Header Ads



நியுஸிலாந்தில் நடந்தேறிய கொடூரத்திற்கு, முஸ்லிம்களும் பொறுப்புக் கூறியாக வேண்டும் - பாயிஸ் முஸ்தபா

‘குர்ஆனிய சிந்தனை – ஜுஸ்உ அம்ம பாகம் 2’ நூல் வெளியீட்டு விழாவில்  ஜனாதிபதி_சட்டத்தரணி_பாயிஸ்_முஸ்தபா ஆற்றிய ஆங்கில் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு:

அளவற்ற அருளாளன் நிகரற்ற கருணையுடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்;


எனது சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் அருள் உங்களுக்குக் கிட்டட்டும். வணக்கம்.

நான் கற்றறிந்தவன் அல்ல. எனவே ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அண்மைக் காலத்தில் அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் என்னை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் சம்பந்தமாக சந்திக்க விரும்புகிறார் என்று கேள்விப்பட்ட பொழுதுதான் நான் அவரது அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டேன்.

அவருக்கிருந்த மதிப்பு, அறிவு, சமூக அங்கீகாரம் இவற்றைக் கருத்திற் கொண்டு அவருடனான எனது சந்திப்பு பாரமாகவும் இறுக்கமாகவும் இருக்கும் என்றே நான் எண்ணினேன். ஆனால் அவருடனான எனது சந்திப்பு மிகவும் ஈடுபாடானதாக அமைந்தது என்பதனை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர் திறந்த மனதுடன் உரையாடினார். மிக முக்கியமாக அவர் உள்வாங்கும் பண்புடையவராகக் காணப்பட்டார்.

அவரது கொள்கை தூரநோக்கு, இஸ்லாத்தை அவர் முன்வைத்த முறைமை என்பன
(இஸ்லாத்தின்) அகிலத்துவத் தன்மையையும் அது ஒரு ரஹ்மத் (அருள்), முஹம்மத் நபி (ஸல்) அனைத்து மனித சமுகத்தினருக்கும் ஒரு ரஹ்மத், இஸ்லாம் அனைத்து மனித சமுகத்தினருக்கும் முன்வைக்கப்பட்டது, நாம் அனைவரும் அனைத்தையும் மிகைத்த அல்லாஹ்வின் படைப்பினங்கள் என்பதனையும் எனக்குப் புரிய வைத்தன.
அது எனது மனதிற்கு இதமாக அமைந்தது.
எவ்வளவு தூரத்திற்கென்றால் நான் அவரது அறிவின் மூலம் பயன் பெறலாம்
என்பதனை உணர்ந்தேன். அவரை எனது தனிப்பட்ட ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவராகக் கொள்ளலாம் என்பதனையும் உணர்ந்தேன்.
அவரை நான் அண்மையில் பணக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையொன்று சம்பந்தமாக, அதில் ஈடுபட முடியுமா? முடியாதா?
என்ற கேள்விக்கு பதிலை வேண்டி நாடினேன்.
அவரை எனது ஆன்மீக வழிகாட்டி என்ற வகையிலேயே நாடினேன்.
அப்போது அந்தக் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் தடை செய்யப்பட்டது. எந்த விதமான கேள்விக்கும் அங்கு இடமில்லை என்பதைத் தயக்கமின்றி எனக்குத் தெரிவித்தார். எனவே நான் அதனைத் தொடரவில்லை. அதற்கு நான் உங்களுக்கு (உஸ்தாத் மன்ஸூர்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்
நான் உங்களை எனது தனிப்பட்ட வாழ்வில் எனது தனிப்பட்ட ஆன்மீக வழிகாட்டி என்பதனையும் தாண்டி எனக்கு ஒரு நண்பனாகவும் சிந்தனைத் தெளிவை வழங்கக் கூடியவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நான் ஏலவே குறிப்பிட்டது போல நான் கற்றறிந்தவனல்ல. ஆனால் நாம் முன்வைக்க வேண்டியது இஸ்லாத்தின் அகிலத்துவத் தன்மையையே. அது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மாத்திரம் முன்வைக்கப்பட்ட தூது அல்ல. நாம் இஸ்லாத்தின் அகிலத்துவப் பண்புகளான சகோதரத்துவம், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றையே வெளிக்கொணர வேண்டும்.
நாம் இஸ்லாத்தை நேரத்தால், கலாசாரத்தால், பிரதேசத்தால் வரையறுக்கப்பட்டதாகக் காணக் கூடாது. அது ஒரு அரேபிய பிரதேசத்திற்கு வரையறுக்கப்பட்டதாகக் காணவும் கூடாது.
மேலும் அரபு அனைத்தும் இஸ்லாம் எனக் காணவும் கூடாது.
எமது கலாச்சாரங்களை, வழக்குகளை, நடைமுறைகளை இஸ்லாத்துடன் அதற்கு ஏற்றவாறு இணக்கம் காண முடியாது என்று நினைக்கவும் கூடாது. எம்மை இலங்கையர்கள் என தெரியப் படுத்த வேண்டும். எமது வெளித்தோற்றம் பிரபஞ்சவயப்பட்டதாக, ஏனையோர் போன்று சுதேசிகளாகக் காணக்கூடியவாறு இருக்க வேண்டும்.
இஸ்லாம் வேறெந்த மதம் போலவும் சுதேசப் பண்பு கொண்டது. ஏனைய கலாசாரங்களுடன் உடனிருக்கக் கூடியது. நாம் - முஸ்லிம்கள் - திறந்த உள்ளம் படைத்தவர்கள் ஆனால் எம்மை ஏமாற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற புரிதலையும் வழங்க வேண்டும்.
இந்த முக்கியமான கருத்தையே உஸ்தாத் மன்ஸூர் தனது பேச்சு, விளக்கவுரைகள்,எழுத்து மூலமாக எமக்கு வழங்குகிறார். இஸ்லாத்தின் அகிலத்துவப் பண்பு அனைத்தையும் உள்ளடக்க வல்லது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
நியுஸிலாந்தில் நடந்தேறிய இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் பார்க்கும் போது முஸ்லிம்களும் இதற்கு ஓரளவு பொறுப்புக் கூறியாக வேண்டும். நாம் இஸ்லாத்தின் அகிலத்துவப் பண்பை, புரிந்துணர்வை முன்வைக்கத் தவறி விட்டோம். அதற்கான விலையையும் நாம் கொடுக்கிறோம். நாம் இறுகிய உள்ளம் படைத்தவர்களாக, சகிப்புத் தன்மையற்றவர்களாக, குரூரமானவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமிய வரலாற்றை நோக்கினால் அவ்வாறல்ல என்பது தெளிவாகிறது.
ஒரு உண்மையை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.
இங்குள்ள எத்தனை பேர் ஜெருஸலத்திலுள்ள உமர் (றழி) யின் மஸ்ஜிதுக்குச் சென்றுள்ளீர்கள்? 
நீங்கள் அறிந்திருப்பீர்கள் முஸ்லிம்கள் ஜெருஸலத்தைக் கைப்பற்றியதும்; கிறிஸ்துவத்தின் மிகவும் புனிதமான ஸ்தலமான திருக்கல்லறைத் தேவாலயத்தில் தொழுவதற்காக உமருக்கு (ரழி) அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை மறுத்தார். மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அவர் கூறினார்

