Header Ads



இந்து டாக்டரின் தொழில் தர்மமும், பாகிஸ்தான் நாட்டின் தோற்றமும்

- தமிழில்,, ஹஸன் இக்பால் -

சில தருணங்களில் பெரிதும் கருத்திற்கொள்ளப்படாத, வெகு அற்பமான நிகழ்வொன்று பாரிய விளைவொன்றை பின்னர் ஏற்படுத்த வழிவகுப்பதாக அமைந்து விடும். இதனையே ‘வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனும் கோட்பாடு விளக்குகிறது. 

கருத்திற்கொள்ளப்படாத அவ்வற்ப நிகழ்வு புதிய நாடொன்றின் தோற்றத்திற்கோ, 12 மில்லியன் மக்களினது இடப்பெயர்விற்கோ, சுமார் 2 மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கோ, ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பகிர்ந்துண்ட இரத்த பந்தங்களுக்கிடையே நீங்காத குரோதம் நிலவுவதற்கோ கூட வழிசமைப்பதாக அமைந்து போகவும் கூடும்.  

பாகிஸ்தானிய தனி நாட்டின் ஸ்தாபகரான மொஹம்மத் அலி ஜின்னாஹ்வின் வாழ்க்கைச் சரிதத்தை ஆராயும் தருணம், உலக வரலாற்றில் மிக முக்கியமானதும் மிக காத்திரமானதுமான நள்ளிரவுக்கு இட்டுச் சென்று, வண்ணத்துப்பூச்சி விளைவை மெய்ப்படுத்திய மூன்று நிகழ்வுகளை நாம் இனங்கண்டுகொள்ள முடியுமாகவிருக்கும்.   

ஜின்னாஹ்வின் பாட்டனாரின் தீர்மானம் 

அம்மூன்று நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக, குஜராத்தில் செல்வச் செழிப்பு மிக்க வணிகராகத் திகழ்ந்த பிரேம்ஜி பாய் மேஹ்ஜி தக்கார் எனும் பெயர் கொண்ட ஜின்னாவின் பாட்டனார் பற்றி நாம் அறிந்துகொண்டாக வேண்டும். மீன்பிடித் தொழில் மூலமே அவர் செல்வச் செழிப்பு மிக்கவராக திகழ்ந்தார். இதனால் மத ரீதியான இறுக்கமான கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும், அசைவத்தை புறக்கணிக்கும் அவர் சார்ந்த ‘லோஹனா’ சாதிச் சமூகம் அவரை தம் சமூகத்தை விட்டும் விலக்கி வைத்தது.    

எனவே, அவர் தனது மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு விட்டு தனது சாதிச் சமூகத்துடன் மீளவும் இணைந்துகொள்ள விரும்பினார். இருப்பினும், தாமே ‘இந்து மதத்தின் காவலர்கள்’ என பறைசாற்றிக் கொண்டிருந்த குறித்த சாதியினர் அவர் தமது சாதிக்கு மீளத் திரும்புவதற்கு அனுமதியளிக்க மறுத்தது. இது அவரது மகனான புஞ்சலால் தக்காரின் (ஜின்னாஹ்வின் தந்தை) சீற்றத்தைக் கிளறியது. தமக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய அநீதியும் அவமானமுமாக அதனைக் கருதிய புஞ்சலால் தக்கார் தனது நான்கு மகன்கள் சகிதமாக இஸ்லாமிய மார்க்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார்.  

இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சாதிக்கு மீளத் திரும்ப முயற்சிப்பதும், உயர் சாதிச் சமூகத்தினரால் அதற்கு பலத்த எதிர்ப்பும் தடையும் விதிக்கப்படுவதும் இது முதல் தடவையல்ல. 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்புக்கள் இந்தியாவில் வேரூன்றத் தொடங்கிய காலகட்டத்தில், அவர்களினால் விதிக்கப்பட்ட இறுக்கமான சட்டதிட்டங்களினால் பல இந்துக்கள் தமது மதத்தை தொடர முடியாது போனது. இஸ்லாத்திற்கு பலவந்தமாக மதமாற்றப்பட்டனர்; பலர் இந்தியாவை விட்டும் வெளியேறத் தொடங்கினர்.     

