Header Ads



தமிழர்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று, முஸ்லிம்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்

83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று -25- ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன்

அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்..

இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர்.

எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா? அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது.

அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா? அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா? யாரும் கைது செய்யப்பட்டார்களா? கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா? அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா? இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது.

ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

2 comments:

Powered by Blogger.