“நான் இங்கு இன்று தொழுதால் எனக்குப் பின் வருபவர்கள் இந்த ஸ்தலத்தை ஒரு பள்ளியாக மாற்றி விடுவர்”.
அவ்வாறு கூறிவிட்டு அவர் வெளியில் நின்று தொழுகிறார்.
இன்று அதற்கு வெளியில் ஒரு பள்ளி காணப்படுகிறது. அது உமரின் பள்ளி என அழைக்கப்படுகிறது. இந்தப் பள்ளி இஸ்லாத்தின் அடிப்படைகளான புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கான சின்னமாக இன்றும் அங்கு காணப்படுகிறது.
அதுவே நாம் முன்வைக்க வேண்டிய தூதாகும்.
அதுவே தீவிரவாதத்துக்கான மருந்தாகும்.
அந்தத் தூதைத்தான் உஸ்தாத் மன்ஸூர் முன்வைக்க நாடுகிறார்.
இபாதத்துக்கும் (வணக்க வழிபாடுகளுக்கும்) இஸ்லாத்தின் இலக்கான சமூகப் பொறுப்பிற்கும் இடையில் ஒரு நெருங்கிய பிணைப்புள்ளது.
இஸ்லாம் அமைதியை, சமாதானாத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் என்ற கருத்தையும், அது ஒரு அமைதியான, நீதமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளைக் கொண்ட மார்க்கம் என்ற கருத்தையும் அவர் முன்வைக்கிறார்.
இறை வணக்கமும் சமூக இலக்குகளை அடைவதும் வெவ்வேறான விடயங்களல்ல. இவையிரண்டும் பின்னிப் பிணைந்தவை.
ஏனெனில்
இஸ்லாம் அகிலத்துவமானது;அதன் இலக்கு சமூக வழிகாட்டல். குர்ஆன் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு வழிகாட்டல் நூல். நாம் இஸ்லாத்தை வெறுமனே வெள்ளிக் கிழமை முஸ்லிம்களாக நோக்கும் பொறியிலிருந்து வெளியேற வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத இஸ்லாத்தின் ஒருமைப்பாட்டை, சகோதரத்துவத்தையே முன்வைக்க வேண்டும்.
எனது நண்பரொருவர் இஸ்லாம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இஸ்லாமல்ல,முஸ்லிம்களே மறுசீரமைக்கப்பட வேண்டும் என நான் கூறினேன்.
இந்தப் போராட்டத்தையே உஸ்தாத் மன்ஸூர் கொண்டு செல்கிறார். அல்லாஹ் அவருக்கு பலத்தை வழங்கட்டும். இந்த விளக்கவுரையில் உங்களது ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூல் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
இது எனது தனிப்பட்ட அவாவுமாகும். ஏனெனில் எனது தமிழ் மொழி அறிவு மிகவுமே பலவீனமானது.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் சேவையை அங்கீகரிப்பானாக.
உங்களது வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல உங்களுக்கு பலத்தையும், தைரியத்தையும் தந்தருள்வானாக.

உஸ்தாத் மன்ஸூர் இன் முகநூலில் இருந்து

1 comment:

  1. இஸ்லாம் அகிலத்துவமானது பிரதேச வழக்குகளுக்கும் பிரதேச குறிகாட்டிகளுக்கும் அப்பாற்பட்டது. மிக அழகாகத் சொன்னீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.