Header Ads



மாலைத்தீவின் ஆட்சி மாற்றத்தில், சந்திரிக்காவின் பங்களிப்பு

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றிலேயே ஜனாதிபதி அப்துல்லா யாமீனை தோற்கடித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்த கூட்டணியை உருவாக்குவதில் பிரதான நபராக முன்னாள் ஜனாதிபதி இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வியடைவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

இலங்கையில் தோற்கடிக்க முடியாது என கருதப்பட்ட மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த 2015ஆம் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்குவதிலும் சந்திரிக்கா குமாரதுங்க முக்கிய பங்காற்றினார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததுடன் எதிர்க்கட்சிகள் நிறுத்திய பொது வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அரசியல் கட்சிகளுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அதில் முக்கிய பங்கை வகித்தார்.

மாலைதீவு நிலைமையும் இதற்கு மாறானதல்ல. மகிந்த ராஜபக்சவை போல் தேர்தல் நடத்தப்படும் போது அப்துல்லா யாமீன் தரப்பு மிகவும் பலமிக்க அணியாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அப்துல்லா யாமீன் எதிரணி அரசியல்வாதிகளை கைதுசெய்து சிறையில் அடைத்தார்.

சில அரசியல்வாதிகளை நாட்டை விட்டுச் செல்லுமாறு அழுத்தம் கொடுத்தார். அது மட்டுமல்லாது, தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றம், பொலிஸ் திணைக்களம் உட்பட மாலைதீவின் பிரதான அரச நிறுவனங்களில் தனக்கு ஆதரவானவர்களை நியமித்தார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு எதிரானவர்களை தகுதி நீக்கம் செய்தார். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் அப்துல்லா யாமீன் வெற்றி பெறுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

அப்துல்லா யாமீன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயது எல்லையையும் நிர்ணயித்தார். மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூம் மற்றும் பிரபல வர்த்தகரான காசிம் இப்ராஹிம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வயது எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.

மாலைதீவின் நடுநிலையான மதவாத கொள்கை கொண்ட அதாலத் கட்சி எதிர்க்கட்சி கூட்டணியில் மூன்றாவது பெரிய அணியாக இருந்த போதிலும் அவர்களிடம் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களோ பொது வேட்பாளரை நிறுத்தும் இயலுமையோ இருக்கவில்லை.

மாலைதீவு ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் தேர்தலில் போட்டியிட தகுதியானவராக இருந்தார்.

அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

எவ்வாறாயினும் கடந்த 26ஆம் திகதி மாலைதீவு உயர் நீதிமன்றம் அவரை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்தது.

மாலைதீவில் அரசியல் கட்சிகள் எதிர்நோக்கிய கடும் நெருக்கடியில் தனித்தனியாக சந்தித்து பேசவும் கட்சிகள் தயங்கின. கட்சிகளுக்கு இடையில் நம்பிக்கை இல்லாததே இதற்கு பிரதான காரணம்.

இவ்வாறான நிலைமையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அந்த கட்சிகளுக்கு இடையில் பாலத்தை உருவாக்கினார்.

2008ஆம் ஆண்டு அப்துல் கையூமை கைவிட்டு அதிகளவானோர் மொஹமட் நசீட் பக்கம் சேர்ந்து கொண்டமையே அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் நம்பிக்கை இழக்க பிரதான காரணமாக இருந்தது.

2008ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மொஹட் நசீட் நட்புறவை கைவிட்டார். இதனடிப்படையில் எதிர்க்கட்சி கூட்டணி கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் அப்துல்லா யாமீனை ஆதரித்தது.

ஆட்சிக்கு வந்த அப்துல்லா யாமீன் ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். எனினும் அதனை எவரும் எதிர்க்கவில்லை. எதிர்த்தவர்களையும் அவர் தன்பக்கம் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், மாலைதீவு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உதவியதை சந்திரிக்கா குமாரதுங்க சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாலைதீவில் எதிர்க்கட்சித் தலைவர்களை இணைப்பதில் சந்திரிக்கா குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை செய்துள்ளார். அவருக்கு இருக்கும் சர்வதேச தொடர்புகள் மற்றும் இலங்கையின் தொடர்புகளை பயன்படுத்தி அவர், மாலைதீவு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அலுவலகம் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையில் தற்போது நடந்து வரும் சம்பவங்கள் தொடர்பில் சந்திரிக்கா ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மாலைதீவில் போன்று இலங்கையிலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தேன். எனினும் அரசாங்கத்தின் சில தலைவர்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்துள்ளனர்.

அது குறித்து கவலையடைகின்றேன். இவர்களுக்கு ஒன்றிணைந்து ஆட்சி செய்வதில் அறிவும் புரிதலும் இல்லை. அப்படியில்லை என்றால், ஜனநாயகம் என்பது என்னவென்று அவர்களுக்கு புரியவில்லை. அனுபவமில்லை.

எவ்வாறாயினும், மாலைதீவில் அது நடக்காது என நான் எதிர்பார்க்கின்றேன்” என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.