Header Ads



மது, போதைவஸ்துப் பாவனையிலிருந்து சமூகத்தையும், தேசத்தையும் காப்போம்...!

- அஷ்ஷைக் S.A. அப்துல் ஹலீம் ஷர்க்கி - 

      " ஈமான் கொண்ட இறைவிசுவாசிகளே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுவதும், குறிகேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க  செயல்களிலுள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடைவீர்கள். 
        நிச்சயமாக!  ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானம், சூதாட்டம் போன்றவற்றின் மூலம் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டிர்களா? என அல்லாஹ் எச்சரிக்கின்றான். " [ அல்குர்ஆன் அல் மாஇதா 91-92] 

           நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூன்று மனிதர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள்; செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன், பெற்றோரைப் புண்படுத்துபவன், குடிகாரன் (போதைவஸ்த்துப் பாவனையாளன்) " எனக் கூறினார்கள். [ அறிவிப்பாளர் அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : நஸாஈ 5672 ]

         மேலும், மது ( போதைவஸ்த்துக்கள் அனைத்தும் ) சபிக்கப்பட்டது. அதை அருந்துபவர், அதைப் பரிமாறுபவர், அதை விற்பவர், அதை வாங்குபவர், அதைச் சுமப்பவர் ஆகிய அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்" எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். [ ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் 5716 ]

          மேலும், யார் மது அருந்துவாரோ அவரின் நாற்பது நாள் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவருக்கு நரகவாசிகளின் சீழ் நிரம்பிய ஆற்றிலிருந்து புகட்டப்படும்" எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். [அறிவிப்பாளர் : அப்துல்லா இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு  ஆதாரம் : அத்திர்மிதி 1862 ]

          இறுதிக் காலத்தில் மதுவுக்கு வேறு பெயர்கள் வைத்து அதை அருந்துவார்கள். எனது சமூகத்தில் ஒரு சாரார் மதுபானத்திற்கு வேறு பெயர் சூட்டி அதனை ஹலாலாக்கி  அருந்துவார்கள். போதை தரும் அனைத்தும் மதுவாகும். மது அனைத்தும் ஹராமாகும். என நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். [ஆதாரம் : இப்னு மாஜஹ் 3390 ]
          மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்களும், நபிகளாரின் பொன்மொழிகளும் மதுவையும் அது சார்ந்த போதை தருக்கூடிய அனைத்தையும் தடை செய்துள்ளது.
        'ஆரோக்கியம்' என்பது அல்லாஹ்  நமக்குக் கொடுத்த அருட் கொடை ஆகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புக்களே ஏற்படுகின்றன.

         எமது நாகரிகம் வளர்ச்சி    பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் தொன்று தொட்டு விளங்கி வரும் சில தீய பழக்கங்கள் தொடர்ந்தும் நலிவடையாமல் வலிமை பெற்றுச் செல்கின்றது. மது, போதைவஸ்து மற்றும் சிகரெட் பாவனை இன்று ஆறு தொடக்கம் அறுபது வரை வேரூன்றி நிற்பது கவலைக்குரிய விடயமே!                    ஊட்டச் சத்துக்களோ, விற்றமின்களோ எதுவுமற்ற பானத்தை  உற்சாகம் தரும் பானமாக களைப்பையும், உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக, அற்புத சக்தியாக எண்ணி எம்மில் பலர் மதுவில் மூழ்கி  இருக்கிறார்கள். இன்று சிறியவர், பெரியவர் வேறுபாடின்றி பெரும்பாலானோர் தமது ஆரோக்கியமான வாழ்க்கையையும், இன்பமான, மகிழ்ச்சியான குடும்பங்களையும் குடும்ப கட்டுமானங்களையும் தொலைத்து கடனாளியாகவும், நோயாளியாகவும் அலைந்து திரிகின்றனர்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டே உள்ளனர். சாராயம் மற்றும் போதை மருந்துகள் உட்கொள்வதால் போதை மயக்கத்தில் மூழ்கி  அவர்களுடைய விழிப்புணர்வை தொலைப்பது மட்டுமன்றி உடல் நலத்தை கெடுத்து அவர்களை அழித்து விடுகிறது. போதைப் பொருள் பாவனையால் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டே செல்கின்றனர். மது, அபின், கேரள கஞ்சா, சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, ஹஸிஸ், கசிப்பு, பியர், மர்ஜுவானா முதலிய போதைவஸ்து   உச்சி முதல் உள்ளங்கால் வரை உடற் தொகுதிகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றது.  இதனைப் பாவிப்பதனால் தற்காலிக மற்றும் நிரந்தர பாதிப்புக்கள் ஏற்படும்.
      இன்றைய இளைஞர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள். இதனால் குடும்பத்தில் வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், நிம்மதியின்மை, பொருளாதார வீழ்ச்சி மற்றும், கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சனைகள், விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.
இப் பழக்கவழக்கங்கள்  விளம்பரங்கள், தீய நண்பர்கள், சினிமாப் படங்கள், பிரபலங்களின் தவறான எடுத்துக்காட்டு போன்றவைகளாகும்.

