Header Ads



மாணவ சமூகத்தில் இருந்து, ஒர் உளக்குமுறல்

என் மதிப்பு மிக்க
ஆசிரியர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

அன்பார்ந்த ஆசிரியர்களே! அல்லாஹ்வின் அருளாலும் உங்கள் அயராத உழைப்பாலும் நான் வாழ்க்கையின் பல படிகளைக்கடந்து முன்னேறி இருக்கிறேன் . 
அதற்காக உங்களை மனதார பாராட்டுகிறேன்.

இருந்தாலும்,,,

"தமிழ் பாட ஆசிரியர்களே..!!"

என்னுடன் பக்கத்திலேயே இருந்த என் நண்பன் பதினொரு வருடம் தாய் மொழியான தமிழ் மொழிப் பாடசாலையிலேயே படித்தும் , எழுதவும் வாசிக்கவும் தெரியாமல் இன்னும் சமூகத்தில் அவதிப்படுகிறான் என்றால்... அவனுடைய இந் நிலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். 
எழுதவும் வாசிக்கவும் தெரியாத உம்மி சமூகம் நம் சமூகம் என்பதில் பெரு பெறுமை காணப்போகிறீர்களா?
ஆறு மாதத்தில் ஒரு மொழியை படித்து விடலாம். ஒரு வருடத்தில் அம் மொழியில் திறமை பெற்றுவிடலாம். ஆனால் பதினொரு வருடத்தில் வாசிக்கவும் எழுதவும் உங்களால் படிப்பிக்கமுடியவில்லையெனில் நீங்கள் ஏன் இத்தொழிலைத் தொடர்கிறீர்கள்? இன்றே சத்தியம் செய்து கொள்ளுங்கள் "பதினொராம் வருடத்தில் எந்த ஒரு மாணவனும் எழுதவோ வாசிக்கவோ தெரியாமல் எம்பாடசாலையில் இருந்து வெளியேற மாட்டான்!!" என.....

"கணிதப்பாட ஆசிரியர்களே..!!"

என் சகோதரன் ஒருவனிடம் பதினைந்தும் இருபத்தைந்தும் எவ்வளவு என்று கேட்டேன்? திரு திரு என முழித்தான். உடனே பதினைந்து ரூபாவும் இருபத்தைந்து ரூபாவும் எவ்வளவு என்று கேட்டேன். சட்டென சரியாய் பதில் சொன்னான். இது சத்தியமாய் நடந்த ஒர் உண்மை. 
ஆக உங்களால் முடியாத ஒன்றை ஒரு சில்லறைக்கடைக் காரர் செய்து விட்டார். 
கணிதம் படிப்பவர்கள் எல்லோரையும் பொறியியலாளர்களாகவோ , அல்லது கணித மேதைகளாககவோ ஆக்க வேண்டிய பொருப்பு உங்களுக்கு இல்லை, வாழ்கையின் தேவைக்கு வேண்டியதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். பொருளியலாளர் ஆவதும் மேதைகளாவதும் அவரவர் பொருப்பு.

"விஞ்ஞானப்பாட ஆசிரியர்களே...!!"

மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்ற பொய்யை எனக்கும் சொல்லித் தந்தீர்கள். அதே பொய்யை என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்கின்றீர்கள். ஏன் இந்த அநியாயம்!? இப்படியான இன்னும் எத்தனை எத்தனை பொய்கள் விஞ்ஞானம் என்ற பெயரில் புதைந்துள்ளன என எப்போதாவது தேடிப்பார்தீர்களா?
விஞ்ஞானத்தை படித்த நீங்கள் குர்ஆனையும் சற்றுப்படித்துப் பாருங்கள் . 
குர்ஆனின் கருத்து என்று ஒன்றைச் சொல்லும் போது அதனை உடனே ஏற்றுக் கொள்ளாத சமூகம் விஞ்ஞானத்தின் முடிவு என்று சொல்லும் போது மட்டும் மறுபேச்சுக்கு இடமின்றி ஏற்றுக் கொள்கின்றது ஏன்? நேரகாலத்துடன் படுக்கச் செல்வது நபிவழி என்று பலமுறை சொல்லி யும் படுக்கைக்குச் செல்லாத என் சின்ன மகள் , ஆசிரியர் மெலடோன் எனும் ஹோமோன் நேரகாலத்துடன் தூங்குவதாலேயே கிடைக்கும் என்று ஒரு முறை சொன்னதில் இருந்து இரவு சாப்பாடில்லாவிட்டாலும் ஹோமோன் வேண்டும் என்று படுக்கைக்குச் சென்று விடுகிறாள். நான் விஞ்ஞான பூர்வமாக சொல்லவில்லை என்கிறீர்களா? 
இப்ராஹிம் (அலை) அவர்களிடம் பிஞ்சு மகனை அறுத்து பலி யிடச்சொன்ன போது தந்தையோ மகனோ , விஞ்ஞான முடிவு வரும் வரையில் காத்திருக்கவில்லை. இறைவனின் கட்டளை என்றால் அடிபணிய அறிவோ ஆராய்ச்சியோ அவசியமில்லை என்பதை கற்றுக்கொடுங்கள். ஆங்கிலேயர்கள் குர்ஆனின் ஆராய்ச்சிகளை இன்னும் முழுமையாக ஆய்வு செய்து முடிக்கவில்லை , நாங்கள் அவற்றைப் பற்றி இன்னும் சிந்திக்கவும் இல்லை என்ற உண்மையை அவர்களிடம் ஒப்புக்கொள்ளுங்கள்.

"இஸ்லாம் பாட ஆசிரியர்களே...!!"

தயவு செய்து இஸ்லாம் பாடப்புத்தகத்தை பிரதி பண்ணல் செய்ய வைத்து, பாடத்தைப் படித்துக் கொடுத்ததாய் கையெழுத்து இடாதீர்கள் . முதலாம் ஆண்டு தொடக்கம் இஸ்லாத்தை உரிய முறையில் சொல்லித்தந்திருந்தால் குர்ஆனின் மனிதர்களாக நாம் மாறி இருப்போம். சஹாபாக்களின் வாரிசுகளாக வளர்ந்திருப்போம். சினிமா ஹீரோக்களுக்கும் . ஹீரோயினுக்கும் அடிமைகளாகி இருக்கமாட்டோம்

"ஆங்கிலப்பாட ஆசிரியர்களே...!!"

ஆங்கிலம் பேசுபவர்கள் தம்மை அமெரிக்காவில் பிறந்த ஆங்கிலேயர்களாவே தம்மை நினைத்துக் கொள்கின்றனர்.
ஆங்கிலம் படிப்பதற்கே, ஆங்கிலேயராக வாழ்வதற்கல்ல "to learn English, not to be an English" என்ற வார்தையையும் தவறாது கற்றுக்கொடுங்கள். 
ஆங்கிலத்தினூடாகவும் மாணவர்களின் மனதிற்குள் மார்க்கத்தின் வித்தை இடலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

"ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களே..!!"
(Include Nursary Teachers)

மேல் உள்ள ஒவ்வொருவரினதும், வேலைகள் மொத்தமாய் உங்கள் கரங்களிலேயே இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். "நீங்கள் உங்கள் வேலைகளை சரியாக செய்யாததால், பொருப்பற்றவர்களாக நடந்து கொண்டதால்தான் நாங்கள் சிரமப்படுகிறோம்" என , உங்களை அவர்கள் சாபமிடும் வார்த்தைகள், இன்னும் உங்கள் காதுகளை எட்டவில்லையா ?

மதிப்பு மிக்க,,
"அதிபர்களே..!!!"

வாசிகசாலைகளில் சில புத்தகங்களை அவை பெறுமதியானவை என பூட்டுப் போட்டு பூட்டி வைத்துள்ளீர்கள். விஞ்ஞான ஆய்வு கூடங்களிலும் கூட இவ்வாறே செய்துள்ளீர்கள். இதனை யாரிடம் சொல்வது?

