Header Ads



இலங்கை முஸ்லிம்கள், மாறி வருகிறார்களா..?..?

 - அபூ ஷாமில் -

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் முடிந்த பின்னும் இன்னும் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முஸ்லிம் சமூகத்தில் முடிந்ததாக இல்லை. சுதந்திரத்துக்காக உழைத்த எமது முஸ்லிம் தலைவர்களைப் பற்றி நாங்கள் எமது புதிய தலைமுறைக்கு எவ்வளவு தூரம் ஞாபகப்படுத்தினோம், அவர்கள் முஸ்லிம்களுக்குப் பெற்றுத் தந்த கண்ணியத்தைப் பேணிப் பாதுகாப்பதில் நாங்கள் எவ்வளவு தூரம் உழைத்திருக்கின்றோம், அவர்கள் வாங்கித் தந்த உரிமைகளில் நாங்கள் இன்னும் எதைச் சேர்த்திருக்கின்றோம், எதை இழந்திருக்கின்றோம், மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையிலா நாடு இருக்கிறது, அப்படி வந்தால் மீண்டும் எப்படி நாங்கள் அதற்குப் பங்களிப்புச் செய்யப் போகிறோம் என்றெல்லாம் இந்த வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்குமானால் நாங்களும் இந்த நாட்டு மக்கள் என்று நாகரிமடைந்த எந்த முஸ்லிமும் கொடி கட்டிப் பறக்கலாம்.

ஆனால் நமக்குள் நடக்கும் வாதம் என்ன? சுதந்திர தினம் கொண்டாடலாமா, இவ்வளவு காலமும் இல்லாமல் ஏன் இப்பொழுது? பெரும்பான்மைத் தீவிரவாதிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதன் அடையாளம் தான் தேசியக் கொடியேற்றமா? நல்ல பேர் வாங்குவதற்கான ஏமாற்று முயற்சியா? நாங்கள் பயந்து உறைந்து போயிருப்பதன் வெளிப்பாட்டைக் காட்டிக் கொண்டிருக்கிறோமா? அதென்ன பள்ளிவாசல்களில் எல்லாம் தேசியக் கொடி என்றெல்லாம் தான் விவாதம் களைகட்டுகிறது. இதெல்லாம் பேஸ்புக்கிகள் சிலர் கொள்ளைப் புறத்தில் இருந்து கொண்டு அடிக்கின்ற அரட்டை என்று வைத்துக் கொண்டாலும் இப்படியும் சிலர் சமூகத்துக்குள்ளால் இருந்து அரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த விடயமாகிறது.

அவர்கள் விண்வெளியில் வீடு கட்டுவதற்கு முயற்சிக்கும் பொழுது நாங்கள் கமெரா கூடுமா கூடாதா என்று வாதித்துக் கொண்டிருந்தோம் என அறிஞர் ஒருவர் சொன்னதன் நிதர்சனமாக இலங்கை முஸ்லிம்கள் மாறி வருகிறார்களா? உலகில் முதன் முறையாக ஒரு பெண்ணைப் பிரதமராக்கிக் காட்டிய நாட்டில் பெண்களை குடும்ப விவகாரங்களைக் கையாளும் காதிகளாக நியமிக்கலாமா என்று குத்பா நடத்தி மக்களைக் குழப்பியடித்துக் கொண்டிருக்கிறோம். பூமியில் வாழ்வதற்காக நபியவர்கள் கொண்டு வந்த  உலக ஒழுங்கை அறிமுகப்படுத்துவதை விட்டு விட்டு அவருடைய பிறந்த தினத்தை அனுஷ்டிக்கலாமா கூடாதா என்று சர்ச்சைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சிலர் வெளிப்படுத்துகின்ற அச்சத்தின் மொத்த வடிவமல்ல. சுதந்திர தின விழாவொன்றில் மன்னர் காலத்திலிருந்து நாட்டுக்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்பினை விளக்கிய போது தான் பலருக்கும் புரிந்தது, இந்த நாட்டில் சுதந்திரத்துக்காக உண்மையாக உழைத்தவர்கள் என்ற வகையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்க வேண்டியது நாங்கள் தான் என்பது. 1948 முதல் இல்லாத சுதந்திரக் கொண்டாட்டம் இப்போது முஸ்லிம்கள் மத்தியில் ஏன் என்று கேட்பவர்கள் கூட ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு உற்பத்தித் துறையில், வெளிநாட்டு வர்த்தகத்தில், யுத்தங்களில் எல்லாம் முஸ்லிம்கள் என்ன பணியைச் செய்தார்கள் என்பது தெரியாதவர்களாகத் தான் இருப்பார்கள்.

இதை விடுத்து வஸ்துஹாமி என்கின்ற முஸ்லிம் மன்னனைப் பற்றியோ, 11 ஆவது அழகேஸ்வரன் முஸ்லிமாக மாறி றைகமையை ஆட்சி செய்த வரலாற்றைப் பற்றியோ வாதப்பிரதிவாதங்கள் நடத்தியிருந்தால் ஏதாவது நன்மை விளைந்திருக்கும். இப்படி விவாதங்கள் சமூகத்தைக் குழப்புவதற்கு உதவாது என்பதனால் இது போன்ற விவாதங்களை இந்த பேஸ்புக்கிகள் முன்னெடுப்பதில்லை.எனவே இந்த உதவாக்கரைகளின் வாதங்களை விட்டு விட்டு ஆரோக்கியமான உரையாடல்களில் மக்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

சுதந்திரம் கொண்டாடுவதற்கு அச்சம் தான் காரணம் என தமது சொந்தப் பயத்தை யாராவது வெளியிடுவார்களானால், கிறீஸ் யக்காக்களாலும், நாகப் பாம்புகளாலும், தேரர்களாலும் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்ட போது அதிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க இந்த பேஸ்புக்கிகள் தமது புக்கிகளையாவது பயன்படுத்தினார்களா என்ற கேள்வி பூமரங்காகத் திரும்பி வருகிறது. சமூகத்தைத் திசை திருப்பி குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கு தாராளமாக ஆட்களும் இருக்கிறார்கள். அதற்கான சக்திகளும் ஏராளமாக இருக்கின்றன. இவர்களிடமும் இவைகளிடமும் இருந்து எப்படி நாட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் காப்பாற்றுவது என்பது தான் இன்றுள்ள சவால்.

No comments

Powered by Blogger.