Header Ads



சவுதி சிறையில் உள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை - இளவரசர் உத்தரவு


சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 

காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி என இந்தியா அறிவித்த காரணத்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சவுதி அரேபியாவின் இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு உதவும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நெருக்கமான நாடு என்றும், பாகிஸ்தானுடன் உறவு தொடரும் என்றும் சவுதி இளவரசர் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முகம்மது பின் சல்மானிடம் தெரிவித்தார்.

சவுதி அரேபியா சிறைகளில் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பல்வேறு குற்றவழக்குகளில் விசாரணை கைதியாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இதனை ஏற்ற முகம்மது பின் சல்மான் அல் சவுத், சவுதி அரேபியா நாட்டு சிறைகளில் உள்ள 2,107 கைதிகளை கருணை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யுமாறு இன்று உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்தார். மேலும் மீதமுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக சவுதி அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.