April 26, 2019

இலங்கைக்கு ஒரு, நியூசிலாந்து பிரதமர் தேவை - பர்தாவை கொஞ்சம் இழுத்துப்பார்ப்போம் என முடிவெடுத்துக்கொண்டால்..

இலங்கையில் இன்று முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரமான சூழ்நிலையில் அவர்களுக்கு கட்டாயமாக வகுப்பெடுக்கவும் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று ஏறி அமர்ந்து குதறிவிடுவதற்கும் பல சக்திகள் போட்டிபோட்டுக்கொண்டு நிற்பதை காண முடிகின்றது.

இத்தகைய நிலை இலங்கையில் எந்த மூலையிலிருந்தாலும் - பயங்காரவாதத்துக்கு முதலீடு அதுதான் - அவை களைந்தெறியப்படவேண்டும். அதையும் மீறி அந்த சமூகத்தினை நடுவீதியில் இழுத்துவந்து "பாகிஸ்தானா என்று கிளறிப்பார்ப்போம் - பர்தாவை கொஞ்சம் இழுத்துப்பார்ப்போம்" - என்று முடிவெடுத்துக்கொண்டால் இலங்கை என்ற தீவு இந்து சமூத்திரத்தில் கரைந்துபோவதை எவராலும் தடுக்கமுடியாத நிலையே ஏற்படும்.

வரலாறு எமக்கு உணர்த்திவிட்டு சென்றிருக்கும் பாடம் இதுதான்.

எந்த ஒரு சமூகத்திற்குள்ளும் நெருக்கடிகள் அதிகரித்துச் செல்கின்ற போது தான் அவற்றை தீர்த்துவைப்பதற்கு வெறித்தனமான தேவைகள் எழுகின்றன. அந்த தேவைகளுக்கான கதவுகள் மூடப்படுகின்ற போது, அந்த சமூகம் மாற்று வழிகளை நாடுகிறது. எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு இடம்பெற்றதும் இதுதான்.

உள்நாட்டில் தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்ற அழுத்தம் வலுக்கட்டயமாக திணிக்கப்பட்டபோது, தமிழர்கள் ஆயுதம் தரித்தார்கள். பலஸ்தீன் வரை பயிற்சி எடுக்கச்சென்றார்கள். இந்தியா பிறகு தன் புறவீட்டில் அனைவரையும் அழைத்துவந்து, பல குழுக்களாக பிரித்து பயிற்சி கொடுத்தது. அகோரம் பல மடங்கானது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது அனைத்தும் வரலாறு.

தமிழ் மக்களது போராட்டம்கூட, இந்தியா என்றொரு நாடு அருகில் இல்லாமல் இருந்து இருந்தால், அல்லது அந்த காலகட்டத்தில் தற்போது செயல்படுவதைப் போன்ற உலகளாவிய தீவிரவாத இயக்கங்கள் இருந்திருந்தால், அந்த இயக்கங்களினால் உள்ளீர்க்கப்பட்டு வேறு விளைவுகளைக்கூட அரங்கேற்றி இருக்கலாம்.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், ஒரு சமூகத்தை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, அவர்களது கோமணத்தை கயிறு கட்டி இழுத்துவைத்துக்கொண்டு, அந்த சமூகத்திற்குள் ஆழ ஊடுருவி விட்டதொரு பிரச்சினையை தீர்க்க முடியுமா?. அவ்வாறு செய்ய முற்பட்டால், இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் தொடர் குண்டுவெடிப்புக்களினால் 253 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமாக இருக்கலாம்.சுய அரசியல் இலாபத்திற்கு பெயர் சூட்டப்பட்டு பயங்கரவாத குழுக்கள் மூலம் வல்லாதிக்க சக்திகளும் நிறைவேற்றி இருக்கலாம்.

ஆனால், அந்த இயக்கத்தினால் நஞ்சூட்டப்பட்டிருக்கும் சமூகத்தில் இனிவரும் காலத்தில் ஏற்படப்போகும் இழப்புக்கள் பயங்கரவாத இயக்கத்தினால் ஏற்பட்டதாக இருக்காது, மாறாக, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கையாளத்தவறும் பொறுப்பற்ற சக்திகள்தான் அதற்கு காரணமாக இருக்கமுடியும்.

