Header Ads



நாட்டில் உபவேந்தர்களில் மிகச் சிறந்தவர், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்தான்

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் அமைச்சுகளின் நிதியொதுக்கீடுகளையும் சேர்ந்து இருக்கின்ற குறுகிய காலத்துக்குள் முடியுமான உச்சகட்ட அபிவிருத்திகளை செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சுகாதார இராஜாங்க அமைச்சராக பைசால் காசிம் பதவியேற்றத்தை வரவேற்கும் முகமாக நேற்றிரவு (28) நிந்தவூரில் நடைபெற்ற மக்களின் எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசமானது பல தடவைகளாக தங்களது தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தேவைப்படுகின்ற ஒரு நிலையில், பைசால் காசிம் தனது பதவியை தக்கவைத்துக்கொண்டிருப்பதானது அவரது ஆளுமையைக் காட்டுகின்றது.

நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் பைசால் காசிமின் செயற்பாடுகள் கட்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளன. அமைச்சர் என்றவகையில் தனது தொகுதிகளுக்கு அப்பால் பல மாவட்டங்களில் அதிகளவான அபிவிருத்திகளைச் செய்துள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்வுக்கு, நாடளாவிய ரீதியிலிருந்து நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் வருகைதந்து அதற்கு சான்று பகர்ந்தார்கள்.

ஒலுவில் துறைமுகம் இப்போது பாரிய பிரச்சினையாக தலையெடுத்துள்ளது. இங்கு மணலை அகழ்வதற்காக தனிதொரு கப்பலை கொள்வனவு செய்து நிறுத்திவைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றிருக்கிறோம். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில் இங்குள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிசிரத்தையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்துறைமுகம் முழுமையாக மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்படுவதுடன், நுழைவாயிலை அடைத்துள்ள மணலை அகற்றி, அடிக்கடி மணல் அகழ்வதை தடுத்து, போடப்பட்டுள்ள தடுப்புக்கற்களை அகற்றுகின்ற விடயத்தில் நாங்கள் எடுத்துள்ள பொறுப்புகளை முழுமையாக சரிவர நிறைவேற்றிக் கொடுப்போம். 

நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்தான் மிகச் சிறந்தவர் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் சொன்னார். எவ்வித ஊழலும் இல்லாமல் நிர்வாக அடிப்படையில் திறமையாக செயற்படுவதாக அவரைப்பற்றி என்னிடம் பெருமையாக சொன்னார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எப்படியான கற்கைநெறிகளை அறிமுகப்படுதலாம், புதிய கட்டமைப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் விரிவாகப் பேசினோம். பதவியில் இருக்கின்ற சிறிது காலத்துக்குள் இயலுமானவற்றை மிக விரைவாகச் செய்து, கல்வியின் கலங்கரை விளக்கமாக இருக்கின்ற ஒலுவில் பல்கலைக்கழகத்தை மேலும் அபிவிருத்தியடையச் செய்வேன் என்றார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

No comments

Powered by Blogger.