Header Ads



விரியன் பாம்பு, குறித்து, நாம் அறிந்திருக்க வேண்டியவை..!

கொடிய விஷம் கொண்ட பட்டியலில் ராஜ நாகம் மட்டுமல்ல, விரியன் பாம்புகளுக்கும் முக்கியமான இடம் உண்டு

பாம்புகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றை நஞ்சின் தன்மையை வைத்து விஷள்ளவை, விஷமற்றவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவற்றின் சீற்றத்தைப் பொறுத்து சாது, மூர்க்கம் என்று பிரிக்கலாம். ஒரு பாம்பை சாது அல்லது மூர்க்கம் எனப் பிரிப்பது அதன் விஷத்தை வைத்து மட்டுமே அல்ல;  விஷம் அதிகமாக உள்ள பாம்புகளில் சாதுவான பாம்புகளும் இருக்கவே செய்கின்றன. அதேபோல விஷம் இல்லாத பாம்புகளும் மூர்க்கத்தனமாக சீறும். ஆனால் இந்த பாம்பு சாதுவாகவும், மூர்க்கம் என இரண்டு குணங்களையும் ஒன்றாக வைத்திருக்கும், இதன் பெயர் 'விரியன்' பாம்பு.

பொதுவாகக் கொடிய வகை விஷத்தன்மை கொண்ட நான்கு பாம்பு வகைகளில் விரியன் பாம்புக்கு முக்கியமான இடம் உண்டு. இது கட்டு விரியன், கண்ணாடி விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன், பென்சில் விரியன் எனப் பல பெயர்களில் அவற்றின் நிறத்திற்கும், வடிவமைப்பிற்கும் ஏற்றார் போல அழைக்கப்படும். 'விதி முடிந்தவர்களைத்தான் விரியன் கடிக்கும்' என்ற சொலவடையும் கிராமங்களில் வழக்கத்தில் இருந்தது. 

விரியன் பாம்பின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாகவும், மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். இதன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். இதன் வால் பகுதியில் வெண்ணிறப்பட்டைகள் காணப்படும். ஆண் பாம்பானது, பெண் பாம்பை விட நீண்ட வாலைக் கொண்டிருக்கும். தடித்த உடலுடன், கழுத்தை விட பெரிய முக்கோண வடிவ தலையை கொண்டது. இதன் தலையில் உள்ள செதில்கள் சிறியதாகவும், அதிகமான எண்ணிக்கையிலும் காணப்படும். பெரிய மூக்குதுளையும், கண் கருவிழி செங்குத்து வாக்கில் இருக்கும். பாகிஸ்தான், சீனா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெரும்பாலும் வசிக்கின்றன. 


வயல்களிலும், எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படும். அதிக உஷ்ணத்தைத் தாங்காத இவை, நீர்நிலைகளுக்கு அருகிலேயே பெரும்பாலும் வசித்து வருகின்றன. மற்ற பாம்புகள் பகலில் இரையைத் தேடும். மற்ற பாம்புகளிலிருந்து விரியன் பாம்பு கொஞ்சம் மாறுபட்டது. இரவில் சுறுசுறுப்பாக செயல்பட்டு இரையைத் தேடும் பணியை ஆரம்பிக்கும். பொதுவாக ஆண் விரியன் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்ற பாம்புகள் நுழைவதை விரும்பாதவை. கட்டுவிரியன் பெரும்பாலும் மற்ற பாம்புகளையும், எலிகளையும் உணவாக எடுத்துக் கொள்கிறது.மேலும் தவளை, பல்லி, பாம்பரணை, கணுக்காலிகள் என பலவற்றை உணவாக உட்கொள்ளக் கூடியவை. அதிக பசி எடுக்கும் நேரங்களில் தனது குட்டிகளையே உணவாக எடுத்துக் கொள்ளும். தான் சீண்டப்படும்போது தலையைப் பாதுகாப்பாக வைத்து, உடலைப் பந்துபோல சுருட்டிக் கொள்ளும். ஆனால், இரவில் சீண்டப்படும்போது இப்பாம்புகள் எதிர்த்துத் தாக்க கூடியவை. 

இந்தப் பாம்பின் விஷம், உடனடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி செயலிழக்கச் செய்யும். மனிதரைக் கடித்தவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் மரணம் நிச்சயம். விரியன் பாம்பு கடித்தவர்களை மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை வைத்து அடிக்கடி கண்காணிப்பர். அந்த அளவுக்கு வீரியமான விஷம் கொண்டது. பாம்புக்கடியினால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்வதற்கு விரியன்கள்தான் முக்கியமான காரணமாகவும் திகழ்கிறது.

இதற்குச் சரியான உதாரணம், கடந்த ஜுன் மாதம் 29-ம் தேதி, வேலூரில் 8 அடி நீளம் கொண்ட விரியன் பாம்பு பதினோரு வயது சிறுவனைக் கடித்தது. கடித்த சில மணிநேரங்களில் ரத்தம் உறைந்த நிலைக்குச் சென்று விட்டது. கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார். கொடிய விஷம் கொண்ட பட்டியலில் ராஜ நாகம் மட்டுமல்ல, விரியன் பாம்புகளுக்கும் முக்கியமான இடம் உண்டு. 

No comments

Powered by Blogger.