Header Ads



‘றோ’ வின் படுகொலைச் சதி, மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – மைத்திரிபால


தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – சிறிலங்கா உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் சிறிசேன நேற்று நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியப் புலனாய்வுப் பிரிவு தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக, தனது அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தெரியாமல் இருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார் என, அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

“கைது செய்யப்பட்ட இந்தியர், என்னைக் கொல்ல முயற்சிக்கும் றோவின் முகவராக இருக்க வேண்டும். இதனை இந்தியப் பிரதமர் அறியாமல் இருக்கலாம். இது பெரும்பாலும் வழக்கம் தான். சிஐஏயின் இதுபோன்ற நடவடிக்கைகள் ட்ரம்ப்புக்கும் தெரியாமல் இருக்கலாம்” என்று சிறிலங்கா அதிபர் உரையாற்றியிருந்தார்.

அவர் அப்படிக் கூறியது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அதிபர் செயலக ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, இதுபற்றி ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறினார். எனினும், இதுவரை அவரிடம் இருந்து  எந்தப் பதிலும் வரவில்லை.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு-, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா அதிபர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

எனினும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது சிறிலங்கா தலைவர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைப்பது இது தான் முதல்முறையல்ல. 2015 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்சவும், தனது தோல்விக்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சிறிலால் லக்திலகவிடம், வினவிய போது, மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதால் செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதாக கூறினார்.

No comments

Powered by Blogger.