March 28, 2019

வரலாறு சொல்லும், பாடம் என்ன..?

மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கிழக்கு மாகாண
முஸ்லிம்களின் தலைமைப்பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் தற்போதைய அரசியல்
வாதிகளில் அதற்குப் பொருத்தமான ஒருவராக ஆளுநர் ஹிஸ்புள்ளாஹ் அவர்களே
காணப்படுவதாகவும் கருத்தினை முன்வைக்கின்ற ஆக்கமொன்று
பிரசுரிக்கப்பட்டிருந்தது. ‘அபூ ஷீனத்’ ( உண்மையான பெயர்அடையாளம்
தெரியவில்லை) என்பவராலேயே அது எழுதப்பட்டிருந்தது.
ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க ஏன்
தகுதியானவர்  என்பதற்கான மேலோட்டமான    நியாயங்கள் சிலவும்
சொல்லப்பட்டிருந்தன. கடந்த பொதுத்தேர்தலில் தோற்ற போதிலும் மாறி மாறி பல
அதிகாரங்களைப்பெற்ற ஒருவராக அவர் இருப்பதாகவும் முஸ்லிம்களின்
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கின்ற ஒருவராக அவர் இருப்பதாகவும்
அந்த ஆக்கத்தில்  சொல்லப்பட்டிருந்தது.

கிழக்கு முஸ்லிம்களின் தலைமைத்துவ வெற்றிடம் மாத்திரமின்றி ஒட்டு மொத்த
இலங்கை முஸ்லிம்களுக்கும் தலைமைத்துவமில்லாத நிலையே இன்று
காணப்படுகின்றது. அதற்குப்பொருத்தமான தனி நபர்கள் யார் என்று தேடுவதற்கு
முன்பாக அத்தலைமைத்துவப்பொறுப்பிற்கு தகுதியான ஒருவர் எப்படிப்பட்ட
ஒருவராக இருக்க வேண்டும் என்பதை முதலில் வறையறுக்க வேண்டும். அந்த
வறையறைகளுக்கு மிக நெருக்கமாக யார் இருக்கிறார் என்பதை முதலில் யோசிக்க
வேண்டும்.

அந்த வகையில் பதவி, பணம், அதிகாரம் மற்றும் இன்னோரன்ன இலாபங்களுக்கு
சோரம் போகாது மக்களின் நலனுக்காக லட்சியத்தோடும் உண்மைக்குண்மையாகவும்
உழைக்கின்ற நேர்மையும் நெஞ்சுரமும் சமூகம் பற்றிய தூர நோக்கும்,  அத்தோடு
எல்லா செயற்பாடுகளிலும் இறை அச்சத்தோடு செயற்படுகின்ற பண்புமே நாம்
எதிர்பார்க்கும் தலைமைத்துவத்திடம் இருக்க வேண்டிய அடிப்படைப்
பண்புகளாகும். அந்த வகையில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இதற்குப்
பொருத்தமானவர்தானா என்பதினை வெறும் அபிப்பிராயத்தின் அடிப்படையில்
பேசாமல் வரலாற்று அனுபவங்களின்  அடிப்படையில் நோக்குவதே பொருத்தமாகும்.

அந்த வகையில் பின்வரும் வரலாற்று உண்மைகளை ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.

