Header Ads



தொலைபேசி மூலம், இப்படியும் ஏமாற்றுகிறார்கள்

யாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் தனக்கு வந்த பொய்யான தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை இழந்த நிலையில் யாழ். நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த வழக்கை துரிதமாக விசாரணை செய்து மோசடியின் பின்னணியில் இருப்போரை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் கடந்த மாதம் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

குறித்த அழைப்பில் உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.

அந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாத காலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத் தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த யாழ்.நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.