Header Ads



மகிந்தவின் அலுவலக நிதியை இடைநிறுத்தும் விவாதம் ஆரம்பம் -மகிந்த தரப்பு புறக்கணிப்பு

மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா  பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும்  பிரேரணை இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,  விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,  இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய அவர்,   அரசியலமைப்பிற்கு முரணான வகையில், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச,  பிரதமர் செயலகத்தையும், அரசாங்க வளங்களையும் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, பிரதமராக பதவியேற்ற  பின்னர், கடந்த காலத்தில், உள்நாட்டில்  உலங்குவானூர்திகளில் மேற்கொண்ட பயணங்களுக்காக,   84 மில்லியன் ரூபாவை செல்லவிட்டிருப்பதாகவும், அவர் தகவல் வெளியிட்டார்.

இந்தநிலையில்,  சட்டவிரோதமாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள,  மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு  இடைநிறுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

2
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30  மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின்,  பிரதமர் செயலகத்துக்கான நிதியைக் கட்டுப்படுத்தும், பிரேரணை மீது  இன்று விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும்,  அரசதரப்பு பங்கேற்கவில்லை.

பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை கட்டுப்படுத்துவது  சட்டபூர்வமானதல்ல என்பதால், இது குறித்து விவாதிக்கும் இன்றைய அமர்வை புறக்கணிப்பதாக  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.