1.மர்ஹும் அஷ்ரப் அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல்
முகவரியை தேடித்தந்த ஒருவர். உரிமை சார் அரசியல் போராட்டத்தினை
முன்னின்று நடத்தியவர். அவர் உருவாக்கிய அந்த அரசியல் இயக்கத்தை
ஹிஸ்புல்லாஹ் என்பவர் அவருக்கு பக்க பலமாக நின்று வளர்த்தெடுத்தாரா?
அல்லது தனது பதவி ஆசைக்காக சிதைக்க முற்பட்டாரா ? உரிமைக்கான அரசியல்
போராட்டத்தின் அத்திவாரமே முஸ்லிம்களின் ஒற்றுமை எனும் அடிப்படையாகும்.
பிரதேச  வாதங்களை தகர்த்தெறிந்து முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தியவர்
அஷ்ரப் அவர்களாகும். 1989 களில் முகங் கொடுத்த முதலாவது பொதுத்தேர்தலில்
அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய  காத்தான்குடி - ஏறாவூர்- ஓட்டமாவடி என்ற
பிரதேச ஒற்றுமையின் விளைவாக ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றப் பதவியினைப்
பெற்றுக்கொண்டார்.
தலா 2 வருடம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் சுழற்சி
முறையில் அப்பதவி வழங்கப்படும் என்ற உறுதி மொழியின் அடிப்படையிலேயே அந்த
ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டது. அந்த உறுதி மொழியைக்காப்பாற்றுவேன் என்ற
சத்திய வாக்குறுதியை பள்ளி வாயிலில் வைத்து வழங்கியதன் அடிப்டையிலேயே
ஹிஸ்புல்லாஹ்விற்கு பதவி வழங்கப்பட்டது. 2 வருட நிறைவில் அந்த சத்தியத்தை
மீறிய அவர் பதவியை முழுமையாக தனதாக்கி கொள்வதற்காக படு மோசமான பிரதேச
வாதத்தை பரப்பினார். அன்று அவர் பற்றவைத்த ‘ஓட்டமாவடியான், ஏறாவூரான்,
காத்தான்குடியான்’  என்ற பிரதேச வாதமே இன்றும் எரிந்து  கொண்டிருக்கிறது.

2.பெரும் தியாகங்களோடு கட்டியெழுப்பப்பட்ட அரசியல் ஒற்றுமைக்கு தனது
பதவிக்காக வேட்டு வைத்த ஹிஸ்புல்லாஹ்வின் நம்பிக்கைத் துரோகத்தை
சகித்துக்கொள்ள முடியாத மர்ஹும் அஷ்ரப் அவர்கள் ஹிஸ்புல்லாஹ்வை
கட்சியிலிருந்து நீக்க முயற்சித்தார்.அப்பொழுது அவரை பழிவாங்குவதற்காக
கண்டி மாவட்ட பேரினவாதக்கட்சி  அரசியல் வாதி ஒருவரின் துணையோடு
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களையே நீதி மன்றத்தில் ஏற்றினார் ஹிஸ்புல்லாஹ்.
மர்ஹும் அஷ்ரப் மரணிக்கும் வரை ‘மாபெரும் நயவஞ்சகன் ஹிஸ்புல்லாஹ்’ எனும்
மனப்பதிவுடனேயே அவர் நடந்து கொண்டிருந்தார் என்பது வரலாறாகும்.

3. காத்தான்குடி பள்ளிவாயில் படுகொலை என்பது இலங்கை முஸ்லிம்களின்
வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சோக நிகழ்வாகும். இந்த அநியாயத்தை
அரங்கேற்றியவர்கள் புலிப்பயங்கரவாதிகள் என்பதும் எல்லோருக்கும்
தெரியும்.அதனை தலைமை தாங்கிய பயங்கரவாதி யார் என்பதும் மக்களுக்குத்
தெரியும். இருந்தும்,  தொழுகையில் நின்ற முஸ்லிம்களை சுட்டு படுகொலை
செய்த ஈனத்தனத்தினை செய்த நபரை அழைத்து வந்து அதே பள்ளியில் தனது அற்ப
அரசியல் லாபத்திற்காக பொன்னாடை போற்றி கௌரவித்த மோசமான செயலை
ஹிஸ்புல்லாஹ் செய்திருந்தார்.

