February 11, 2019

முஸ்லிம்கள் பற்றி வரும், செய்திகள் கவலை தருகின்றன - விடிவெள்ளி ஆசிரியர் வேதனை

கினியம இக்ராம் தாஹா  எழுதிய "உரிமைக் குரல்" சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா குளி/இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடை பெற்றதது. இஹல கினியம மு.ம.வி தரம் 6 மாணவன் எம்.எம்.முஹம்மது முப்தி அவர்களின் அழகிய கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இவ்விழாவிற்கு பாடசாலையின் அதிபர் எஸ்.டி.எம்.ஹாசிம் தலைமை தாங்கினார். வரவேற்புரையை நூலாசிரியரின் சகோதரர் குளி/எதுன்கஹ கொட்டுவ மத்திய கல்லூரி அதிபர் எம்.ரி.எம் தஹ்லான் நிகழ்த்தினார்.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்த விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் உரையாற்றுகையில்,.

நான் இவ்வளவு தூரம் பயணித்து இக் கிராமத்தில் நடைபெறும் விழாவுக்கு வருகை தந்தமைக்கான காரணம் இக்ராம் தாஹா போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதனாலேயாகும்.
 பெரும்பான்மை சமூகத்திற்குள் சிதறி வாழ்கின்ற இது போன்ற பிரதேசங்களிலிருந்து இவ்வாரான எழுத்தாளர்கள் வருவதென்பது உண்மையிலே வரவேற்கத்தக்க,பாராட்டப்பட வேண்டிய,ஊக்குவிக்கப் படவேண்டிய விடயம்.அந்த வகையில் இந்த ஊரே கூடி,இந்த ஊரின் கல்வி வளர்ச்சிக்காக இயங்குகின்ற  ஒரு அமைப்பு முன் வந்து இந்தூலை வெளியிடுவதென்பது மிகவும் சந்தோசமான விடயம்.

இங்கு இருக்கின்ற பெற்றோர்களே..உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இக்ராம் தாஹா போன்ற  எழுத்தாளர்களாக உங்கள் பிள்ளைகளை உருவாக்குங்கள்.இவ்வாரான சிந்தனையாளர்களாக, சமூகப் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருபவர்களாக நீங்கள் உங்கள் பிள்ளைகளை உருவாக்குங்கள்.எல்லோரும் வைத்தியர்களாக,சட்டத்தரணிகளாக, பொருளியலாளராக வருவது என்ற அந்த பாரம்பரிய  இலட்சியங்களிலிருந்து வெளியே வாருங்கள்.உங்களுடைய பிள்ளைகளை வித்தியாசமான துறைகளில் வழி நடத்துங்கள்.

குறிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை கண்டிப்பாக ஊட்டி வளருங்கள்.இன்று இந்த சமூக ஊடகங்கள் குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகள் வந்த பிற்பாடு, அதிலே பல நன்மையான காரியங்கள் இருந்தாலும் கூட இன்று  எங்கள் பிள்ளைகளை கல்வியை விட்டும்,குறிப்பாக வாசிப்புப் பழக்கத்தை விட்டும்  மிக இளவயது முதல்   தூரமாக்கின்ற விடயமாக கைத்தொலைபேசி இருப்பது மிகவும் கலலைக்குரிய விடயம்,பெற்றோர்கள் பிள்ளைகள் கரைச்சல் படுத்தினால் உடனடியாக போனைக் கொடுப்பதை தீர்வாகப் பார்க்கிறார்கள்.ஆனால் அது தற்காலிகத் தீர்வு.இது நீண்டகாலத் தீர்வு அல்ல,இது நீண்ட காலத்தில் அந்தப் பிள்ளையை பாதிக்கச் செய்யும்.

 வாசிப்புப்  பழக்கம் தான்.வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தாளும் சமாளிக்கும் தைரியத்தை இந்த வாசிப்புப் பழக்கம் உங்களுக்குத் தரும். ஆயிரம் அறிஞர்கள் எழுதுகின்ற இந்த புத்தகங்களை வாசித்தால் நிச்சயமாக அந்த ஆயிரம் அறிஞர்களின் சிந்தனையும் உங்களுக்கு வரும்.நீங்களும் அப்படி சிந்திப்பீர்கள்.

இன்று துரதிஸ்டவசமாக எங்கள் சமூகம் மோசமான சிந்தனையில் சென்று கொண்டிருக்கிறது. மிகத் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.  கடந்த சில வாரங்களாக முஸ்லிம்கள் பற்றி எங்களுக்கு வரும் செய்திகள்  கவலை தருகின்றன. உங்கள் பிள்ளைகல் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.அவர்கள் எந்த சிந்தனையில்  இருக்கிறார்கள்.போன் பார்ப்பதென்றால் எதைப் பார்க்கிறார்கள்?நேரம் என்ன? இரவில் வீட்டை விட்டுப் போகிறாரா? எத்தனை மணிக்கு வருகிறார்?விளையாடப் போகிறாரா?வேறு ஏதும் செய்கிறாரா? கண்டிப்பால அவதானமாக இருங்கள்.

இளைஞர்கள் போதைக்கு  அடிமையாகி இருக்கிறார்கள்.அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.எனவே இவ்வாறான எழுத்துக்களை கொண்டுவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.இக்ராம் தாஹா அவர்களுக்கு  வாழ்த்துக்கள் .விடிவெள்ளிப் பத்திரிகையில் எழுதியமைக்கு நன்றிகள்.தொடர்ந்தும் இவ்வாறான படைப்புக்களைப் படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."

தனது வாழ்த்தைத் தொடர்ந்து  மர்ஹூம் ஹாசிம் நானாவைப் பற்றியும் அவருடைய சேவை பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் விடிவெள்ளியின் பிரதம ஆசிரியர்.

இந்நூலில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம்,விடிவெள்ளி ,தினகரன்,வீரகேசரி,மத்திய கிழக்கு வீரகேசரி,நவமணி,சுடர் ஒளி,மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் பூங்காவனம் சஞ்சிகையிலும் பிரசுரமான நூலாசிரியரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment