Header Ads



முஸ்லிம்களின் பிரச்சினை, பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு - ரிஷாட், கபீர் பங்கேற்பு!

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஏற்பாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் , தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை , கொழும்பு தெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல்,மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல் , கொல்லன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கான வீடமைப்பு திட்டம் , முல்லைத்தீவில் மீள்குடியேறும் முஸ்லிம்களது காணிப்பிரச்சினை ,மஹரகமையில் கபூரிய அரபுக்கல்லூரிக்கு அருகிலுள்ள கொழும்பு சாஹிராவின் காணியில் ஆரம்ப பாடசாலை அமைத்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர்கான் தெரிவித்தார்.

தம்புள்ளையில் முஸ்லிம்களுக்காக பள்ளிவாசலை அமைப்பதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவகவினால் அடையாளம் காணப்பட்டுள்ள காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தூதுக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்குரிய தரப்பினருடன் பேசி விரைவில் சுமூகமான தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதமர் உறுதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெற்கில் முஸ்லிம் ஆண் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை பெற்றுத்தருவது, கொலன்னாவைப்  பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலை ஒன்றை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன . உரிய காணிகளை அடையாளம் கண்டதும் இத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிடப்பட்ட மௌலவி ஆசிரியர் நியமனம் தாமதமாகுவது குறித்து தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து தான் ஏற்கனவே பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மஹரகமையில் சாஹிராக்கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மற்றும் விளையாட்டுத்திடலை அமைப்பதற்கு நகர அதிகார சபையின் அங்கீகாரத்தை பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விரைவில் முஸ்லிம்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் அவரது  செயலாளர் சமன் ஏக்க நாயக்கவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் கவுன்சிலின் தலைவர் என்.எம் .அமீன், உபதலைவர் ஹில்மி அஹமத்,செயலாளர் அஸ்கர்கான் ,கொழும்பு சாஹிரா கல்லூரி ஆளுனர்  சபையின் தலைவர் பௌசுல் ஹமீத்,ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

1 comment:

  1. வேலைக்காவாது.............எலெக்சனுக்கு ஒரு பம்மாத்து

    ReplyDelete

Powered by Blogger.