Header Ads



ஜனநாயகத்தின் போலி, காவலாளி ரணில் - அனுரகுமார சாடல்

நாட்டின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போதும் ரணில் விக்ரமசிங்க ஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தின் போலி காவலாளி என தெரிவித்த அனுரகுமார, மூன்றரை வருட மோசமான வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் காணப்படும் வழக்கு தொடர்பிலும் அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்தார்.

இந்த மாத நடுப்பகுதியில் இருந்து பெப்ரவரி வரையிலான 3 மாத காலப்பகுதிக்குள் அதிகளவிலான வழக்குகள் வரவுள்ளன. பசிலுக்கு எதிராக இரண்டு வழக்குகள் வரவுள்ளன. 2 கோடி ரூபா சமுர்த்தி நிதியை மோசடி செய்த வழக்கு, மல்வானை வீடு தொடர்பிலான வழக்கு. கோட்டாபயவிற்கு எதிராக இரண்டு வழக்குகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 1140 கோடி ரூபா தொடர்பான அவன்ற் கார்ட் வழக்கு. தாய், தந்தையரின் நினைவிடங்களை அமைப்பதற்காக மக்களின் பணத்தை பயன்படுத்திய வழக்கும் உள்ளது. அந்த வழக்கு விசேட நீதிமன்றத்தில் உள்ளது. நாமலுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் உள்ளன. ஒன்று கவர்ஸ் எனப்படும் நிறுவனத்தில் எவ்வாறு 3 கோடி ரூபா முதலீடு செய்தார் என்பது தொடர்பான வழக்கு. மற்றையது மற்றுமொரு நிறுவனத்தில் ஒன்றரைக் கோடியை முதலீடு செய்தது எவ்வாறு என்பது தொடர்பிலான வழக்கு. அந்த இரண்டு வழக்குகளும் நவம்பர் நடுப்பகுதி மற்றும் டிசம்பர் மாத ஆரம்பத்தில் வரவுள்ளன.

காலியில்  நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.