பின்னர் அவர்கள் மீளவும் இந்து மதத்திற்குள் நுழைய விரும்பிய தருணம், உயர் சாதிச் சமூகத்தினர் அவர்களை ‘கொள்கையினை துறந்த கோழைகள்’ (தர்மபிரஸ்தா) என நிரந்தரமாக பெயர் சூட்டி தடுத்து நிறுத்தியதுடன் ஒதுக்கியே வைத்தனர். 

இதனால் குறித்த உயர் சாதிச் சமூகத்தினர் மீது விரோதத்தை வளர்த்துக் கொண்ட குறித்த இந்துக்கள் இஸ்லாத்திற்கு தாமாக விரும்பி மதமாறிக்கொண்டதன் பின்னர் குறித்த உயர் சாதிச் சமூகத்தின் அர்ச்சகர்களை, பூசாரிகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்து தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர். 

இன்றைய இந்திய முஸ்லிம்கள் தமது மூதாதையர்களின் மதமான இந்து சமயத்திற்கு மீளத் திரும்புவதற்கு ஆர்வம் கொண்டவர்களாக இல்லை. சதாப்த காலத்திற்கு முன்னர் தமது மூதாதையர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமும் இழிவும் அதன் பின்னால் விரவி நிற்கும் காரணங்களாக அமைந்திருக்கக் கூடும்.  

நேருவின் கருத்தும் ஜின்னாஹ்வின் எதிர்வினையும் 

இதனையே வண்ணத்துப்பூச்சி விளைவு (Butterfly Effect) என்கிறோம். ஜின்னாஹ்வின் பாட்டனார் தனது சாதிக்கும் மதத்துக்கும் மீளத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தால் ஜின்னாஹ் இந்து சமயத்தைப் பின்பற்றும் ஒருவராகவே நீடித்திருப்பார்; முஸ்லிம்களுக்கான பிரத்தியேக தனி நாடு உருவாக்கப்படுவதில் அவரது அறிவுத்திறம் பங்களித்து இருக்கவும் முடியாது போயிருக்கும். 

1929 இல் ஜின்னாஹ்வின் மனைவி ரத்தான்பாய் பேதித் சமிபாட்டுக் குறைபாடு தொடர்பான சுகவீனத்தால் மரணத்தை எய்தினார். மனைவியின் இழப்பினால் மனதளவில் பெரிதும் துவண்டு போன ஜின்னாஹ் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். அங்கே பெரிய வீடொன்றில் தனிமையில் வாழத் தொடங்கினார். தனிமையில் ஸ்னூக்கர் கேம் விளையாடுவதும் சினிமா திரையரங்கு செல்வதும் என பிடிப்பற்ற வாழ்வொன்று வாழத் தலைப்பட்டார். 

தனது கொள்கை எதிரியான ஜவஹர்லால் நேரு தன்னைப் பற்றி குறித்துக் கூறிய கருத்து தலைவிதியையே மாற்றிப்போடும் என அவர் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ‘ஜின்னாஹ்வின் கதை முடிந்துவிட்டது... இனி அவர் அவ்வளவுதான்’ என இரவு விருந்துபசாரமொன்றில் நேரு குறித்துக் கூறியிருந்தார்.    
    
நேருவின் ஏளனக் கருத்து ஜின்னாஹ்வில் பெரும் சீற்றத்தைத் தூண்டியது. ‘நேருவுக்கு நான் யார் என காட்ட வேண்டும்’ எனும் திடசங்கற்பத்துடன் லண்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார். கொள்கை உறுதியுடனும் புதிய உத்வேகத்துடனும் தனது கட்சியான முஸ்லிம் லீக் கட்சியை இந்தியாவின் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியாக வார்த்தெடுத்தார்.  

இது வண்ணத்துப்பூச்சி விளைவை (butterfly effect) விளக்குகின்ற இரண்டாவது நிகழ்வாகும். ஜின்னாஹ்வின் சீற்றத்தைத் தூண்டும் வகையில் நேரு அவ்வாறான கருத்தொன்றை முன்வைக்காது போயிருப்பின் ஜின்னாஹ் லண்டனிலேயே இருந்திருப்பார்; முஸ்லிம் லீக் கட்சி பலம் பொருந்திய கட்சியாக தோற்றம் பெற்றிருக்காது; பாகிஸ்தான் எனும் தனிநாடு உருவாகியிருக்க மாட்டாது.   

