Header Ads



கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற, சகல பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93 ஆவது பயிற்சி நிறைவு விழாவில் இன்று முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்புகளையும் தற்போது தாய் நாட்டுக்கு எதிராக காணப்படும் சவால்கள் தொடர்பிலும் பாதுகாப்பு துறை விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக் காட்டினார்.

மேலும் வரலாற்று காலங்களில் எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த படையெடுப்புகளை விட முற்றிலும் வேறுபட்ட அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது எமது நாட்டின் மீது செலுத்தப்படுவதாகவும் அத்தகைய சவால்களை கண்டறிந்து தாய் நாட்டின் எதிர்காலத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இன்று முற்பகல் தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை இராணுவத்தினர் அபிமானத்துடன் வரவேற்றனர்.

முதலில் இராணுவ நினைவுத்தூபி அமைந்திருக்கும் இடத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கெடட் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பை பார்வையிட்டதன் பின் சிறந்த கெடட் குழுவிற்கு வெற்றிக்கொடியை வழங்குதல் மற்றும் கெடட் அதிகாரிகளுக்கு வாளினை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 06 கற்கை நெறிகளை நிறைவு செய்த 234 கெடட் அதிகாரிகள் இன்று வெளியேறினர்.

இலங்கை இராணுவத்திற்கும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையிலான பல வருட நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை கல்வியியற் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், 750 இருக்கைகளை கொண்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இக்கேட்போர் கூடத்திற்கான செலவு 2,752 மில்லியன் ரூபாவாகும்.

கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

No comments

Powered by Blogger.