Header Ads



அரசியல் தீர்வு என்பது, பரிசளிப்பு விழா போன்றதல்ல - அப்துர் ரஹ்மானின் விளக்கம்

 “ஒரு தரப்பின்  நலன்களை மாத்திரம் முதன்மைப்படுத்திய வகையில் உருவாக்கப்படும் அரசியல் தீர்வுகள் நிரந்தரமானதாக அமையாது.  மாகாண சபைக் கட்டமைப்புக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். மக்களின் பிரச்சினைகளுக்கான அர்த்தமுள்ள தீர்வுகள் எதனையும் மாகாண சபைகளால் கொடுக்க முடியவில்லை . எனவேதான் நாட்டிற்குரிய அரசியல் தீர்வென்பது சகல மக்களின் பிரச்சனைகளையும் உள்வாங்கிய நீதியான ஒரு தீர்வாக முன்வைக்கப்பட வேண்டும்.  எனவேதான்  'அரசியல் தீர்வென்பது அரசியல் வாதிகளுக்குரிய தீர்வாக அமையாது  மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும்' என நாம்   வலியுறுத்துகின்றோம்.  நிரந்தரமான அரசியல் தீர்வென்பது நாட்டின் சகல மக்களுக்குமான தீர்வாக இருக்க வேண்டும். அது மக்கள் மத்தியில் நிலவுகின்ற இன, மத, மொழி ரீதியான பாரபட்சங்களை ஒழித்து, சமத்துவமான சகவாழ்வை உருவாக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெலிவித்தார்.

NFGGயின் வருடாந்த பேராளர மாநாடு ‘ அனைவருக்குமான அரசியல் தீர்வை நிரந்தர தீர்வாகும்’ என்ற தொனிப்பொருளில்  கிண்ணியாவில் இடம்பெற்றது. இதில், விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்தர். பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்தாதவது,

“அரசியல் தீர்வு என்பதும்,  அதனடிப்படையில் நாட்டிற்கான ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதும் தேசிய அரசியலில் இன்று பிரதான பேசுபொருளாக மாறியிருக்கின்றது.  இதனை சாதித்துக் காட்டுவோம் என வாக்குறுதியினை ஒவ்வொரு அரசாங்கமும் அளித்திருந்தும் எவரும் அதனை இதுவரை எவரும் செய்து  முடிக்கவில்லை. ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான அர்த்தபூர்வமான அணுகு முறைகளைக்கூட இன்னும் காணவில்லை. இந்த இடத்தில் ‘அனைவருக்குமான அரசியல் தீர்வே  நிரந்தரமான தீர்வாகும்’ என்ற தலைப்பு மிகவும் முக்கியமானதும் பொருத்தமானதுமாகும்.

‘அனைவருக்குமான தீர்வென்பது’ இங்கு ஊன்றிச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் கடந்த கால அனுபவங்களை மீட்டிப்பார்க்கின்ற பொழுது அரசியல் தீர்வாக பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட விடயங்கள் எதுவும் 'அனைவருக்குமான தீர்வாக அவை இருக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டவில்லை.  ஒரு இனத்தை அல்லது பிரதேசத்தை முதன்மைப்படுத்துவதாகவே தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. 1987 இல் கொண்டு வரப்பட்டு, சட்டமாக்கப்பட்ட அரசியல் தீர்வு இதற்கு நல்ல உதாரணமாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியலைப்புத் திருத்தம் அவசரமாகக்கொண்டு வரப்பட்டது. அதுவரை தனித்தனி மாகாணங்களாக இருந்த வடக்கும் கிழக்கும், கிழக்கு மக்களின் விருப்பத்தைக் கேட்டறியாமலே இணைக்கப்பட்டன. இதனால் கிழக்கு முஸ்லிம்களின்  அரசியல் பலம் ஒரே நாளில் சிதைக்கப்பட்டது. வடகிழக்கு மாகாண அரசு உருவாக்கப்பட்டது. இறுதியில் அதுவும் இயங்க முடியாத நிலையில் முடங்கியது. இப்பொழுது இயங்குகின்ற மாகாண சபைகளோ அல்லது அதன் மூலம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களோ அர்த்தபூர்வமான எந்த தீர்வுகளையும் கொண்டு வந்ததாகவும் தெரியவில்லை. ஒரு பிரதேசத்தின்  அல்லது சமூகத்தின் நலனை மாத்திரம் முதன்மைப்படுத்திய வகையில்  கொண்டு வரப்பட்ட அந்த தீர்வு இன்று அர்த்தமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது. எனவேதான் நாட்டிற்குரிய அரசியல் தீர்வென்பது சகல மக்களின் பிரச்சனைகளையும் உள்வாங்கிய நீதியான ஒரு தீர்வாக முன்வைக்கப்பட வேண்டும்.

