Header Ads



உரிமைகளைப் பறிக்காதீர், உணர்வுகளை தகர்க்காதீர், உள்ளங்களில்தான் பிரச்சினை உடையில் அல்ல

-அல்-ஆலிமா ஒமர் நுஹா-

யார் கண் பட்டதோ தெரியவில்லை?இதுவரைகாலமும் ஜாதி, மத, நிற, இன, மொழி பேதமின்றி இலங்கையராய் ஒற்றுமையுடன் வாழ்ந்த எமக்குள், தொட்ட தெல்லாம் பிரச்சினை பட்டதல்லாம் வன்முறை  என்றாகிவிட்டது. எது நடந்தாலும் சில குழப்பவாதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு, சிறுபாண்மையினரின் உரிமைகளைப் பறிக்க வேஷம் போட்டு கோஷம் எழுப்பி சாமாண்ய மக்களையும் அவர்களுக்கெதிராக திசைதிருப்பி விடுகின்றனர். இதிலும் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம்கள், அதிலும் குறிப்பாக பெண்கள். 

சிலர் நிகாபுக்கு (புர்க்கா : முகத்தை மறைக்கும் வண்ணம் அனியும் ஆடை) எதிராய் கோஷம், சிலர் ஹிஜாபிற்கெதிராய் கோஷம். எதுவானால் என்ன? இரண்டும் இஸ்லாமியரின் மார்க்க சுதந்திரம் தானே? அவர்களுக்கும் தமது மார்கத்தைப் பின்பற்ற நாட்டின் அரசியல் யாப்பு உறுப்புறை 12(2),
அரசியல் யாப்பு உறுப்புறை 14(1) இன் படி சகல உரிமைகளும் காணப்படுகின்றதல்லவா? ஒரு சிலரின் தவறிற்காக அப்பாவிகளும் தண்டனை அனுபவிப்பது எவ்வகையில் நியாயம்?

எமக்கும் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களுக்கும் எந்த பகையுமில்லை.யாரின் சதியோ இவ்வாறான ஓர் ஈனச் செயல் அரங்கேறி விட்டது. நாம் அதை முழு இதய சுத்தியுடன் வண்மையாக கண்டிக்கிறோம், அதேவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு உச்சபட்ச தண்டனைகள் வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இனியும் இவ்வாறானதொரு இழி செயல் நடந்து விடக்கூடாது. தினமும்  நாம் பாதிக்கப்பட்டவர்களுக்காக  பிராத்திக்கிறோம்  அதற்காக உதவவும் நாம் தயாராகவே உள்ளோம். எனவே எங்களை தீவிரவாதிகளாய் பார்காதீர்கள். சகோதரர்களாய்ப்  பார்க்காவிடினும் மனிதாபிமான அடிப்படையில் சக மனிதர்களாய் நோக்குங்கள்.  எங்கள் உரிமைகளை பறித்து விடாதீர்கள்.

நாம் யாரும் பாதத்தில் முள் தைத்ததற்காக காலை வெட்டி அகற்றுவதில்லை.மாறாக முள்ளை அகற்றி காயத்திற்கு மருந்திடுவோம்.அதுதான் நியாயம். அதை விடுத்து காலை அகற்றுவது எவ்வளவு முட்டாள் தனம். அப்படியிருக்க நடந்த சம்பவத்திற்காக ஹிஜாபையும் நிகாபையும் தடை செய்யக் கோருவது சரியா? இல்லை உடையை, சாக்கிட்டு குற்றமிழைத்தவனை பிடித்து தண்டனை வழங்கி அவ்வுடைக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைப்பது புத்திசாலித்தனமானதா? சிந்தித்துப் பாருங்கள் அன்பின் சொந்தங்களே!

