயத்தில் பாரிய பங்களிப்பை வழங்கவேண்டி இருக்கின்றது.

பேரன்புமிக்க கிருஷ்தவ உடன் பிறப்புக்களே! 

சம்பவம் தருகின்ற வேதனையை மறக்க நெடுநாள் தேவைப்பட்டாலும், வரலாறு இந்தக் கொடும்பாவிகள் செய்த அநீயாயத்தை இந்த வையகம் நிலைக்கின்ற நாள் வரை மறக்கமாட்டாது என்பது எனது நம்பிக்கை.

சிலர் இதனை ஜேவிபி, மற்றும் ஈழப் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளுடன் சமப்படுத்தி பிரச்சாரம் செய்வது அவர்களின் அறிவு சார்ந்த செயல்பாடு என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது.

பேராயர் அவர்களே! தாங்கள் இன்று (28.04.20190) செய்த ஆராதனை என்னை மிகவும் கவர்ந்தது. உலகில் பெரும்பாலான மக்கள் இன்று உங்கள் போதனையைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். 

'மனிதப் பிரவி உன்னதமானது உயரிது'

'கடவுளின் பேரால் எவரையும் கொல்ல முடியாது'

'இந்த உலகில் வாழ்கின்ற எவரும் ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வீசப்பட்டவர்கள் அல்ல அனைவரும் ஒரு தாயின் கருவிலிருந்தே பூமிக்கு வந்தவர்கள்'

என்ற உங்கள் வார்த்தைககள் மிகவும் யதார்த்தபூர்வமானதும் நியாயமானதும் அர்த்தமுள்ளதும் என்று கூறி இஸ்லாத்தின் பேரால் ஐஎஸ்ஐஎஸ் காட்டுமிராண்டிகளினால் நடாத்தப்பட்ட கொடூரச் செயல்களுக்காக ஒரு முஸ்லிமாகப் பிறந்தவன் என்ற வகையில் மீண்டும் தாங்கள் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் மன்னிப்பை கிருஷ்த்தவ சமூகத்தினரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
மிக்க நன்றி.

4 கருத்துரைகள்:

இந்த உன்னதமான கட்டுரையை சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து நாட்டில் உள்ள எல்லா முன்னணி பத்திரிக்கைகளிலும் பிரசுரிக்க ஏற்பாடு செய்யுங்கள்

Request to translate the above article in Sinhala and English languages and arrange to publish it in all leading news papers in Sri Lanka.

இஸ்லாமிய மார்க்கத்தலைமைகள் பலவீனர்கள். எந்தவிடயத்தையும் தீர்க்கமாகச் சொல்லுவதில் தவறிவிடுகின்றனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பள்ளிவாசல்களில் கூட தான்தோன்றித்தனங்கள் தாண்டவமாடுகின்றன. சட்டதிட்டங்களைப் பிறப்பிக்கின்றனர் ஆனால் கண்காணிப்பு இல்லை.குறைந்தது அழகான முறையில் அதான் சொல்வதற்கு முஅத்தின்மாரைப் பயிற்றுவித்தல், உழ்ஹிய்யா கொடுக்கும் போது ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுடன் கண்காணிப்பும் செய்யப்பட்ட வேண்டும், அதான் சொல்லும்போது ஒலிபெருக்கியின் சத்தத்தை மட்டுப்படுத்தல் இல்லாது போனால் பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள எதிர்கால சந்ததிகளின் கேட்கும் திறன் குறைந்து கொண்டு செல்லும் ஆபத்துள்ளது.மாட்டிறைச்சிக்கடைகளில் இறைச்சியை தொங்க வைத்துக் கொண்டு புதினம் காட்டாமல் மறைத்து வைத்து மாற்று மத சகோதரர்களுக்கு கண்ணியங்கொடுத்து வியாபாரம் செய்தல். குறைந்தது இவ்விடயங்களிலாவது முழுப்பலத்தையும் பிரயோகிக்க வேண்டும்.

Words cannot express my sadness. My Christian brothers and sisters will be in my thoughts and prayers. Your article touches my heart.

Post a Comment