Header Ads



"சவால்களைக் கண்டு அஞ்சவோ, நம்பிக்கை இழக்கவோ வேண்டிய அவசியமில்லை"

வாழ்க்கையில் தனி மனிதர்களாக, குடும்பங்களாக, சமூகங்களாக நாங்கள் இன்னோரன்ன சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம், சவால்ககளுக்கு முறையாக முகம் கொடுப்பது தான் வாழ்க்கை.

வெளியிலிருந்து விடுக்கப்படும் சவால்கள் கண்டு, நிலை குழைந்து போவது அல்லது அஞ்சுவது, நம்பிக்கை இழந்து விடுவது உண்மை விசுவாசிகள் பண்பாக இருக்க முடியாது.

சவால்களைக் கண்டு அஞ்சவோ நம்பிக்கை இழக்கவோ வேண்டிய அவசியமில்லை, மாறாக அவற்றிற்கு பொறுப்புணர்வுடன் நாம் முகம் கொடுக்க வேண்டும்.

நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எமது உறவுகள் குறித்த கரிசனை போன்று எதிர்கால சந்ததியினர் குறித்தும் நாம் அதிகபட்ச அக்கறை கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலக நாடுகளின் அமைதி சமாதனத்திற்கு எதிரான தீய சக்திகளாக காட்டுவதற்கான பரப்புரைகள் “இஸ்லாமோபோபியா” எனும் பாரிய பில்லியன் டாலர் வேலைத் திட்டத்தினூடாக இஸ்லாத்தின் எதிரிகளால் சர்வதேச அரங்கில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

எமது அழகிய தேசத்தின் சமாதான சகவாழ்வை இலக்கு வைத்து இன்று கூலிப் படைகள் களமிறக்கப் பட்டுள்ளனர், சிலர் அறிந்தும், பலர் அறியாமையினாலும் அந்த சர்வதேச சதி வலைப்பின்னலில் சிக்கியுள்ளனர்.

மேற்படி சதி வலைகளில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதனை விடவும் பெரும்பான்மை சமூகங்களை பாதுகாக்கின்ற மிகப் பெரும் பணி எம்மீது சுமத்தப் பட்டுள்ளது.

இன்றைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரே கவலை அல்லது அச்சம், சவால்களுக்கு முன்னால் நாங்கள் வெவ்வேறு அணிகளாக பிரிந்திருப்பதும், உள்வீட்டில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் தான்.

எமது அரசியல் தலைமைகள் என்ன செய்கிறார்கள் ஏனைய சிவில், சன்மார்கத் தலைமைகள் என்ன செய்கிறார்கள் கூட்டாக என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்கள் இன்னும் புதிர்களாகவே இருக்கின்றது.

ஊர் மட்டங்களில் கூட நாம் நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்று கூடிப் பேசுகின்ற மஷூரா செய்கின்ற ஒழுங்குகளையாவது செய்யாது ஒருவகை ஸ்தம்பித நிலையில் இருக்கின்றோம்.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் தமது அறிவு, பெற்ற பயிற்சிகள், சமூக கரிசனை, தலைமைத்துவ பண்புகள், கட்டுக் கோப்பு என்பவற்றை பிரயோகித்து அடிமட்ட (ஊர்) தலைமைத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொழும்பில் உள்ள தலைமைகள் அல்லது மஸ்ஜித் பரிபாலனங்கள் தான் இவற்றை வந்து செய்து தர வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது, ஊரில் உள்ள அமைப்புக்கள், கழகங்கள், புத்திஜீவிகள் ஒன்றாக அமர்ந்து பேசும் நிலை இன்னும் வரவில்லை.

தொழுவதற்கு ஒன்று கூடும் நாம், நோன்பு காலங்களை ஹயாத்தக்க ஒன்று கூடும் நாம், சகாத் சதகாவை சேர்த்து பகிர்ந்தளிக்க ஒன்று கூடும் நாம், ஜும்மாவிற்கு ஒன்று கூடும் நாம் எமது இருப்பு பாதுகாப்பு குறித்த அடிப்படை அம்சத்திற்காக ஒன்று கூடுவதை ஏன் பர்ளு ஐன் ஆக பார்க்காது வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஐக்கியமும், ஒழுங்கும், கட்டுக்கோப்பும், கூட்டுப் பொறுப்பும் இல்லாத ஒரு சமூகம் ஏனைய சமூகங்களை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. வெளியில் இருந்து வரும் சவால்களை விடவும் உள் வீட்டில் இருந்து வரும் சவால்களே எமக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

குறிப்பு: அதிகமாக பகிர்வதோடு ஊரில் உரிய தரப்புக்களுடன் ஒத்துழைத்து இதனை சாத்தியப்படுத்த பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக ஒத்துழையுங்கள்.

4 comments:

  1. challenges for whom...... without proper guidance of their parent youths are growing up on their own. without the knowledge of the parents or family they connected to extremism . without knowing to the society they blast themselves. we have created challenges without knowing to the country. Still we have time to correct before the destructions.

    ReplyDelete
  2. Please remove above photo.it is not suitable at this moment.

    ReplyDelete
  3. இங்கு சொல்லப்ப்டட விடயங்களை விளங்கிக் கொள்ளக் கூடியவர்கள் முஸ்லீம் சமூகத்தில் எத்தனை விகிதம் என்பதுதான் கேள்விக்குறி? பொன்னாசை, பொண்ணாசை கொண்ட சமூகமாக மாறி உள்ளோம் என்பதுதான் எனது கணிப்பீடு. நாட்டில்கொண்டுவரப்படும் கடுமையான சட்டங்கள் மூலம் தான் முஸ்லீங்களை மட்டுமல்ல ஏனைய சமூகங்களையும் ஒழுங்குபடுத்த முடியும். தமது சமயத்தையும் கலாசாரத்தையும் வீடுகளில் பூட்டி வைத்து விட்டு பொதுமனிசனாக வீதிக்கு வர வேண்டும்.

    ReplyDelete
  4. சிறந்த கருத்து ஆனாலும் நாட்டில் உள்ள அணைத்து முஸ்லிம்களும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் மற்றும் அத்தலைமைத்துவதினால் வழங்கப்படும் திட்டத்தின் அடிப்படையில் அணைத்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைகளும் தத்தமது ஊர்களில் அந்த திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

    இவற்றை செயற்படுத்துவதற்கு எமக்கு இருக்கும் ஒரே தெரிவு ஜம்மியத்துல் உலமா மூலமாக நாட்டில் உள்ள அணைத்து பள்ளிவாயல்களும் மற்றும் ஊர்களும் எவ்வாறு இயங்க வேண்டும் என்னும் ஒரு சிறந்த திட்டம் ஜம்மியத்துல் உலமாவினால் தயாரிக்கப்பட்டு நாட்டின் அனைத்து பள்ளிவாயல்கள் மூலமாக அனைத்து ஊர்களிலும் செயற்படுத்தப்பட வேண்டும்.

    மாறாக அவரவர் விரும்பிய படி செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளும்படி கூறினால் அதன் மூலமாக எமது சமுதாயத்துக்கு இன்னும் பல சிக்கல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளது.

    ஆகையால் இவ்விக்கட்டான சூழ்நிலையில் எமது சமுதாயம் நாடளாவிய ரீதியில் எவ்வாறு செயட்பட வேண்டும் என்பது விடயமாக மிகச்சிறப்பான முறையில் உலமாக்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள், மற்றும் பல புத்திஜீவிகளையும் உள்வாங்கியதாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்களால் ஒரு சிறந்த திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.
    மற்றும் அத்திட்டம் அணைத்து பள்ளிவாயல்களினாலும் அணைத்து ஊர்களிலும் செயற்படுத்தப்படுவதை ஜம்மியத்துல் உலமாவினால் அமைக்கப்படும் இன்னும் ஒரு குழுவினரால் கண்காணிப்பு மற்றும் ஆய்வு செய்யப்படல் வேண்டும்.

    இதை விடுத்து அவரவர் ஊர்களில் கூடி ஆராய்ந்து செயற்படும் படி கூறியதால்தான் எமது சமூகத்துக்கு நாடளாவிய ரீதியில் ஒரு தலைமைத்துவம் அற்றவர்களாகவும் அவரவர் விரும்பியபடி தமது செயப்பாடுகளை அமைத்துக்கொண்டு முழு சமுதாயத்தையும் குற்றவாளிகளாக ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை நாம் இப்போதாவது நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மேலும் ஜம்மியத்துல் உலமாவினால் தயாரிக்கப்படும் திட்டத்தை ஏற்று செயற்பட மறுக்கும் தனிநபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரையோ அடையாளங்காணும் பட்ஷத்தில் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் நாம் இன்னுமொரு திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

    மேலும் தயாரிக்கப்படும் திட்டம் வெறுமனே தற்போதைய சூழ்நிலையை மாத்திரம் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படாமல் எக்காலத்திலும் எமது சமுதாயம் எவ்வாறு தங்களது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக துல்லியமாகவும் சிறந்த வழிகாட்டுதல்களுடன் திட்டமிடப்படல் வேண்டும். மற்றும் இத்திட்டம் தொடர்ச்சியாக சிறந்த பொறிமுறைகளை உருவாக்குவதன் ஊடாக செயற்படுத்தப்படல் வேண்டும். மற்றும் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் திட்டம் மறுசீரமைக்கப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.