4. மஹிந்த ஆட்சிக்காலத்தில்  முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்கள்
ஆரம்பித்த பிறகு பள்ளிவாயில்கள் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல்
தம்புள்ளை பள்ளி மீது நடாத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை புனித ஜும்மாவிற்காக
முஸ்லிம்கள் குழுமி இருந்த பொழுது அங்கு ஆர்ப்பாட்டமாக வந்த பௌத்த
கும்பலும் பிக்குகளும் பட்டப்பகலிலேயே பள்ளிவாசலைத்தாக்கினார்கள்.
பள்ளிவாசலின் உள்ளே புகுந்து மிம்பர்  பகுதிகளை சேதமாக்கி குர்ஆன்
பிரதிகளையும் நாசப்படுத்தினார்கள்.
அன்றைய தினம் ஜும்மா தொழுகையை நிறைவேற்றும் உரிமையை பலாத்காரமாக பறித்து
முஸ்லிம்களைத் துரத்தினர். முழு நாட்டு முஸ்லிம்களும் சோகத்தில்
ஆழ்ந்திருந்த போது அந்த தாக்குதலை நடாத்திய பௌத்த துறவியை சந்தித்த
ஹிஸ்புல்லாஹ் மனச்சாட்சிக்கு விரோதமாக துரோகமான கருத்தொன்றை
வெளியிட்டிருந்தார். அதாவது ‘பள்ளிவாயில் தாக்கப்படவில்லை அங்கிருந்த ஒரு
தகட்டுக்கும் கூட  சேதம் ஏற்படவில்லை’ எனவும் துரோகமான கருத்தை
தெரிவித்து பௌத்த தீவிரவாதிகளின் நல்ல பிள்ளையாக பெயரெடுத்தார். அப்போது,
முஸ்லிம் கௌன்சில்,  உலமாக்கள்,  புத்தி ஜீவிகள் என பலரும்
ஹிஸ்புல்லாஹ்வின் துரோகத்தனமான கருத்தினை  கண்டித்திருந்தனர்.

5. இந்நாட்டில் வட்டியில்லாத இஸ்லாமிய வங்கிச்சேவையினை ஆரம்பிக்க
விரும்பிய சிலின்கோ நிறுவனம் அதற்கான ஒரு பிரிவினை  தனியாக ஆரம்பித்தது.
அப்போது விமான நிலையத்தலைவராக இருந்த ஹிஸ்புல்லாஹ் தனது பதவியையும்
அதன்மூலம் கிடைத்த செல்வாக்கினையும் பயன்படுத்தி பல கோடி ரூபாய் தொகையினை
சிலின்கோ புரபிட் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டார். தனது மனைவியின்
பெயரிலேயே இப்பாரிய தொகையினை பெற்றுக்கொண்ட போதிலும் அவர் தனது சொந்த
மனைவி  என்பதினை மறைத்து தனக்குத் தெரிந்த  ஒருவருக்கு சிபாரிசு செய்வது
போல தந்திரமாக அந்தக்கடனை பெற்றிருந்தார். அத்தோடு அக்கடனுக்கு பிணையாக
நிற்கும் வகையில் தான் அப்போது வகித்த பதவிற்குரிய கடிதத்தலைப்பையும்
பயன்படுத்தியுமிருந்தார். இப்பாரிய தொகையினைப்பெறுவதற்கு இன்னும் பல
மோசடியான ஆவணங்களையும்  சமர்ப்பித்ததாகவும் பின்னர் தெரிய வந்தது.
இவ்வாறு பெறப்பட்ட பல கோடி தொகையை மொத்தமாக அவர் ‘ஆட்டையைப்’ போட்டதன்
விளைவு அந்த நிதி நிறுவனத்தையே இழுத்து மூட வேண்டிய நிலை வந்தது.
சிறுகச்சிறுக சேர்த்த தமது பணத்தினை இந்நிறுவனத்தில் வைப்பிலிட்டு தமது
சொந்தப்பணத்தை இழந்த ஏழைகளும் பலரும் இதுவரை முழுமையாக தீர்வில்லாமல்
கையைப்பிசைந்து நிற்கின்றனர். இந்த ஏக்கத்தின் காரணமாக ஒரு சிலர் உயிரை
பறி கொடுத்த பரிதாப கரமான வரலாறுகளும் உள்ளன.

6. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பாரிய
பிரச்சனைகளில் காணிப்பிரச்சனை முதன்மையானதாகும்.
பலரும் பலவிதமான அரசியல் அதிகாரங்களை கடந்த 30 வருடங்களாக
பெற்றுக்கொண்டிருந்த போதிலும் இதுவரையில் உருப்படியான எந்தத்தீர்வும்
மக்களுக்கு கிடைக்வில்லை.நிலமை இப்படி இருக்கும் போது கிழக்கு மாகாண
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஹிஸ்புல்லாஹ் துரோகத்தனமான அறிக்கை
ஒன்றினை பகிரங்கமாக விடுத்திருந்தார்.அதாவது கிழக்கு மாகாணத்தில்
காணப்பட்ட காணிப்பிரச்சனைகள் அனைத்தும்    தீர்க்கப்பட்டு விட்டதாக
தனதறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.  ‘டெய்லி மிரர்’  பத்திரிகையில்
முன்பக்க செய்தியாக இது வெளிவந்திருந்தது.

7.அறபுக்கல்லூரிகளில் பயிலும் உலமாக்களுக்கான தொழில் நுட்ப அறிவை
வழங்குவதற்கான ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்கும் திட்டத்தினை ஹிஸ்புல்லாஹ்
முன்னெடுத்தார். மிக நல்ல திட்டமென அனைவரும் அதனை
வரவேற்றனர்.அத்திட்டத்தினை அறபு தேச தனவந்தர்களிடம் இவர்
முன்வைத்தார்.மக்களுக்கான ஒரு திட்டம் என்பதினால் அரேபிய தனவந்தர்கள்
பலரும் இதற்கான நன்கொடைகளை  அள்ளிக்கொடுத்தனர்.இவ்வாறு 700 கோடிக்கு மேல்
தான் வசூலித்ததாக பகிரங்க மேடைகளில் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார்.
இவ்வகையான வசூலிப்பின் மூலம் கட்டப்படும் நிறுவனங்களின் சொத்துக்கள்
அனைத்தும்  நிரந்தர வக்பு சொத்தாக மாற வேண்டும். ஆனால,, இவ்வாறு
கட்டப்பபட்ட பல்பலைக்கழகத்தின்  முழு உரித்தையும் தன்பெயரிலும்  தனது
மூத்த மகனின் பெயரிலும் ஹிஸ்புல்லாஹ் எழுதி வைத்திருப்பது அண்மையில்
ஆதாரங்களுடன்  அம்பலமானது.  மட்டுமன்றி,  தனது மரணத்திற்குப் பின்னரும்
கூட இந்த பாரிய  சொத்து தனது  மனைவி பிள்ளைகளுக்கு சென்றடைய
வேண்டுமெனவும் அந்த ஆவனங்களில் அவர் எழுதி வைத்துள்ளார். இலங்கை முஸ்லிம்
வரலாற்றில் மக்களின் பெயரில் திரட்டப்பட்ட நிதி தனிப்பட்ட ஒருவரின்
குடும்ப சொத்தாக  மாற்றப்பட்ட மாபெரும் மோசடிச்செயலாக இதனை கருத
முடியும்.

8. கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் குவைத் அரசாங்கம் பாதிக்கப்ட்ட
மக்களுக்கு வீட்டுத்திட்டம் ஒன்றினை காத்தான்குடியில் அமைக்க
முன்வந்தது.இதற்கான காணிகளை பொதுமக்களும் கொடுத்தனர்.
பொதுப்பணத்திலிருந்து கொள்வனவு செய்தும் கொடுத்தனர்.அவ்வாறு கட்டப்பட்ட
வீடுகளில் அரைவாசிக்கு மேல் ஹிஸ்புல்லாஹ்வின் அடிவருடிகளுக்கே
வழங்கபட்டன. அத்தோடு, அந்தக் காணிப்பரப்பும் அவரின் பினாமியான மௌலவி
ஒருவரின்  பெயருக்கு மாற்றப்பட்டு அக்காணிகளுக்கான நஸ்ட ஈட்டுத்தொகையாக
3 கோடிக்கும் மேல் மோசடியாகப்பெறப்பட்டது. காணிகளை வழங்கிய அப்பாவி
மக்கள்  இன்றும் தீர்வின்றி தவிக்கின்றனர்.

