October 07, 2018

“அம்மா இல்லாத நேரமாப் பாத்து, அப்பா என்று சத்தமா கூப்பிட்டுப் பாப்பன்”


‘இன்று அப்பா என்னை அடிச்சுப் போட்டார் என்று நண்பிகள் சொல்லும்போது என் அப்பா என்னை அடிக்கவர மாட்டாரா? அப்பா அடிச்சா எப்படி இருக்கும்? என்றெல்லாம் கற்பனை செய்வேன்’.

அப்பா எப்ப வருவார்? அவர் வருவாரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் ஏன் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கிறாள் கனியிசை.

2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையின் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளது. 2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆயிரக் கணக்கான பொது மக்களுடன் வரிசையில் வந்து பேருந்தில் ஏற முற்பட்ட போது இசையாளன் (கனியிசையின் அப்பாவின் இயக்கப்பெயர்) என பெயர் குறிப்பிட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்தான் கந்தசாமி திவிச்சந்திரன். இதுவரை இவர் எங்கே இருக்கிறார் என்ற விவரம் தெரியவரவே இல்லை. இவருடன் சேர்த்து அழைத்துச் செல்லப்பட்ட பலருக்கும் இதே நிலைமைதான். 2009 இறுதி நாட்களில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என அனைவரும் தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.

2009 ஏப்ரல் வருடப்பிறப்பு அன்றுதான் தனது தந்தையை இறுதியாக பார்க்கின்றாள் கனியிசை, அப்போது அவளுக்கு இரண்டரை வயது. தந்தை மாத்தளனில் அவளது தறப்பால் கொட்டிலுக்குள் வரும் போது கனியிசை அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். கடும் வெப்பான நிலைமைக்குள் அம்மை பார்த்திருந்த தனது மகள் தறப்பால் கொட்டிலுக்குள் இருப்பதனை கண்ட அவரது மனம் பட்டபாட்டை அவரது முகம் காட்டிக்கொடுத்தது என்றார் கனியிசையின் தாய் கவிதா. அன்றுதான் இறுதியாக தந்தையும் மகளும் சில மணித்தியாலங்கள் சந்தித்து உரையாடியது. அப்பா வழமையாக வீட்டுக்கு வரும் போது இருக்கின்ற மாதிரி அன்று இல்லை. அவரது முகம் வாடியிருந்தது. மிகவும் கவலையாக இருந்தார். தந்தையின் இந்த நினைவுகள் மாத்திரமே கனியிசையிடம் இறுதியாக எஞ்சியிருக்கிறது.

தந்தையின் புகைப்படம் ஒன்றை மிகக் கவனமாக வைத்திருக்கும் கனியிசை அதனை அவ்வவ்போது பார்த்து தடவி முத்தம் கொடுத்து தந்தையின் நினைவுகளை மீட்டிக்கொள்கின்றாள். மீள்குடியேற்றத்தின் ஆரம்ப நாட்களில் தாயிடம் தந்தையின் தொலைபேசி இலக்கத்தை தருமாறும் அவருடன் பேச வேண்டும் என்றும் அடம்பிடித்திருக்கின்றாள்.

2011 ஆம் ஆண்டு ஒரு நாள் திடீரென கதறி அழத்தொடங்கிய கனியிசை அப்பாவை யாரோ கடத்திச்சென்று சுடுகின்றார்கள் எனக் கத்தியிருக்கின்றாள். அப்போதெல்லாம் தனது வேதனைகளையும், துக்கத்தையும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு மகளை சமாதானப்படுத்துவாள் அவளது தாயார்.

'காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் நினைவுகள் வரும் போது மனம் விட்டு கதறி அழவேண்டும் போலிருக்கும் ஆனால் மகளை எண்ணி எல்லாவற்றையும் மனதுக்குள் புதைத்துவிடுவேன்' என்றார் கவிதா. அப்பா இல்லா குறை மகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே வாழ்கிறேன் என்கிறார் இவர்.

“பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் ஆரம்பத்தில் அனுப்பிய போது சில நாட்கள் சென்று வந்த கனியிசை ஒரு நாள் என்னிடம், என்னோடு படிக்கிற பிள்ளைகளை அவர்களின் அப்பாக்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விடுகினம்,எனக்கும் அப்பா இருந்திருந்தால் அவருடன் நானும் பள்ளிக் கூடம் போவன் என்ன அம்மா என்றாள். அதன் பின்னர் ஆட்டோவில் பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலைக்குள்ளும் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி தினமும் பாடசாலைக்கு ஏற்றிசெல்கின்றேன். மகளின் மனநிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றார் கவிதா.

அப்பா கெதியா என்னிட்ட வந்து சேர வேண்டும் என்று நான் கோவில் திருவிழாக்களில் நேர்த்தி வைத்து நடனம் ஆடுறனான். என்ர அப்பாவை கூட்டிக்கொண்டு போனவர்கள் கெதியெண்டு அவரை விட வேண்டும். மற்ற பிள்ளைகள் எல்லோரும் அப்பா அம்மா என்று சேர்ந்து பள்ளிக் கூடத்தில் நடக்கிற நிகழ்வுகளுக்கு எல்லாம் வருவினம், கோயில்களுக்கு போவினம், சுற்றுலாவுக்கு போகினம், ஜஸ் கீறீம் கடைக்கு போகினம் ஆனால் நான் மட்டும்தான் எங்க போனாலும் அம்மாவுடன் தனிய போறனான். இப்ப என்ர அப்பா இருந்தாள் என்ர நடனத்தை பார்த்து சந்தோசப்படுவார். நான் படிக்கிறத பார்த்து ஆசைப்படுவார்.

சினிமா படங்களில் பிள்ளைகள் அப்பாக்களுடன் செல்லமாக சண்டை பிடிப்பினம். சும்மா கோவம் போடுவினம். அப்பாக்களின் முதுகில் ஏறி விளையாடுவினம். இத பார்க்கின்ற போது எனக்கும் அப்படியெல்லாம் செய்ய வேண்டும் போல் இருக்கும். அப்பா கெதியென்டு வந்தால் அப்படியெல்லாம் செய்யலாம், நான் பெரிய ஆளாக வந்திட்டன் என்றாள் அப்படியெல்லாம் விளையாட முடியாது என்றவள் ஆழத்தொடங்கினாள். சில நிமிடங்கள் அமைதிக்கு பின் இடம்பெயர்வதற்கு முன் அப்பா லீவில் வருந்து நிற்கும் போது மோட்டார் சைக்கிளில் என்னை கடைக்கு கூட்டிக்கொண்டு போவார், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு போவம், நான் கேட்ட பொருட்கள் எல்லாம் வாங்கித் தந்தவர். இதையெல்லாம் நினைக்கும் போது அழுகைதான் வருது மாமா. ஏன் கடவுள் என்ர அப்பாவை மட்டும் என்னிடம் இருந்து பிரித்து வைத்திருக்கின்றார்? நானும் மற்ற பிள்ளைகள் போன்று சந்தோசமாக இருப்பது கடவுளுக்கு பிடிக்கவில்லையா?'' என தனது உணர்வுகளை கொட்டிக்கொண்டே சென்றாள் கனியிசை.

''என்னுடைய நண்பிகளின் அப்பாக்களை பார்க்கும் போதெல்லாம் எனது அப்பாவின் ஞாபகம் வரும். பள்ளிக் கூடத்திற்கும், ரீயூசனுக்கும் எனது நண்பிகள் அப்பாக்களுடன் வந்து இறங்கிவிட்டு பாய் (Bye) அப்பா என்று சொல்லும் போது எனக்கும் அப்படி சொல்ல வேண்டும் போலிருக்கும். அப்பா அப்பா என்று கூப்பிட வேண்டும் போலிருக்கும் அம்மா இல்லாத சில நேரங்களில் அப்பா அப்பா என்று சத்தமாக கூப்பிட்டிருக்கிறன். அம்மாவுக்கு கேட்டால் கவலைப்படுவா, அழுவா என்றதால அவ இல்லாத நேரமாக பார்த்து அப்பா என்று கூப்பிட்டு பார்ப்பன். ஆசையாக இருக்கும் அப்படி கூப்பிடும் போதும். இன்றைக்கு என்ர அப்பா எனக்கு அடிச்சுப் போட்டார் என்று நண்பிகள் சொல்லும் போது நான் எப்போது அப்பாவிடம் அடி வாங்குவேன்? என்ர அப்பா இருந்தால் எனக்கு எப்படி அடிப்பார். என்றொல்லாம் யோசிப்பன் மாமா” எனத் தனது தந்தையின் மீதான வாஞ்சையான எண்ணங்களை அடுக்கிக் கொண்டே சென்றாள் கனியிசை.

