Header Ads



தாக்குதல்தாரிகளை கைதுசெய்ய, முஸ்லிம் அமைப்புகள் உதவ வேண்டும்

நாட்டில் இன்னமும் தலைமறைவாகி இருப்பதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரிகளை கைது செய்ய ஒத்துழைக்குமாறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

நாட்டு மக்கள் அனைவரதும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.  

மேல்மாகாண ஆளுநர் எம். ஆசாத்சாலி தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, உதவிச் செயலாளர் மௌலவி தாசீம், அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தலைவர் எம். என். எம். நபீல், இலங்கை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் மற்றும் எஸ். ஏ. அஸ்கர் கான், எம். பீ. எம். ரிஸ்வி உட்பட மேமன் சமூகம், மலாய் சமூகங்களின் சார்பிலும் முக்கிய பிரதிநிதிகள் கொண்டகுழு நேற்றுக் காலை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.   நாட்டில் அமைதியை உத்தரவாதப்படுத்துவதற்குரிய காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இங்கு தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் நாட்டை உலுக்கிய இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இன்னமும் மக்களின் மனங்களிலிருந்து மறையவில்லை எனவும் மக்கள் அச்சம் கலந்த சூழ்நிலையிலேயே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  

இந்த பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இன்னும் பலர் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்களைக் கண்டு பிடித்து கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.  

(எம். ஏ. எம். நிலாம்) 

No comments

Powered by Blogger.