9. காத்தான்குடி எல்லைக்கிராமமான கர்பலா பிரதேசத்தில் ஏழைகளுக்கு
சொந்தமான காணிகளை ஹிஸ்புல்லாஹ் குழுவினர் அடாத்தாக அபகரித்தனர். இதில் 87
பேர் மிக அதிகமான பாதிக்கப்ட்டனர்.கடந்த உள்ளுராட்சி தேர்தலின்போது
இவ்விடயம் அம்பலமானதன் காரணமாக இம்மக்கள் அனைவருக்கும் காணியை
திரும்பத்தருவதாக ஹிஸ்புல்லாஹ் பகிரங்கமாக  வாக்களித்தார்.ஆனாலும் ஒரு
சிலருக்கு மட்டுமே காணிகள் வழங்கப்பட்டது. 60க்கும் அதிகமான ஏழைகள்
ஹிஸ்புல்லாஹ்வின் கும்பலிடம்  காணிகளை இழந்து இன்னும் தவித்து
நிற்கிறார்கள்.

10. மக்களின் நலன், சமூக நலன், நாட்டின் நலன் என்ற அடிப்படையில் அரசியல்
செய்கின்ற ஒருவராக ஹிஸ்புல்லாஹ் இருந்ததில்லை. இதற்கு நல்ல உதாரணங்களாக 2
விடயங்களைக்கூற முடியும். கடந்த 2015 ஜனாதிபதித்தேர்தலின் போது சமூக
நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஆட்சி
மாற்றம் ஒன்றையே விரும்பினர்.ஆனாலும் மக்களின் பொது விருப்பத்தினை
மதித்து நடப்பவராக அவர் இருக்கவில்லை. பல அநியாயங்களைப் புரிந்த
ஆட்சியாளர்களுக்கு பகிரங்கமாக அவர் ஆதரவளித்தார்.  இதன் காரணமாகவே அவர்
தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பிறகும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.அது
போலவே கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயக விரோத அரசியல் சதி முயற்சி
அரங்கேற்றப்பட்டது. அதன் காரணமாக இந்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு
ஏராளமாகும். அப்போதும் கூட மக்களின் நன்மைக்காக நாட்டுநலனுக்காக
ஹிஸ்புல்லாஹ் சிந்திப்பவராக இருக்கவில்லை. அந்த சதி முயற்சிக்கு
ஆதரவளித்து அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார். மக்கள் சோகத்திலும்
அதிர்ச்சியிலும் இருந்த போது அவரும் அவரது கும்பலும் பட்டாசு கொழுத்தி
அதனைக்கொண்டாடியிரந்தனர். உச்ச  நீதி மன்றத்தின் தீர்ப்பினால் அந்த சதி
தோற்கடிக்கப்பட்டது. அந்த சதிக்கு பக்க பலமாக இருந்ததற்கான சன்மானமாகவே
இப்போது ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது
என்றும் சொல்லாம்.

எனவே  முஸ்லிம் மக்களின் தவைராக வருவதற்கு  இருக்க வேண்டிய பண்புகளில்
எதனையும் கொண்ட ஒருவராக ஹிஸ்புல்லா இருக்கின்றாரா என்பதனை  மேலே உதாரணமாக
சொல்லப்பட்ட  ஒரு சில வரலாறுகள் தெளிவாக்குகின்றன.

எனவே முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு கருத்துச் சொல்லுகின்ற
எவரும் உணர்ச்சி வசப்பட்டு வரலாறுகளை மறந்து விட்டு கருத்துச் சொல்லாமல்
நிதானமாக பக்குவமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
அதே போன்று, நேர்மையாகவும் , எதற்கும் சோரம் போகாமலும் தியாகத்தோடும்
மக்கள் நலனுக்காக நூறு வீத விசுவாசத்துடன் உழைக்கின்றவர்களை சமூகத்தின்
பிரதிநிதிகளாக , தலைவர்களாக முன்னிறுத்த வேண்டும்.

mohamed Faiz

1 கருத்துரைகள்:

Mr:M.Faiz neenga entha ooru endu enakku theriyathu ana ungalukku oru advice ini neenga thoongum pothu kavanama thoonga try pannunga "mainsara olukkinal veedonru theekirayanathil kudumpa uruppinarhal anaivarum pali" ene news varappohuthu enenral nanga palathyum pathayum pathhu irukkome!!!

Post a Comment