Header Ads



106 ஐ எட்டிய, புளிச்சாக்குளம் உமர் பாரூக்


1913.02.12 எனக்கு பதிவுச் சான்றிதல் கிடைத்தது.

1913.02.17 இல் செ.சுப்பிரமணியம் என்ற முதல் மாணவனோடு இனமத பேதமின்றி 30 ஆண் பிள்ளைகளை முதலில் உள்வாங்கினேன். 

உலகத்தில் உலா வர ஆரம்பித்தேன். அழகானஆற்றோரம், பசுமை நிறைந்த வயல்வெளி, கண்ணைக் கவரும் களப்பு என்ற எல்லை எனக்கு அமைந்தது.

திரு.அல்பிரட் ஐயா அவர்கள் முதல் தலைமை ஆசிரியராக என்னை  வழிநடாத்தினார். இரண்டு ஆசான்கள் ஆர்வமாய்  வழியமைத்தார்கள்.

ஓலைக் குடிசையிலும் பரப்பிய மண்ணிலும் அறிவுநாடி என்வசம் வருவோரை ஏற்றுக் கொண்டே என் குடும்பத்தை பெரிதாக்கினேன். இனப்பிரிவு மதச்சார்பு என்று எண்ணியதில்லை அன்று தொடக்கம் இன்றுவரை.

என்னை வழிநடாத்திய தலைமை ஆசிரியர்கள் காலத்திற்குக் காலம்  மாறினார்கள். ஆசான்குழாத்தினர் படிப்படியாக பெருகினார்கள். ஊரவர்கள் ஒற்றுமையாக ஒத்துழைத்தார்கள். 

ஓலைக் கொட்டில்கள்  கட்டிடங்களாக  கம்பீரமாகின. இலக்குகள் நோக்கி என்னிடம் வந்தோரை சீரமைத்து செப்பனிட்டு சிறப்பாய் வாழும் சீமான்களாய் வெளியாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

என்வசம் வந்த ஏராளமானோர் பட்டம் பெற்று பாரிலே பலசேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈர்ஐம்பது வருடத்தையும் தாண்டி கல்வியிலும் கலை திறனிலும் விளையாட்டிலும் ஒழுக்க விழுமியத்திலும் சமயப் பண்பாட்டிலும் பல தலைமுறைகளை நான் தந்து கொண்டுதானிருக்கிறேன்.

இப்போது நான் நூற்றாறு அகவையை அடைந்து விட்டேன். அதிபராய் அல்ஹாஜ் எம்.யூ.எம்.சரீக் அவர்கள் என்னை அன்பாய் வழிநடாத்துகின்றார். வசதிகள் தேடித்தேடி தருகின்றார். நாற்பத்து நான்கு ஆசான்கள் நலமாய் என்னை பாதுகாக்கின்றார்கள். பெற்றோர் என்னை முழுமையாய் பராமரிக்கின்றார்கள். முப்பதில் ஆரம்பித்த மாணவர்கள் அப்பப்பா... ஆயிரத்தைத் தாண்டிவிட்டார்கள்.

புத்தளம் மண்ணின் முதல் முஸ்லிம் பாடசாலை என்ற புகழ் எனக்கே உண்டு.

அன்பானவர்களே...

உங்களைப் போன்ற எத்தனையோ தலைமுறைகளை தலைநிமிர்ந்து வாழ வழியமைத்து விட்டேன். 

இனிவரும் தலைமுறைக்கும் என் சக்தியை நான் கொடுப்பேன். 

ஆனால்....

இனிவரும் தலைமுறைக்கு என்னிடம் இருக்க இடமில்லை. ஓடி விளையாட  மைதானம் சீரில்லை. உயர்பிரிவில் தொழிநுட்ப வசதியில்லை. கூடுவதற்கு மண்டபமில்லை. இப்படி எத்தனையோ குறைகளை நான் தாங்கிக் கொண்டுதானிருக்கிறேன். 

2019.02.17 இன்று நூற்று ஆறு வருட பிறந்த நாளைக் கொண்டாடும் என்னை இனிவரும் காலங்களில் வளம் நிறைந்த உமர் பாரூக் என எல்லோரும் பரவசமடைந்து பார்க்க வழியமைத்து தாருங்கள் என தாழ்மையாய் வேண்டிக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் உமர் பாரூக்
ம.வி.

(M.U.M.SHAJAHAN)

No comments

Powered by Blogger.