March 23, 2019

இஸ்லாத்திற்கு மேலதிக முகவரியை, தேடிகொடுத்த சம்பவம்

(அஷ்ஷெய்க் ஷfபீக் ஸுபைர்) 

இறை நிராகரிப்பாளன் இஸ்லாத்திற்கு மேலதிக முகவரியை தேடி கொடுத்து விட்டான். * வெறும் 1% முஸ்லிம்களை கொண்டுள்ள நியூஸிலாந்து ஊடகங்கள் இஸ்லாத்தின் தூதை சுமந்தவைகளாக 

நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் ஒரு மனித நேயமுள்ள சிறந்த பெண்  என்பது கடந்த வார க்ரிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் தாக்குதலின் பின்பு அவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளில் இருந்து புலப்பட்டு வருகின்றது. 

கடந்த வாரம் இடம்பெற்ற  துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்த 50 முஸ்லிம் தியாகிகளையும் நினைவு கூறும் முகமாக குறித்த க்ரிஸ்சேர்ச் பள்ளி வாசலில் இன்று (22/03/2019) இடம் பெறும் வெள்ளிக் கிழமை அதானை அந்நாட்டு அரச வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன்  வேண்டிக் கொண்டுள்ளதாக BBC உள்ளிட்ட பல ஆங்கில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை ஊர்ஜித படுத்திக் கொள்ள கிடைத்தது. BBC உள்ளிட்ட இரு ஆங்கில இணைய தளங்களின் இணைப்புக்கள் (Links) கீழே தரப்பட்டுள்ளன. 

வெள்ளி 22.03.2019 ஜும்மா அதான் அந்நாட்டு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒளிபரப்ப படுவதுடன் குறித்த 50 தியாகிகளையும் நினைவு கூறும் முகமாக வெள்ளிக் கிழமை அங்கு  02 நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றும் இடம் பெறுவதாக அந் நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். 

குறித்த பயங்கரவாத தாக்குதல் முழு உலகையும் அதிர்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில் அதன் மூலம் உலகளவில்  முஸ்லிம்கள் அதிகம் கவலை அடைந்தது உண்மையே.  

ஷஹீதானவர்களுக்கு அள்ளாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக. அவர்களது பிரிவால் கவலையுற்றிருக்கும் குடும்பங்களுக்கு பொறுமையையும் சகிப்பையும் வழங்குவானாக. 

இருந்த போதும் குறித்த படுகொலைத்  தாக்குதல் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு புது முகவரியையும் வெற்றியையும் தேடிக் கொடுத்து விட்டது என்பதே உண்மை. 

நியுஸிலாந்து என்பது கலாச்சார சீரழிவுகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாகும் என்பது உண்மையே. இருந்த  போதும் பாதுகாப்பு, அமைதி எனும் கண்ணோட்டத்தில் நோக்குகின்ற போது ஒப்பீட்டளவில் உலகின் மிகவும் அமைதியான, வன்முறைகள் மிகவும் குறைந்த  ஒரு நாடாகும். 

2018 கணக்கெடுப்பின் படி அது 4.8 மில்லியன் (48 லட்சம்)  மக்கள் வசிக்கும் சிறிய சனத்தொகை கொண்ட ஒரு நாடாகும். அந்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 47 ஆயிரம் ஆகும் (அது அந் நாட்டு சனத்தொகையில் சுமார் 1 விகிதம் மட்டுமே)    இந்திய உப கண்டத்தில் இருந்தும் மத்திய கிழக்கு உள்ளிட்ட மேலும் சில  நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே  நியூசிலாந்தில் வசிக்கும் மிகப் பெரும்பாலான முஸ்லிங்களாவர். 

குறித்த கடந்த வார படுகொலையின்  பின்பு அந் நாட்டில் இடம்பெற்று வரும்  கீழ் காணும் நிகழ்வுகள் உலக மக்கள்  (குறிப்பாக நியூஸிலாந்து மக்கள்)  இஸ்லாம் பற்றி தேடிப்பார்ப்பதற்கும் இஸ்லாத்தினுள் நுழைவதற்குமான வாயிலை திறந்து விட்டது.   

