March 31, 2019

பாயும் ஜனாதிபதி, நழுவும் பிரதமர்

- நஜீப் பின் கபூர் -

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது. மின்சார வெட்டுக் காரணமாக  மக்களின் இயல்பு நிலை  சீர்குழைந்து போய் இருக்கின்றது. இதற்கிடையில் மின்சார வெட்டுத் தொடர்பாக ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்துக்கள் கடுமையான வெப்பத்தையும் மின்சாரம் கொடுக்கின்ற அதிர்ச்சியையும் விடக் கொடூரமாக இருந்தது.

இது பற்றிய சிறிய குறிப்பொன்றை மட்டும் சொல்லி தலைப்பிற்கு வரலாம் என்று தோன்றுகின்றது. அந்தபை; பேயை இந்தப் பதவியிலிருந்து தூக்கியெறிய நான் நடவடிக்கை எடுத்தோன் பிரதமரின் தயாவால் அந்தப்பேய் மீண்டும் பதவியில் வந்து அமர்ந்து கொண்டது. 

மின்சார நெருக்கடிகளுக்கு இரு அதிகாரிகளே காரணம். இன்று மின்சார மாபியாவால்தான் நாட்டில் இந்த நிலை. தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து இவர்களுக்கு பெரும் தொகையான பணம் லஞ்சமாக அள்ளிக் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் இவர்கள் கடந்த சில மாதங்களாக அசாதரனமான முறையில் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணங்களை மேற் கொண்டிருக்கின்றார்கள் என்று கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருக்கின்றார். 

அத்துடன் இவர்களுக்கு பெண்களைச்கூட அன்பளிப்பாக வழங்கி இருக்கின்றார்கள் என்ற தகவல் தனக்குக் கிடைத்திருக்கின்றது என்று அவர் அங்கு அதிரடியாகத் தெரிவித்திருக்கின்றார்.  இவ்வாறான பின்னணியில் நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாரிய மாற்றங்களை வருகின்ற ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டி இருக்கும் என்றும் மைத்திரி கருத்துத் தெரிவித்திருக்கின்றார். 

இப்படி சமகால அரசியலைப் பார்க்கின்ற போது பதுங்குகின்ற  பூனையும் நடுங்குகின்ற எலியும் என்று சொல்வதை விட பாய்கின்ற ஜனாதிபதியும் நலுவுகின்ற பிரதமரும் என்ற ஒரு புதுக் கதையையும் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் போல் தோன்றுகின்றது. 

2015 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் புதுக் குடித்தனம் போன நமது ஜனாதிபதியும் பிரதமரும் சில காலம் நல்லுறவுடன் வாழ்ந்தார்கள் என்று தோன்றினாலும் துவக்கம் முதலே அங்கு கைபட்டாலும் கால்பட்டாலும் குத்தம் என்ற நிலை இருந்து வந்துதது.!

இந்த நிலை அடுத்து வந்த காலங்களில் பிரிவும் பிளவும் சண்டையும் சமாதனமும் என்று போக்கில் நகர்ந்தது. இந் நிலையில் பிணைமுறி விவகாரம் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் மிகப் பெரிய சச்சரவைத் தோற்றுவித்தது.  

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பிளவு உறுதியானது. அதனைத் தொடர்ந்து நமது ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வர்த்தமணி வெளியீடுகள் எல்லாம் கேளிக்கூத்தில் முடிந்தது. எனவே ஜனாதிபதியின் எந்தப் பாய்ச்சலுக்கும் சிக்காமல்  பிரதமர் ரணில் இன்று வரை அரசியல் விளையாட்டில் நழுவிக் கொண்டு வருகின்றார். 

இந்தப் பயணத்தை எவ்வளவு தூரம் அவரால் தொடர முடியும் என்பது தெளிவில்லை. எப்படியோ இப்படி ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் காலம் முடியும் வரை தமது பதவிகளைத் தொடர்வார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. என்றாலும் ஜனாதிபதியும் இன்னும் பிரதமர் மீது சீறிக் கொண்டும் பாய்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அதே போன்று பிரதமர் ரணிலும் நழுவிக் கொண்டுதான் வருகின்றார் என்பதனை அவதானிக்க முடிகின்றது.

மாகாணசபைத் தேர்தலை நடந்த வேண்டிய காலம் பல மாகாணங்களில் காலம் கடந்து போனாலும் அது இன்னும் நடக்காமல் நாள் கடந்து போய் கொண்டிருக்கின்றது. எந்த முறையிலாவது தோர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் வட்டாரங்களில் அழுத்தங்கள் தொடர்ந்தாலும் இந்தத் தேர்தலை நடாத்திய பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் தமக்குப் பாரிய பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரும் என்ற காரணத்தால் இந்தத் தேர்தலை ஆளும் தரப்பு பின்தள்ளி வருகிறது என்று தான் எண்ணத்தோன்றுகின்றது. 

இந்தத் தேர்தலை தான் கொடுத்திருக்கின்ற காலக் கெடுவுக்கள் நடதத்தவிட்டால் தான் தேர்தல் ஆணைக் குழுவில் வகிக்கின்ற பதவியிலிருந்து விலகப்போவதாக மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். மனிதன் சற்று வித்தியாசமானவர் எனவே அவர் சொன்னதை செய்யக் கூடியவர். எனவே நல்லதொரு நிருவாகியை நாடு இழக்கும் அபாயம் தோன்றி இருக்கின்றது. 

ஆனால் இது பற்றி தேர்தலைத் தள்ளிப்போடுகின்றவர் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. மேலும் இந்தத் தேர்தலை எந்த முறையிலாவது நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் தரப்பினர் ஆர்வம் காட்ட வில்லை என்பது தெளிவு. ஜனாதிபதியும் இது தொடர்பாக  பல கட்டளைகளைப் பிறப்பித்திருந்தாலும் அவை எதையும் ஆளும் தரப்பு கண்டு கொண்டதாகத் தெரிய வில்லை.

எனவே இந்த நாட்டில் ஜனாதிபதியின் கட்டளைகளுக்கும் அதிகாரங்களுக்கும் ஏதோ பாக்கவாத நோய் பீடித்திருக்கின்றது என்பது தெளிவு. எனவேதான் அவரது பாய்ச்சலுக்கு இதுவரை பிடி கிடக்காமல் இருந்து வருகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment