Header Ads



ஜனநாயகம் கொள்ளையிடப்பட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள, அராஜக நிலைமைக்கு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தி

திருடன் தான் திருடிய பொருளை மீண்டும் ஒப்படைத்தாலும் திருட்டு திருட்டே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 62 லட்சம் மக்களின் வாக்குரிமையையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் கொள்ளையிட்டுள்ளார் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

திருடிய பொருளை ஒரு நபரிடம் கையளித்தால், அனுபவமும் புரிதலும் உள்ள நபர் அப்படியான திருட்டுப் பொருளை பெற்றுக்கொள்ள மாட்டார் எனவும் நிலையில்லாத வியாபாரியே அப்படியான பொருளை பெற்றுக்கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச 46 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர். இவர் 1993ஆம் ஆண்டு தென்மாகாண சபைத் தேர்தலில் இதே போன்ற அரசியல் கொள்ளையில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்.

தனக்கு சட்டவிரோதமான பிரதமர் பதவியை வழங்கும் நேரத்தில் அதனை பெற்றுக்கொள்ளும் தார்மீக உரிமை மகிந்தவுக்கு இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து கொள்ளையிட்ட பிரதமர் பதவியை தான் விரும்பியவருக்கு வழங்க ஜனாதிபதிக்கு முடியாது.

ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரத்தை கைவிட முடியாது. அந்த அதிகாரத்தை வேறு எவருக்கும் வழங்க முடியாது.

நெருக்கடியான நிலைமை ஏற்பட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் 37.2 சரத்திற்கு அமைய சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கின்றது.

நாட்டில் நெருக்கடி காணப்படுகிறது என்ற பிரச்சினை சபாநாயகருக்கு இருக்குமாயின் அது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு இருக்கின்றது.

ஊடகங்கள், மத மற்றும் அரசியல் தலைவர்களுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை நியமிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

சட்டவாதியான ஜீ.எல்.பீரிஸ் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது அறிவு குறித்து கவலைப்படுகிறேன். அவர் 37.2 சரத்தை மீண்டும் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயகம் கொள்ளையிடப்பட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அராஜக நிலைமைக்கு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகிறது. ரணில் விக்ரமசிங்க, இந்த பிரச்சினையை குரோத மனப்பான்மையுடன் நோக்கவில்லை.

அவர் அமைதியாக பிரச்சினை தீர்த்துக்கொள்ளும் நேர்மையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.