Header Ads



அரசியல் சூழ்ச்சியில் மைத்திரி - மஹிந்த குடும்பத்திற்கும் தொடர்பு, என்ன பதவிக்கு ஆசைப்பட்டார்கள் என அம்பலப்படுத்துவேன் - ரணில்

நாட்டை 50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் சூழ்ச்சியின் முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசியல் சூழ்ச்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மட்டும் தொடர்புபடவில்லை. ராஜபக்சவின் முழு குடும்பமும், மைத்திரியின் முழு குடும்பமும் தொடர்புபட்டுள்ளது.

இந்தச் சதித் திட்டத்துடன் ஊடாக அவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பதவிகளுக்கு ஆசைப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தையும் நான் வெளியிடவுள்ளேன். அவர்களின் இந்தச் சதிக்குத் துணைபோன கறுப்பு ஊடகங்களின் பெயர்களையும் வெளியிடவுள்ளேன்.

மஹிந்த அணியைச் சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசியல் சூழ்ச்சியுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார்கள். அவர்களின் விவரங்களையும் வெளியிடவுள்ளேன்.

எமது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு மயிரிழையில் தப்பியுள்ளனர். கட்சியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அவர்களின் விவரங்களை வெளியிடமாட்டேன்.

இந்த அரசியல் சூழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர எமது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடினமாக அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உழைத்தார்கள்.

நீதித்துறையில் அவர்கள் நம்பிக்கை வைத்து செயற்பட்டார்கள். அவர்களின் எண்ணத்தின்படி நாம் வெற்றியடைந்தோம். நாம் எதிர்பார்த்த மாதிரி சர்வாதிகாரம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றது.

இனிமேலும் இந்த அரசியல் சூழ்ச்சிக்கு நாம் இடமளிக்க மாட்டோம். எமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவதானமாக இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.