அரசியல் தீர்வைப்பற்றி பேசுகிற சிலர்  அவ்வப்போது இன்னொரு பிழையான கருத்தொன்றையும்  முன்வைக்கிறார்கள். 'போராட்டம் நடத்தியவர்களுக்கே முதன்மை இடம்; ஏனையவர்கள் கணக்கிலெடுக்கப்படத் தேவையில்லை’ என்கிறார்கள். இது ஒரு பிழையான அணுகு முறையாகும். ஏனெனில்,  நாட்டிற்கான அரசியல் தீர்வை கொண்டு வரும் முயற்சி என்பது ஒருபரிசளிப்பு விழா போன்றதல்ல. போராடியவர்கள், வென்றவர்கள், தோற்றவர்கள்  என்று பார்த்து, முதல் பரிசும் ஆறுதல் பரிசும் வழங்குகின்ற நடவடிக்கையாக இது அமைந்து விட முடியாது.  ‘தேவையுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப் போகின்றவர்கள்’  என அனைத்து  மக்களது நலன்களையும் சமனாக மதிக்கும் வகையில்  அரசியல் தீர்விற்கான  அணுகு முறைகள் அமைய வேண்டும்.

மேலும்,  அரசாங்கத்திற்கு நெருக்கமான கட்சிகள் அல்லது அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் வகையிலும் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்ற பிழையான அணுகுமுறைகளையும் அவதானிக்க முடிகிறது. எனவேதான்  'அரசியல் தீர்வென்பது அரசியல் வாதிகளுக்குரிய தீர்வாக அமையாது  மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும்' என்று நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். 

 எனவே நாட்டு மக்களின் பொதுவான பிரச்சனைகளையும் தேவைகளையும் அடையாளப்படுத்த வேண்டும். அது போலவே ஒவ்வொரு இனத்தவர்களின் தனித்துவமான , நியாயமான  தேவைகள், அபிலாசைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அந்த பிரச்சனைகளுக்கும்  தேவைகளுக்கும்  தீர்வாக அமைகின்ற திட்டங்களை உருவாக்க வேண்டும். அந்தத்திட்டங்களை அமுல் படுத்தக்கூடிய சட்டங்களையும்  அரசியல் சாசனத்தையும்  உருவாக்க வேண்டும்.

 வடகிழக்கைப் பொறுத்த வகையில் அங்கு வாழும் மக்கள் எதிர் நோக்கும் பொதுவான பிரச்சனைகளும் இருக்கின்றன,  பிரத்தியேகமான பிரச்சனைகளும் இருக்கின்றன. மொழி,காணி,வளப்பங்கீடுகள், கல்வி வாய்ப்புக்கள் ,  அரச நியமனங்கள் , கலாச்சார தனித்துவங்களுக்கான பாதுகாப்பு என அந்தப்பிரச்சனைகள் பட்டியல் படுத்தப்பட முடியும் . இவற்றுக்கான தீர்வுகளை  கொண்டு வராத எந்தத்தீர்வும் மக்களுக்கான தீர்வாக அமைய முடியாது, அது  நிரந்தரமான அர்த்தபூர்வமான தீர்வாகவும் முடியாது. 

அது போலவே வடகிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு என்கிற விடயமும் மிக முக்கியமானது. 'வடகிழக்கு இணைக்கப்படாத எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,  இந்தக்கோரிக்கையானது கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைக்கின்ற ஒரு பாரதூரமான ஒரு விடயமாகும். வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கத்தக்கதாகவே மக்களின் பிரச்சனைகளுக்கான  தீர்வுகளை  காண முடியுமென்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில் மக்களின பிரச்சனையாக நாம் அடையாளப்படுத்தும் எந்தவொரு விடயத்தினையும் தீர்ப்பதற்கு வடகிழக்கு இணைப்பிற்கான அவஸ்யப்பாடுகள் எதனையும் காண முடியவில்லை. எனவேதான், வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்கும் நிலையில், அரசியல் தீர்வைக்காண்பதே நீதியானதும் நடைமுறைச்சாத்தியமானதும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இதனை தமிழ் அரசியல் தலைமைகளிடம் நேரடியாக வலியுறுத்தியும் பொதுத்தளங்களில் திரும்பத்திரும்ப பேசியுமிருக்கிறோம். அத்தோடு வடமாகாண சபையிலும் ஒரு பிரேரணையை முன்வைத்து எமது நிலைப்பாட்டினை பதிவு செய்திருக்கிறோம்.