அப்பா பெயரை சொல்லி கூட்டிக்கொண்டு போன ஆக்கள் ஏன் இன்னும் வைச்சிருக்கினம்? நிறைய இயக்க மாமாக்கள் தடுப்புக்கு போய் வந்திருக்கினம். அது மாதிரி என்ர அப்பாவையும் விடலாம்தானே? என்ர அப்பா வந்தால் நான் எவ்வளவு சந்தோசமாக இருப்பன். என்ர அம்மா எவ்வளவு சந்தோசப்படுவா'' எனக் கூறிக்கொண்டே சென்றாள். அவளது கேள்விகளுக்கும் ஏக்கங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மௌனமாக இருக்கின்றனர். அப்பாக்களுக்காக காத்திருக்கின்ற கனியிசை போன்ற பிள்ளைகளின் ஏக்கங்கள் மட்டும் நீண்டுக்கொண்டே செல்கின்றன.

''எல்லோருக்கும் வாழ்க்கையில் பல ஆசைகள் இருக்கும் ஆனால் என்னுடைய ஒரேயொரு ஆசை எனது அப்பா விரைவாக என்னிடம் வரவேண்டும் என்பதே. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் அம்மாவுடன் சென்று பங்குபற்றியிருக்கிறன். அப்பா திரும்பி வருவதற்கு நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறன் என்றவள் அழத்தொடங்கினாள்'' தொடர்ந்தும் கனியிசையை அழவிடாது அவளுடனான உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.

கனியிசை போன்று ஏராளமான குழந்தைகள் தங்களின் அப்பாக்களுக்காக தினமும் ஏங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் காணப்படுகிறது. கண்முன்னே பிரிந்து சென்று சரணடைந்த அப்பாக்களின், பிரித்து கொண்டு செல்லப்பட்ட அப்பாக்களின், போங்கள் வருகிறேன் என்று சொல்லிச்சென்ற அப்பாக்களின் பிள்ளைகள் நிறையவே உள்ளனர். இந்தப் பிள்ளைகள் தங்களின் அப்பாக்களுக்காக வீதியில் இறங்கி போராடுகின்றார்கள், பிஞ்சு வயதில் ஆலயங்களில் நேர்த்தி வைத்து காத்திருக்கின்றார்கள், சாத்திரிகளை நாடிச்செல்கின்றார்கள், ஜசிஆர்சி, ஜநா என நிறுவனங்களுக்கு நம்பிக்கையுடன் ஏறி இறங்குகின்றனர்.

புத்தகப்பையுடன் படிக்க வேண்டிய வயதில் வீதிகளில் இறங்கி அப்பாக்களின் படங்களுடனும், பதாதைகளுடனும் போராடும் இந்தக் குழுந்தைகளுக்கு நீதி எப்போது? இந்தக் குழந்தைகளின் அப்பாக்கள் இருக்கின்றார்களா? இல்லையா? அரசு இதற்கான பதிலை சொல்லுமா? அல்லது இதுவும் கடந்து போகுமா?

1 கருத்துரைகள்:

பிரபாகரனும், சகாக்களும் குடும்ப வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கேவலமாக இறந்ததிற்கு காரணம் இது போன்றவர்கறளின் கண்ணீரும், சாபமும்தான்.

Post a Comment