இந்து டாக்டரின் தொழில் தர்மமும், பாகிஸ்தான் நாட்டின் தோற்றமும் 

இந்தியாவின் சுதந்திரமும் பாகிஸ்தானிய தனிநாட்டு உருவாக்கத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜின்னாஹ்வின் தனிப்பட்ட வைத்தியர் டாக்டர் படேல், ஜின்னாஹ்வின் எக்ஸ்ரே அறிக்கையில், பாகிஸ்தான் எனும் தனி நாட்டு உருவாக்கத்தையே இல்லாமல் செய்திருக்கக் கூடிய ஒன்றைக் கண்டறிந்தார்.

ஜின்னாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் வரலாற்று மாற்றங்களை இல்லாமற் செய்திருக்கக் கூடியவாறான  உயிர்கொல்லி நோயின் அறிகுறிகளை ஜின்னாஹ்வின் மருத்துவ அறிக்கையில் டாக்டர் படேல் கண்டறிந்தார். 

ஜின்னாஹ் காச நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்தது. அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று வருடங்களே உயிர்வாழ முடியும் என தெரிவிக்கப்பட்டது. தனது மரணத்திற்கு முன்னதாக வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்யும் பொருட்டு, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பாகிஸ்தானிய தனிநாடு தொடர்பில் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவை வலியுறுத்தினார்.  

பாகிஸ்தானிய தனி நாடு உருவாக்கம் தொடர்பான சரித்திர மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜின்னாஹ்விற்கு காச நோய் ஏற்பட்டிருந்த விடயம் அவருக்கும் அவரது டாக்டருக்கும் இடையில் இரகசியமாகவே பேணப்பட்டு வந்தது. 

இதுவே வண்ணத்துப்பூச்சி விளைவினை (butterfly effect) விளக்கும் மூன்றாவது நிகழ்வாகும். குறித்த எக்ஸ்ரே அறிக்கை மூலம் ஜின்னாஹ்விற்கு காச நோய் இருப்பதைக் கண்டுகொண்ட மருத்துவர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவர் அதுகுறித்து வெளியில் வாய் திறக்கவில்லை. 

ஜின்னாஹ் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதும் ஓரிரு வருடங்களுக்குள் மரணித்து விடுவார் என்பதும் வெளியே பரவியிருக்குமாயின், அது இந்தியாவின் பிரிவினையை தடுத்து பாகிஸ்தான் எனும் தனிநாடு உருவாகாது போயிருக்க வழிவகுத்திருக்கும். 

எனினும், இந்து மதத்தைச் சார்ந்த ஜின்னாஹ்வின் வைத்தியர் தொழில் தர்மத்தை பேணுவதில் தவறிவிடவில்லை. ஜின்னாஹ்வின் நோய் பற்றிய விவகாரம் வெளியில் கசிந்திருந்தால் காந்தியும் பிரித்தானிய அரசும் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களுக்கு தனிநாடாக பாகிஸ்தானை பிரித்து வழங்கும் நடவடிக்கைகளை தாமதப்படுத்தி இருக்கக் கூடும். ஜின்னாஹ்வின் மறைவின் பின்னர் அதனைத் தட்டிக்கழித்திட தீர்மானித்திருக்கவும் கூடும்.   

Gladiator திரைப்படத்தில் Maximus எனும் பிரதான கதாப்பாத்திரம் ஓரிடத்தில் “நாம் வாழ்வில் செய்யும் அற்ப விடயத்தின் பிரதிபலிப்பும் விளைவுகளும் முடிவிலி காலம் வரை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என கூறியிருப்பார். இன்று நாம் அன்றாடம் செய்கின்ற அற்ப செயற்பாடுகள் உலகின் எல்லையற்ற எதிர்காலத்தில் எவ்வகையான பிரதிபலிப்புக்களை, தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி நாம் அறிய மாட்டோம். 

தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது, நூற்றாண்டுகளின் பின்னர் மில்லியன் கணக்கான மக்களின் தலைவிதியை மாற்றியமைப்பதற்கு வழிவகுக்கும் என  ஜின்னாஹ்வின் பாட்டனார் சற்றும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.  

No comments

Powered by Blogger.