(01) மதம், நிறம், சாதி  என அனைத்தையும் தாண்டிய மனித நேயம் ஒன்று கடந்த 04, 05 தினங்களாக குறித்த க்ரிஸ்சேர்ச் பள்ளிவாசல் எல்லையிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இடம் பெற்றிருந்தது. முஸ்லிங்களை அரவணைத்து மரியாதை செய்யும் விதத்தில்  முஸ்லிம் பெண்கள் போன்று தலையை மறைத்து அந் நாட்டு பிரதமர் ஜெஸிந்தா ஆடை அணிந்து அங்கு வந்து தனது முழு அனுதாபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். அதே போன்று அந் நாட்டின் பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஆயிரகணக்கான மக்கள் அங்கு குவிந்து தமது அனுதாபங்களை தெரிவித்து தமது கலாச்சார முறை பேனி மலர் கொத்துகளை வைத்து சென்றனர். இவை உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த நிகழ்வுகளாகும்.  

(02) கடந்த செவ்வாய்க்கிழமை   ஒன்று கூடிய நியூசிலாந்து பாராளுமன்ற  அவையானது படுகொலை செய்யப்பட்ட குறித்த 50 முஸ்லிம் தியாகிகளையும் நினைவு கூறும் வகையில் 
 குர்ஆன் ஆயத்துக்கள் ஓதப்பட்டு மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பின்பே தனது கடமைகளை துவங்கியது.     

(03) அன்றைய பாராளுமன்ற ஒன்று கூடலின் ஆரம்பத்தில் தனது உரையை நிகழ்த்திய  அந் நாட்டு பிரதமர் ஸலாம் கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஒரு உரையை நிகழ்த்தி இருந்தார். 

(04) துப்பாக்கி தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட  50 முஸ்லிம் தியாகிகளையும் நினைவு கூறும் முகமாக குறித்த க்ரிஸ்சேர்ச் பள்ளி வாசலில் இன்று (22/03/2019) இடம் பெறும் வெள்ளிக் கிழமை அதானை அந்நாட்டு அரச வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன்  வேண்டிக் கொண்டுள்ளார். 

(05) குறித்த ஷஹீத்கள் 50 பேரையும்  நினைவு கூறும் முகமாக இன்று வெள்ளிக் கிழமை அங்கு  02 நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்றும் இடம் பெறுவதாக அந் நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

(06) முஸ்லிங்களுக்கு ஆறுதல் கொடுக்கின்ற, அரபியில் ஸலாம் எனும் வாசகத்தை சுமந்ததாக, நியுஸிலாந்து முஸ்லிங்களின் அழகிய பண்புகள் குறித்த விடையங்களை சுற்றிக்காட்டியதாகவே கடந்த சில தினங்களாக அந் நாட்டு அச்சு ஊடகங்கள் செய்திகளை பிரசுரித்து வருகின்றன. 

இவை அனைத்தும் உலகளவில் (குறிப்பாக நியூஸிலாந்தில்)  வசிக்கும் மக்கள் இஸ்லாம் பற்றி தேடிப்பார்க்கவும், அதன் மூலம் அங்கு இஸ்லாம் வேகமாக பரவவும் வழி வகை செய்து விட்டன. 

இவற்றிற்கு மேலதிகமாக அந் நாட்டில் வாழும் சிறு பான்மை சமூகங்களிற்கான (குறிப்பாக அங்கு வசிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கான)   பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாக பிரதமர் ஜெஸிந்தா அறிவிப்பு செய்துள்ளார். 

50 முஸ்லிங்களை கொன்று நியூஸிலாந்தில் இஸ்லாத்தை அழிக்க குறித்த கொலைகார பயங்கரவாதியும் அவனுடன் வெளிப்படையாகவும்,  மறைமுகமாகவும் செயற்பட்டவர்களும் திட்டம் தீட்டி இருக்கலாம். எனினும் அவர்கள் புரிந்த நாசகாரச் செயலை வைத்தே அள்ளாஹ் உலகளவில் இஸ்லாத்திற்கு மேலதிக முகவரியை தேடிக் கொடுத்து விட்டான். 

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ 
(سورة الصف - ٨) 

அள்ளாஹ்வின் ஒளியை அவர்கள் வாயால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் அள்ளாஹ் தனது ஒளியை பூர்த்தி செய்தே ஆகுவான்
(ஸூரா அஸ் ஸfப்) 

இணைப்புக்கள்: 
https://www.msn.com/en-au/news/world/nz-broadcasts-islamic-call-to-prayer/ar-BBV4Kns

https://ilmfeed.com/new-zealand-will-broadcast-call-prayer-tv-radio-friday/

0 கருத்துரைகள்:

Post a comment