இங்கு நாம் ஒரு விடயத்தை பதிவிட விரும்புகிறோம். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் தாக்கம் நம்மிடையே ஒற்றுமையை குலைக்கவோ, துவேஷத்தை தூண்டவோ, அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர்க்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவோ இருந்துவிடக்கூடாது. முஸ்லிம்கள் பழிவாங்குபவர்களோ, சமாதானத்தை குலைத்து நாட்டின் அமைதியை கெடுக்கும் எண்ணம் படைத்தவர்களோ அல்லர். ஆரம்பகாலத்தில் இருந்தே இத்தாய் நாட்டிற்காகவும் நாட்டின் சுதந்திரம் சுபீட்சத்திற்காகவும் அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் தம்மையே அர்ப்பணித்தவர்கள், இரக்க குணமும் தேசப்பற்றுமுடையவர்கள்.  

சமீபத்தில் நிகாபுடன் பிடிபட்டவனின் பின்னால் ஏற்கனவே ஹிஜாபையும் நிகாபையும் ஒழிக்க திட்டம் தீட்டியவர்களின் சதிகளும் இருக்கலாம். அது மாத்திரமல்ல அண்மையில் நிகாபுடன் பிடிபட்டவன் தன் காதலியை சந்திப்பதற்காக சென்றுள்ளான். தாகத்திற்காக குளிர்பானம் அருந்த சென்ற வேளை அதே கடையிலுள்ள  வாடிக்கையாளர்களால்  ஆண் என சந்தேகிக்கப்பட்டு,  இனம் காட்டப்பட்டு பொலீசாரின் விசாரணையில் சிக்கி உண்மையைக் கூறியுள்ளான்.

குற்றமிழைக்க சாதகமாக அவன் இவ் ஆடையைப் பயன்படுத்தியது என்னவோ உண்மைதான். சரியாகப்பார்த்தால் ஒரு மதத்தின் ஆடையை துஷ்பிரயோகப் படுத்தியதன் அடிப்படையில் அவனைக் கைது செய்து தண்டிக்க வேண்டும். மாறாக இதை சந்தர்ப்பமாகக் கொண்டு இன்று நிகாப் அல்லது ஹிஜாபை நம் அரசு தடை செய்ய விட்டு விட்டாலும் கூட, நாளை புதுவித திட்டங்களை அவன் வகுக்க நாமே வழிசமைத்துக் கொடுக்கின்றோம். நிச்சயமாக அவன் நாளை வேறு திட்டத்துடன் ஊடுறுவுவான். 

தவறிழைப்பவன் தன்னையும் தன் அடையாளத்தையும் காட்டிக்கொடுக்க மாட்டான். இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய உடையுடன் இஸ்லாத்தின் எதிரிகள்தான் தவறிழைக்க வாய்ப்புக்கள் அதிகம். எம் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் அதையே அவர்கள் செய்து சட்டத்தின் பிடியில் சிக்குகின்றனர். இன்று எமது ஆடையை தடைசெய்தால், நாளை ஏனைய மத ஆடைகளிலோ,சாதாரண ஆடைகளிலோ ஒருவன் வந்து தவறிழைத்தால் அதனையும் தடை செய்வீர்களா? அச்சமூகத்தவரை ஒதுக்குவீர்களா?



நிகாப் அணிபவர்கள் தமது பாதுகாப்பிற்காகவே அதனை அணிகின்றனர். 
முகம் மறைப்பது தொடர்பாக, "ஆகும், அவசியமில்லை" என்ற இருவேறு கருத்துக்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் உள்ளது. ஆனால், முகம் மறைக்க அவசியமில்லை எனும் கருத்து கூடாது என்பதற்கல்ல. எம் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காகவும், ஒழுக்கத்திற்காகவும் அணியப்படும் ஆடை அது. 

சுதந்திரமாய் நாம் வாழ நம் நாட்டின் சட்டத்திலும் இடமுண்டு என்றிருக்க நாம் ஏன் நம் உரிமைகளை இழக்க வேண்டும். இன்று ஓர் உரிமையை விட்டுக் கொடுப்பின் நாளை அனைத்து உரிமைகளையும் படிப்படியாக இழக்க வேண்டிய பரிதாப நிலை நிச்சயமாக நமக்கு ஏற்படும் என்பதை மறந்து  அலட்சியமாய் இருந்துவிடாதீர்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு நம்மால் இழைக்கப்பட்ட பாரிய வரலாற்றுத் தவறாக இது நோக்கப்பட நாம் காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதை மனதில் நிருத்தி செயற்படுங்கள்.

இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன். 
நமக்கெதிராய் பழிதீர்க்க சகுனம் பார்த்துக் காத்திருக்கும் சாமாண்ய மனிதர்கள் கூட நம் மீது பலி சுமத்த சாரம் மடிக்கும் நேரமிது. இடம் கொடுத்து விடாதீர்கள்.

மனமுண்டேல் மார்கமுண்டு

9 comments:

  1. சகோதரி, முகம் மூடுவது பற்றி மற்றவர்கள் பேசுவது ஒரு பக்கம் இருக்கட்டும் சில முஸ்லிம் பெண்களே தவறான வேலைகளுக்கு உபயோகப்படுத்துகின்றனர். இது அதிகரிக்குமாயின் அதன் பாவமும் பழியும் இந்த விடயத்தில் பிடிவாதமாக இருப்போரையும் வந்து சேரும். இஸ்லாம் பாவம் இடம்பெறும் சூழலை இல்லாமலாக்கவே முன்னுரிமை கொடுக்கின்றது. அரேபிய பெண்கள் தவறு செய்வதற்கு இந்த முகமூடி எவ்வளவு உதவுகிறது என்பதனை அரபு நாடுகளில் வீட்டுச் சாரதியாக பணிபுரிந்தவர்களினடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. பொதுப் போக்குவரத்து,வைத்தியசாலை ?

    ReplyDelete
  3. உங்களின் மனக் குமுறல் நியாயமானது,
    ஆனால் அதுவே பல துஸ்பிரயோகங்களுக்கு பயன்படுகிறது, காலத்தின் தேவை கருதி நிகாப் விடயத்தில் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு கொடுங்கள், உங்கள் அஹ்லாக்குகள் மற்றும் சுய ஒழுக்கம் தான் உங்களின் பாதுகாப்பு கேடயம்,

    ReplyDelete
  4. இன்றைய சமூகத்திற்குத் தேவையான வரவேற்கத்தக்க கருத்து. இன்றைக்கு எங்களது ஒரு மார்க்க உரிமையை விட்டுக் கொடுத்தால் எதிர்காலத்தில் எங்களது ஆர்க்கத்தையே விட்டு ஓட வேண்டிய நிலைமை வரும். எனவே தங்களது கருத்து அத்துயாவசியமானதாகும்.

    ReplyDelete
  5. Sister, If can translate this article into Sinhala and English as well..

    ReplyDelete
  6. உரிமை இல்லாதவைகளை உரிமை உரிமை என்று சொல்லிச்சொல்லியே பிரச்சினைகள் இந்த இடத்தில் வந்து நிக்குது,
    வேணாம் பிளீஸ்.....
    http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_818.html

    ReplyDelete
  7. நிச்சயமாக.ஒத்துழைப்பு அவசியம் வழங்குவது கடமை.நான் கூற வந்தவற்றை தவராகப் புரிந்து கொள்ள வேண்டாம்.நிகாப் ஜாஇஸான ஒன்று.அனால் ஹிஜாபையும் இன்று தீவிரமாகவும் கேவலமாகவும் சித்தரிப்பது நியாயமில்லையே?

    ReplyDelete
  8. அப்ப முகம் மூடாதவர்களெல்லாம் கண்ணியமற்றவர்கள்,ஒழுக்கமற்றவர்கள் என்று கூறுவது போலுள்ளதே!

    ReplyDelete
  9. சகோதரி, "உரிமை, உரிமை "என்று எதை எதிர்பார்க்கிறீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.