       மேலும், இந்நிலையை உதாசீனம் செய்தல் உயிரை கூட மாய்த்து விடலாம்.  கல்வி கற்க வேண்டிய வயதில்,  சாதிக்க வேண்டிய வயதில் இளைஞர்கள் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இளைஞர்கள் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள் இவ்வபோதை குடித்து சீரழிவதால் அவர்களுடைய குடும்பமும் நிம்மதி, சந்தோசம் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றன. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகுவதால் பெரும்பாலானோர்கள் சில சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். குடிப்பதற்கு பணம் இல்லாவிட்டால் கடன் வாங்குதல், களவெடுத்தல், வீட்டில் உள்ள பொருட்களை விற்று குடித்தல் இவ்வாறான செயற்பாடுகளால் குடும்பங்களுக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன.

         உலகளாவிய ரீதியில் பரவி வரும் போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987ம் ஆண்டு ஜூன்  26ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப்  பொருள் ஒழிப்பு மற்றும், சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அண்மைக் காலமாக 
போதைப் பொருள் பாவனையிலும், கடத்தலிலும் இலங்கை முதலாம் இடமாக உலகில் திகழுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இவ்வாறான போதைவஸ்துக்களின் ஆதிக்கம் ஒரு அச்சுறுத்தலாகவும், சாபக் கேடாகவும் மாறிவிட்டது. 

         1980 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஹெரோயின் எனும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். இது சுகாதார அமைச்சின் அறிக்கை. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வட,  கிழக்கு  மாகாணங்கள்  போதைப் பொருள் பாவனையால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றது. இதன் பாவனையால் காச நோய், இருதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற உயிராபத்துக்களும் ஏற்படும். 

          ஆகவே,  எமது சமூகத்தை சீரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கு 'போதையற்ற வாழ்க்கையின் மகிமை'யை அறிந்து, எமது சமுதாயத்தை  'இளைஞர்கள்' வளர்ச்சிப்  பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். ஒரு தனி மனிதனின் சீர் திருத்தம் ஒரு குடும்த்தின் சீர் திருத்தம், ஒரு குடும்பத்தின் சீர் திருத்தம் ஒரு ஊரின் சீர் திருத்தம்;          எனவே, போதைவஸ்த்துக்களற்ற  முன்மாதிரி ஊராக நாம் நமது ஊரைப் பாதுகாப்போம்.

       பரிசுத்தமான இஸ்லாம் அனைத்து கட்டங்களிலும் சுத்தத்தையே வலியுறுத்துகிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன என்ற சமூக அக்கறை இல்லாமல் ஒதுங்கிவிடாமல்;  "உங்களில் யார் ஒருவர்  வெறுக்கத்தக்க, ஒரு பாவத்தைச் செய்வதைக் கண்டால் கையால் தடுக்கவும், வாயால் சொல்லித் தடுக்கவும், ஏனெனில் ; நாம் அனைவரும்  பொறுப்பாளர்கள். இவை பற்றி நாளை மறுமையில் நாம் அனைவரும் விசாரிக்கப்படுவோம்" எனும் நபிகளாரின் கூற்றை  மனதில் பதியவைத்துச் செயற்படுவோம்.!!!!!!!!!

1 comment:

  1. First of all,  all Muslim villages must be turned into drugs free and Halal villages just like some towns have proven as example.

    Islamic values are for entire humanities. Therefore, the rest may motivate and consider to implement nationwide for everyone's benefit.

    How it is use this 'June 26 - International day against drug abuse and illicit  trafficking' in all Muslim areas first, to stop all harmfuls as Ashshaikh S.A. Abdul Haleem Sharkki outlined here, under the supervision of ACJU?

    ReplyDelete

Powered by Blogger.