 கடந்த 30 வருடங்களில் நாட்டின் அரசியல் சூழ்நிலை ஏராளமான மாற்றங்களை கண்டிருக்கிறது. இன ரீதியான அச்சுறுத்தல்கள், மத கலாச்சார ரீதியான அடக்குமுறைகள் என்பன நாடு பூராகவும் பரவியிருக்கிறது. பொருளாதார பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. பெரும்பான்மையினரின் இடங்களிலுள்ள சிறுபான்மையினர்களின் வர்த்தக நிலையங்கள் மட்டும் தீப்பற்றி எரிகிறது. முஸ்லிம் தமிழ் கிரிஸ்தவ மக்களுக்குரிய வணக்கஸ்தலங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் பரவி வருகிறது. அடுத்த சிறுபான்மை இனம் 'எதை உண்ண வேண்டும்? எதை உடுக்க  வேண்டும்?' என்பதைக்கூட பெரும்பான்மை இனமே தீர்மானிக்கின்ற தனி மனித சதந்திரம் பற் போயிருக்கிறது. தமிழ் மொழி அரச கரும மொழியாக சட்டத்திலுள்ள போதும் அது இன்று அர்த்த பூர்வமாக நடைமுறையிலில்லை.

எனவே வடகிழக்கை மாத்திரம் முதன்மைப்படுத்திய ஒரு அரசியல் தீர்வு நிரந்தரமான ஒன்றாக முடியாது. முழு நாட்டு மக்களும் எதிர்நோக்குகின்ற பொதுப்படையான பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குடி மக்களின் ஒவ்வொரு விடயத்திலும் பாதிப்பு செலுத்தியிருக்கிறது. மாறி மாறிவந்த அரசாங்கங்களின் ஊழல்களும்  துஸ்பிரயோகங்களும் பொறுப்பற்ற பொருளாதார நடைமுறைகளும் நாட்டை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியிருக்கிறது. இது தனி மனித முன்னேற்றத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. நாட்டின் கனிசமான மக்கள் தொகையினரை வறுமைக்குள் தள்ளியிருக்கிறது. அடிப்படைத்தேவைகளுக்காக மக்கள் அன்றாடம் போராட வேண்டிய நிலை அதிகரித்து வருகிறது. எனவே இந்த நிலமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது  நாட்டு மக்களின் பெரும் எதிர் பார்ப்பாகும். நாட்டிற்குரிய அரசியல் தீர்வு இதனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

 எனவே நிரந்தரமான அரசியல் தீர்வென்பது நாட்டின் சகல மக்களுக்குமான தீர்வாக இருக்க வேண்டும். அது மக்கள் மத்தியில் நிலவுகின்ற இன, மத, மொழி ரீதியான பாரபட்சங்களை ஒழித்து, சமத்துவமான சகவாழ்வை உருவாக்க வேண்டும். சட்டமென்பது பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாரபட்சங்கள் ஏதுமில்லாமல் சமமான பாதுகாப்பை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டும். 
 'இது எனது நாடு; எனக்கும் சமமான உரிமைகளும், பாதுகாப்பும் உண்டு;  எனது உழைப்பிற்கும் திறமைக்குமான சமமான வாய்ப்புகளும் இங்கே கிடைக்கும் என்கிற மனோநிலையினை ஒவ்வொரு குடி மகனினது உள்ளத்திலும் அந்த தீர்வு  உருவாக்க  வேண்டும். இவ்வாறான ஒரு புதிய சமத்துவமான சக வாழ்வு நிறைந்த  சமூக சூழ்நிலையினை உருவாக்குகின்ற அரசியல் தீர்வொன்றே அனைவருக்குமான நிரந்தரமான தீர்வாக முடியும்”.

1 comment:

  1. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதே ஒரு தேசத்துக்கு அதன் தேசியக்கொடியின் உள்ளடக்கம்.

    கோணலான தராசால் நிறுக்கப்பட யாரும் விரும்ப மாட்டார்கள்.

    இதற்கான நடைமுறை உதாரணம் சிங்கத்தின் வாளுக்கு எதிரான  புலிகளின் துப்பாக்கிப் போராட்டம்.

    மிருகத்தனமான ஆட்சிகளால் கொண்டுவர முடியாத நிலையான அமைதியை, அம்மிருகங்களையும் மனிதர்களையும் படைத்து  அவையவர்களுக்கான வாழ்க்கை வசதிகளையும் அளித்து வாழும் முறைகளையும் காட்டித் தந்த அந்த இறைவனின் ஆட்சியை அமுல் நடாத்துவதாலேயே அது இயலும்.

    "முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்."
    (அல்குர்ஆன் : 4:135)

    ReplyDelete

Powered by Blogger.