Header Ads



"கிழக்கு மாகாண முஸ்லிம்களை, பலமிழக்கச் செய்ய திட்டம்"

கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்தும் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அந்த அதிர்ச்சியிலிருந்து கிழக்கு மக்கள் மீள்வதற்கு முன்பு மேலுமொரு அதிர்ச்சி தகவல் கிழக்கு முஸ்லிம்களை துயரத்துக்குள்ளாக்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முக்கிய பதவிகளிலிருந்து முஸ்லிம்களை அகற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம எடுத்துவரும் நடவடிக்கையே அந்தத் தகவல் ஆகும்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கில் அரச உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அமர்ந்திருந்து நிர்வாக ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளிலும் பலம் பெற்று விடக்கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வடக்கில் தமிழ் மக்கள் பலம் பெற்றுள்ளது போன்று கிழக்கில் முஸ்லிம்கள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதன் பின்னணியாகவும் இது இருக்கலாம்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்த எம்.ரி.எம்.நிஸாம், உள்ளூராட்சி ஆணையாளராகப் பணிபுரிந்த முஹம்மத் சலீம் என்போர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.ரி.எம்.நிஸாம் இடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்துக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம் அமைச்சர்களது ஆட்சேபனையை அடுத்து இறுதி நேரத்தில் தமிழ் உத்தியோகத்தருக்குப் பதிலாக மன்சூர் நியமிக்கப்பட்டார்.

கல்விப் பணிப்பாளராக இருந்த நிஸாம் கிழக்கு கல்வி அமைச்சரின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூராட்சி ஆணையாளராக இருந்த எஸ்.எல்.எம்.சலீம் கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 42 வீதமாக வாழ்கிறார்கள். இதே வீதத்தில் தமிழர்களும் வாழ்கிறார்கள். பெரும்பான்மை இனத்தவரின் பிரதிநிதித்துவம் சுமார் 15 வீதம் மாத்திரமே. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் அதியுயர் தரத்திலான 11 பதவிகளில் 5 பதவிகளை சிங்களவர்களும், 4 பதவிகளை தமிழர்களும் வகிக்கின்ற அதேவேளை முஸ்லிம்கள் இருவரே அப்பதவிகளில் இருக்கின்றனர்.

கிழக்கில் தமிழ்மொழியில் பேசத்தெரியாத உயர் அதிகாரிகளை நியமிப்பது அடிப்படை உரிமை மீறலாகும். ஏனென்றால் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் அம்மக்கள் தமது பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் தமது மொழியிலேயே முன்வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

திருகோணமலையில் தமிழ் தெரியாத ஒரு பெரும்பான்மை இனத்தவரே அரசாங்க அதிபராகச் செயற்பட்டு வருகிறார். இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்கள் நியமிக்கப்படுவது அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்காகவா? எனும் சந்தேகமும் எழுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் இந்த இடமாற்றங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழேயே அமுல்நடாத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கே இந்த ஏற்பாடு எனவும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கூட்டாகச் சேர்ந்து எதிர்ப்பு வெளியிட வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

-Vidivelli-

2 comments:

  1. அரசாங்கத்தை 100% முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரிக்கிறார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் 4 wheel drive களில் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனைகள் மாதிரி ஓடித்திரிகிறார்கள். இப்படி அரசாங்கத்தில் பங்குதாரர்களாக முஸ்லிம்கள் இருந்து கொண்டு, இப்படி ஒப்பாரி வைக்க வெட்கம் இல்லையா?

    ReplyDelete
  2. பிரச்னை அதுவல்ல. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற இவரை மக்கள் ஓரம்கட்டிவிட்டார்கள். அவரை பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்க இந்த நாட்டுத்தலைவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டால் அதன் விளைவு ஒன்று இனவாதமாக அல்லது தகுதியும் திறனுமற்ற தீரமானங்களை எடுத்து நாட்டுக்கும் மக்களுக்கும் கஷ்டத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்துவார்கள். அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் ஆணையை மீறி செயற்பட்ட தலைவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.