மிகவும் சிரமப்பட்டு கிழமையில் ஒரே ஒரு நாளில் ஒரே ஒரு பாட வேளையை ஒவ்வொரு வகுப்பிற்குமான வாசிப்பு வேளையாக ஒதுக்கி உள்ளீர்கள். அதனையும் கூட சில வேலை போட்டி நிகழ்ச்சிகளுக்காக திருடிவிடுகிறீர்கள். 
ஆசிரியர்களின் கையொப்பத்தில் கவனமாய் இருக்கும் நீங்கள், மாணவர்களின் தலை எழுத்தைப்பற்றி சிந்திப்பதில்லை. 

பாடப்புத்தகங்களை பூர்த்தி செய்வதில் குறிப்பாய் இருக்கும் நீங்கள் , 
தற்காப்பு முறைகளையும்,
தனது வேலைகளை தாமே செய்து கொள்ளும் பழக்கங்களையும், சமயோசிதமாக நடக்கவும் , சுய நலமின்றி அடுத்தவர்களுக்கு உதவவும் , பெற்றோரையும் மற்றோரையும் மதிக்கவும்,
எந்தப்பாடத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பீர்கள்...??

உண்மை உயர்வு தரும் . 
ஒழுக்கம் உயிர்காக்கும் , என மனனம் செய்ய வைப்பதால் புண்ணியம் இல்லை. வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்ற கற்றுக்கொடுங்கள்.

பரீட்சை என்ற பெயரில் மாணவர்களை மன நோயாளியாக்கி விடாதீர்கள். 
சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுங்கள். 

வீட்டு வேலை என்ற பெயரில் (assignment ) வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்காதீர்கள். 
பெற்றோர் வேலை செய்ய பிள்ளைகளுக்கு புள்ளி வழங்காதீர்கள்.

என் அன்பார்ந்த ஆசிரியர்களே! உங்களை தலையில் குட்டுவதாய் நினைக்காதீர்கள். 
எம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்பு மட்டும்தான். 
அபூபக்கர்களும் உமர்களும் போல் ஆட்சியாளர்களை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. ஏனெனில் இன்றைய பிள்ளைகளே நாளைய தலைவர்கள் என நீங்களே சொல்கிறீ ர்கள். 

உங்களிடம் படித்து பட்டம் பெற்ற மாணவர்களைக் காணும்போது , இவன் என் மாணவன் என சந்தோசப்படும் உங்கள் உள்ளங்கள், "கீழ் நிலையில்" உள்ளவர்களைக் காணும் போதும் "இவனும் என் மாணவன் தான்" என எப்போதாவது அழுததுண்டா?

நீங்கள் எமக்காய் செய்த உதவிகளையும்,
நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காகய் நீங்கள் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த வரலாறுகளையும்
என்றும் மறக்க மாட்டோம்.
அதனால் தான்
உங்களுக்கும் உங்கள் நலனுக்குமாய் என்றும் இறைவனிடம் இருகரம் ஏந்துகிறோம். 

இப்படிக்கு 
நன்றி உள்ள மாணவர் சமுகம்.

(எந்த ஒரு ஆசிரியரினதும் மனதைப்புண் படுத்தும் நோக்கில் எழுதவில்லை, இருப்பினும் அவ்வாறு மனது புண்படுமாயின் இது உங்களுக்கு உரியதுதான்.) வட்சப்பில் வந்தது


1 comment:

  1. சகோதரியின் கருத்து வாசிப்பதற்கு நன்றாக இருந்தாலும் யதார்த்தம் அதுவல்ல ஒரு கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் குறிப்பிட்ட பங்களிப்பு இருந்த போதும் அவனுடைய வீழ்ச்சிக்கு ஆசிரியர்கள்தான் முழுக்காரணம் என்று கூறமுடியாது அம்மாணவனின் வீட்டுச் சூழலுக்கு முக்கிய பங்குள்ளது என்பதை படித்த உங்களைப் போன்றவர்கள் விளங்காமலிருப்பது துரதிஷ்டமாகும்

    ReplyDelete

Powered by Blogger.