Header Ads



இனிமேல் எவரும், வாய்திறக்க முடியாது - ஜனாதிபதி

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஜெனிவா மாநாட்டில் வைத்தே இலங்கைக் குழு நிராகரித்து விட்டது எனவும், இங்கு இனிமேல் எவரும் பேசவே முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசு அமைக்கத் தவறினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் தமது நிலைப்பாட்டு என்ன என ஜனாதிபதியிடம் செய்திச் சேவை ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி,

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஜெனிவா மாநாட்டில் வைத்தே இலங்கைக் குழு நிராகரித்து விட்டது. இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் இங்கு இனிமேல் எவரும் பேசவே முடியாது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. நாட்டின் அரசமைப்பை மீறி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் செயற்பட முடியாது.

இலங்கையின் நிலைப்பாட்டை நாட்டின் ஜனாதிபதியும், அரச குழுவினருமே தீர்மானிப்பர். இதை மீறி எவரும் செயற்பட முடியாது.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தும் அரசமைப்பைக் கருத்தில்கொண்டும் நாம் செயற்படுகின்றோம். இதை மீறி நாம் ஒருபோதும் நடக்கமாட்டோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் நாட்டின் அரசமைப்பை மீறுகின்ற வகையில் உள்ளன. அவர்கள் தமிழ் மக்களின் மனங்களையும் புலம்பெயர் அமைப்புகளின் மனங்களையும் வெல்லும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

ஆனால், நாம் நாட்டின் நலனையும் மூவின மக்களின் ஒற்றுமையையும் கருத்தில்கொண்டு தான் கருத்துக்களை வெளியிடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.