Header Ads



ஜம்இய்யத்துல் உலமாவுக்கு ஜனாதிபதி பாராட்டு - சிங்கள மொழி குர்ஆனை காலத்தின் தேவை என்கிறார்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சுமார் எட்டு வருடங்களாக தயாரிக்கப்பட்ட புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியிலான விளக்கவுரை நூலின் வெளியீட்டு வைபவம் 2019.04.07 ஞாயிறு அன்று பண்டாரநாயக்க சர்வதேச வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. 

அஷ்-ஷைக் காரி எம்.எச்.எம் பிர்தௌவ்ஸ் அவர்களின் அழகிய கிராத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சி அகார் முஹம்மத்  அவர்கள் நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அன்றிலிருந்து இன்று வரை சட்ட ரீதியான ஆலோசனைகளைகளையும், ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்ற ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ பாயிஸ் முஸ்தாபா அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் சிறு குறிப்புக்களுடன் கூடிய எழிய மொழி நடையில் இந்த விளக்கவுரை தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும் என குறிப்பிட்டார்.

அந்நிகழ்வினை தொடர்ந்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீட பேராசிரியர்  கௌரவ தயா அமரசேகர அவர்களின் உரை இடம் பெற்றது. இவரது உரையில் இந்த விளக்கவுரை நிச்சயமாக பிற மதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்களை பற்றிய தப்பெண்ணங்களை களைத்தெறியும் என குறிப்பிட்டதுடன் நடை முறையில் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளிற்கு புரிந்துணர்வினூடாகவே முற்றுப்புள்ள வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அவ்வுரையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழி மூலமான விளக்கவுரை  தொடர்பான வீடியோ ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்புரை இடம் பெற்றது. அவ்வுரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர்கள் தனதுரையில் உலகலாவிய ரீதியில் புனித அல்குர்ஆனிற்காக பணியாற்றிய அனைவருக்கும் தாம் பிராத்திப்பதாக குறிப்பிட்டதுடன், சுமார் எட்டு வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த சவாலான பணியை செவ்வனே செய்வதற்கு பலரும் உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அவ்வுரையுடன் வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வின் பிரதான அம்சமான முதல் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. முதல் பிரதியை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்களினால் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அந்நிகழ்வினைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களின் உரை இடம் பெற்றது. இவரது உரையில் பன்மைத்துவம் மிக்க நாடுகளில் சகவாழ்வை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிற மதத்தவர்கள் தொடர்பாக அறிந்து வைப்பது அவசியமாகும் என குறிப்பிட்டார்.

அந்நிகழ்வினை தொடர்ந்து இந்நிகழ்வின் விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காலத்திற்கு தேவையான விடயமொன்றையே செய்திருப்பதாகவும், இம்முயற்சியை தாம் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் நன்றியுரை இடம் பெற்றது. நன்றியுரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து தேசி கீதம் பாடப்பட்டது. இதனுடன் எமது நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அன்றைய நிகழ்வின் நினைவாக அல்குர்ஆன் சிங்கள மொழி விளக்கவுரை இலவசமாக வழங்கப்பட்டதுடன், சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிகழ்விற்காக நாட்டின் நாலா புறத்திலிருந்தும் உலமாக்கள், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக மாற்று மத சகோதரர்கள் என  பெரும் திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1 comment:

  1. One of good works of ACJU. I hope this translation is done perfectly

    ReplyDelete

Powered by Blogger.