இன்றைய நிலையில், முஸ்லிம் மக்களுக்கு உடனடியாக தேவைப்படுவது நிபந்தனையற்ற ஆதரவும் அவர்களுடன் ஒற்றுமையாக கைகோர்த்து நிற்பதற்கு தற்துணிவோடு கூடிய மாற்று சமூகங்களின் அரசியல் தலைமைகளே ஆகும். இது எவ்வாறு களத்தில் செயற்படுத்தப்படவேண்டியது என்பதை நியூஸிலாந்தில் ஏற்பட்ட இரத்தவெறியாட்டத்துக்கு பின்னர், அந்நாட்டு பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தெளிவாக கண்டிருந்தோம்.

நாடாளுமன்ற உரையின்போது சுமந்திரன் இதனை நேர்த்தியாக முன்வைத்திருந்தபோதும், சிறுபான்மை சமூகத்தின் அபரிமிதமான ஆதரவும் - அரவணைப்பும் இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இது பல்கலைக்கழக மட்டம் தொடக்கம், மத அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று அனைத்து வழியிலும் வழங்கப்படவேண்டும். தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உண்மையான நல்லிணக்கமும் இதயசுத்தியான புரிந்துணர்வும் ஏற்படவேண்டிய தருணம் இதுவே ஆகும்.

வடக்கு - கிழக்கை இணைக்கவேண்டும் என்று மாகாணசபைகளிலும் நாடாளுமன்றங்களிலும் அறிக்கைப்போர் செய்து அக்கப்போர் புரியாமல், இதயங்களால் இணைந்துகொள்வதற்கு தமிழ் சமூகம் தாங்கள் உதாரணமானவர்கள் என்பதை ஒப்புவிக்கவேண்டிய தருணம் இதுதான்..
படு முட்டாள்தனமாக இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் போய் நின்றுகொண்டு, பர்தா தடையை கொண்டுவருவதற்கு சட்டம் இயற்றவேண்டும் என்று கூப்பாடு போடுவதெல்லாம், வடித்தெடுத்த அரசியல் கேவலமன்றி வேறொன்றுமில்லை.

செத்தவீட்டில்போய் நின்றுகொண்டு சவப்பெட்டியின் "பிராண்ட்" பிழை என்று மல்லுக்கட்டுவதுபோல, சில சிங்கள அரசியல் தலைவர்கள் ஆளுமை என்ற பெயரில் தங்கள் அரைவேக்காட்டுத்தனத்தை காண்பிக்கிறார்கள்.

அப்படியானால், முஸ்லிம்களின் பக்கம் எந்த தவறில்லையா என்றால், ஆனால், இது அதுபற்றி விரிவாக தற்போது பேசுவதை விட 

காலம் அறிந்து பொது சமூகத்தில் விரிவாக உரையாடப்படவேண்டும்.

இஸ்லாம் என்ற சிந்தாந்தின் மேல் தொடுக்கப்படும் மோதல்கள் குறித்தும், முஸ்லிம்களின் அறியாமையையும், பலிக்கடாக்கள் ஆக்கப்படும் மக்கள் குறித்தும். வல்லாதிக்க உளவு அமைப்புக்களால் உருவாக்கப்படும் மத தீவிரவாத அமைப்புக்கள் குறித்தும் உரையாற்றபபட வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்திற்குள் ஆழமாக காணப்பட்ட பல்வேறு நெருக்கடிகளை பயன்படுத்தி, மதவாதத்தின் துணைகொண்டு உள்ளே நுழைந்துகொண்ட பல விடயங்களை அந்த சமூகம் பொது அறிவுத்தளத்தில் வைத்து என்றும் உரையாடவில்லை. அது தான் தற்போது விமர்சனத்திற்கு வழிவிடுகின்றது.

#Penakkal

2 கருத்துரைகள்:

I Like your article. But they dont talk about Fartha and Hijab. they talking about Burga which cover including eyes. That no need in Srilanka and that was not our culture either.

Post a Comment