Header Ads



"ஜனநாயகம் மீறப்பட்டு, அரசியல் சாசனம் மிதிக்கப்பட்டு, மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்கப்பட்டு"

'ஜனநாயகம் மீறப்பட்டு, அரசியல் சாசனம் மிதிக்கப்பட்டு, மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்கப்பட்டு, அரசியல் சதி அரங்கேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு ஆதரவளித்து , அமைச்சுப் பதவிகளை சன்மானமாகப் பெற்று, அதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடினார் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதியொருவர். அந்த அரசியல் அராஜகம், ஜனநாயக போராட்டங்களாலும் நீதித்துறையின் சுயாதீன தீர்ப்புகளினாலும் தோற்கடிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அந்த நபர் , தவறே செய்யாத அப்பாவி போல அடுத்த அரசாங்கம் எப்படி அமையும் என்பது பற்றி ஊடகங்களில் கருத்துச்சொல்லி வருகிறார். இவரை போன்றவர்கள் அரசியல் ஆரூடம் சொல்வதை தவிர்த்து, துரோகத்தனங்களுக்கு துணைபோவதனை இனி வரும் காலங்களிலாவது நிறுத்த வேண்டும். கடந்த கால நடவடிக்கைகளுக்காக மக்களிடம் பகரிங்க மன்னிப்பு கோர வேண்டும்.' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதியினால் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதியின் காரணமாக உருவான அரசியல் நெருக்கடி , நீதிமன்ற தீர்ப்புகளின் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“கடந்த 26ம் திகதி மிகப்பாரிய அரசியல் சதியொன்றினூடாக சட்டவிரோதமான முறையில் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் பிரதமராக ஜனாதிபதியினால் சடுதியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியினை இதே சதிக்கும்பல் மேற்கொண்டிருந்தது. அம்முயற்சியும் கைகூடாமல் போன போது ஜனநாயக விரோதமாக பாராளுமன்றம் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் சட்ட விரோதமான முறையில் பாராளுமன்றம் கலைக்கவும் பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையிலும் கூட , இக்கும்பல் பராளுமன்றத்திற்குள்ளேயே சபாநாயகரைக் கூட தாக்கும் அளவுக்கு காடைத்தனங்களை அரங்கேற்றி பாராளமன்ற ஜனநாயகத்தை முடக்கியது. இந்த அராஜக அநியாயங்களைக் கண்டு முழு நாடும், ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கவலைப்பட்டனர். விரக்தியடைந்தனர். சர்வதேச சமூகம் கூட தமது கவலைகளையும் கண்டனங்களையும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தது.

கடந்த 50 நாட்களில் எமது நாடு வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார ரீதியிலும் ஏனைய விடயங்களிலும் மேலும் பின்னடைவுகளை கண்டது. தேசப்பற்றுள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள எவருமே இது குறித்து கவலைப்படாதிருந்திருக்க முடியாது. ஆனால் மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரும், இந்த ஜனநாயக - சட்ட விரோதமான அரசியல் சதிக்கு முழு ஆதரவு வழங்கியிருந்தார். மஹிந்த ராஜபக்ச சட்டவிரோதமான முறையில் பிரதமராக கொண்டு வரப்பட்டமையினை இவர் தொடர்ச்சியாக நியாயப்படுத்தி வந்தார். அதற்கு சன்மானமாக சட்ட விரோத அமைச்சரவையில் பதவியும் பெற்றுக் கொண்டார். முழு நாடும் பொருளாதார மற்றும் ஏனைய நெருக்கடியில் மூழ்கிக், கொண்டிருந்த போது, இவரது அடிவருடிகள் இதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடி மகிழ்ந்திருந்தனர். இறுதியாக இவர்களின் சதி முயற்சிகள் அனைத்துமே தோற்றுப்போன நிலையில் மஹிந்தவிற்கு வக்காலத்து வாங்கும் வகையில் பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாக வேண்டும் என தனது சொந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியிருந்தார். மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோகம் இழைத்த தமது தரப்பின் நடவடிக்கைக்கு , இதே மக்களின் ஆதரவினை கோரும் அரசியல் கோமாளித்தனமாகவே இதனை மக்கள் பார்த்தனர்.

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களினாலும், சிவில் சமூக அமைப்புகளின் விழிப்புணர்வு அழுத்தங்களினாலும், நீதித்துறையின் மிகத்துணிகரமான சுயாதீன தீர்ப்புகளினாலும், இந்த அரசியல் சூழ்ச்சிகளும் துரோகத்தனங்களும் இன்று தோற்கடிக்கப்படுள்ளன. மக்கள் நலனிற்கும் அரசியல் யாப்பிற்கும் விரோதமென தெரிந்திருந்தும் தனது பட்டம் பதவிகளுக்காக இந்த அரசியல் சதிகளுக்கு துணைபோன குறித்த அரசியல்வாதி அதற்காக இப்பொழுது வெக்கப்பட்டு, கவலைப்பட்டு மக்களிடம் மன்றாடி மன்னிப்புக்கோர வேண்டும். அதனை விடுத்து வெட்கமின்றி, இந்த சதியில் சம்பந்தமே இல்லாத ஒரு அப்பாவி போல, ‘அடுத்தகட்ட ஆட்சி எவ்வாறு அமையும்’ என இவர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.

இது நகைப்புக்கிடமானது.ஏனெனில், எல்லா வகையிலும் தோற்றுப்போன மைத்திரிக்கு , ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதை விட வேறு வழி கிடையாது. இது இப்போது எல்லோரும் அறிந்த விடயமாகும். இதனை மிகப்பெரிய அரசியல் ஆரூடமாக இந்த அரசியல் வாதியிடமிருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் மக்களுக்கு இல்லை.

சிறு பிள்ளைக்கும் தெளிவாக விளங்கக்கூடிய விடயங்களை முண்டியடித்துக்கொண்டு இவர், இப்பொழுது விளக்கமளிப்பதானது, இத்தனை நாட்களாக நாட்டில் நடந்தேறிய ஜனநாயக விரோத அரசியல் சதி நடவடிக்கைகளுக்கு துணை போன தமது நடவடிக்கைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே தெரிகின்றது. மக்களுக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமாக , தமது சுய இலபங்களுக்காக துரோகத்தனங்களுக்கு துணைவதனை இனி வருங்காலங்களிலாவது இவரைப்போன்ற அரசியல் வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். முழு நாட்டையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல் துரோகத்தனங்களுக்கு துணை நின்ற அத்தனை பேரும் மக்களிடம் பகிரங்க  மன்னிப்பு கோர வேண்டும்”  

3 comments:

  1. thank you for your this report..
    however u have a big job too to lock him permanently in politics...
    You are the one only can do this, cz he is the most culprit of the Muslim community like a good child

    ReplyDelete
  2. ஹிஸ்புல்லாஹ் சேர் மீதுள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடே பொ. அப்துர்ரஹ்மானின் அறிக்கை என சிலர் ஜனநாயக ரீதியாக கருத்து தெரிவிக்கின்றனர்

    ReplyDelete
  3. Mr. Rahman +/- always attack to Mr Hisbullah

    ReplyDelete

Powered by Blogger.