Header Ads



ஹலால்தீன் குடும்பத்தை வாழவைக்க உதவிய Jaffna muslim இணையத்திற்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்


அன்புள்ள ஜப்னா முஸ்லிம் இணைய தளத்திற்கு,

கடந்த 16.07.2018  அன்று நாம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஹலால் குடும்பம் தொடர்பான தகவல் ஒன்றை பதிவு செய்திருந்தோம்.

கீழே குறித்த தகவலை மீண்டும் பதிவு செய்கின்றோம்.

இலங்கையின் வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் வசித்து வசித்து வரும் ஐஸ் பழ வியாபாரி ஹலால்தீன் குடும்பத்தின் கதையே இது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தன்னுடைய சிறுவயதில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு அந்த காலப்பகுதியில் அவ்வூரில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இறந்த நிலையில் ஊரிலே உயிர் பிழைத்த ஒரே ஒரு  சிறுவன் இவராவார் என்றாலும் அடிக்கடி அந்த காய்ச்சலின் தாக்கம் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க செய்துவிடுகின்றது.

கஷ்டமென்றவுடன் மற்றவர்களிடம் கையேந்தும் பலருக்கும் மத்தியில் தன்னுடைய துவிச்சக்கர வண்டியில் பல கிலோமீற்றர் பயணம் செய்து ஐஸ் பழம் விற்று கொண்டுவரும்  400 தொடக்கம் 700 ரூபாய் பணத்தில் அக்குடும்பத்தின் வாழ்வும் நகர்கின்றது.

தான் படிக்கவில்லை என்றாலும் தன் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் அதிகமாக இருப்பதால் தன்னுடைய மூத்த மகனை ஒரு இஸ்லாமிய கல்லூரியில் சேர்த்து படிக்க  வைக்கும் அவருக்கு மாதாந்தம் 4000 ரூபாய்கள் என்பது பெரிய தொகையாக காணப்படுவதுடன் அவரது மகனின் 5 மாதங்களுக்கான கட்டனமும் செலுத்தப்படாமல் இன்னும் நிலுவையில் இருப்பதால் தன் பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்துடனான அவரது வேதனையான பக்கங்களை பகிர்ந்தார்.

இவர் வாழும் ஊரில் சிறுநீரக நோயாளிகள் அதிகமாக காணப்படுவதால் பலரும் சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கி பருகும்பொழுது தாம் குடிநீரை பெற்றுக்கொள்ளவே பலரது வீட்டு கிணறுகளிலும் குழாய்க்கிணறுகளிலும் தன் மனைவியின் காலம் போவதாகவும் அதன் காரணமாக தான் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கிணறு ஒன்றை கையால் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டு 4 அடிவரை தோண்டியுள்ளதாகவும் காண்பித்தார்.

அவ்வாறென்றால் என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையை நீங்களே கொண்டுசெல்ல முடியும் என கேட்டதற்கு...

எனக்கு வெயில் ஓரளவுக்கு பழகிப்போனாலும் இப்பொழுது இந்த காற்றுக்குள் அதிக தூரம் பயணம் செய்து வியாபாரம் செய்ய முடிவதில்லை சில வேளைகளில் என்னுடைய இலாபத்தை ஐஸ்பழ தொழிற்சாலைக்கு கொடுத்து வீடு திரும்பும் நிலையும் ஏற்படுகிறது.

ஏதும் நிகழ்வுகள், விளையாட்டுப்போட்டிகள் நடந்தால் 1000 ரூபாய் அளவில் இலாபம் வரும் திங்கள் செவ்வாயில் வியாபாரம் 200 தொடக்கம் 500 வரையே இருக்கும் ஆனாலும் களவெடுக்கவில்லை பொய் சொல்லவில்லை உழைத்தே கடைசிவரையும் சாப்பிட ஆசை.

முடிந்தால் என் தொழிலை கொண்டு செல்ல ஒரு அரைப்பழசு சபாரி மோட்டார் சைக்கிள் இருந்தால் என்னால அதிக இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்ய முடியும். என் குடும்ப கஷ்டங்களை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்கிறார்.

மழை காலத்தில் வியாபாரிகளிடம் மீன் வாங்கி ஊர்களுக்கு சென்று விற்க முடியும் காலத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு சபாரி மோட்டார் சைக்கிள் இருந்தால் தொழிலை மாற்றி உழைத்து வாழ முடியுமென்றார்.

அன்பான நண்பர்களே.

இந்த குடும்பத்துக்கு தண்ணீர் வசதிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை ஒரு சகோதரர் மூலம் செய்துள்ளேன் ஆனாலும் அவரது தொழிலை கொண்டு செல்ல பாவித்த சபாரி மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றுக்கொடுத்தால் அவர் வாழ்வை அவரே கவனித்துக்கொள்வார்.

அண்ணளவாக ஒரு பாவித்த நல்ல நிலையிலுள்ள மோட்டார் சைக்கிளின் விலை 35000 தொடக்கம் 50000 ரூபாய்களுக்குள் பெற்றுக்கொடுக்க முடியும். 

அவ்வாறு நீங்கள் உதவத்தயாரெனில் நேரில் அக்குடும்பத்தை பார்வையிட்டு உதவ முடியும். அல்லது 
அவருக்கான சபாரி மோட்டார் சைக்கிளை நான் பொறுப்பாக நின்று இறைவனின் திருப்தியை எதிர்பார்த்து வாங்கி கொடுக்கவும் முடியும். 

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள். சர்ஜான் - 077 4828281

அது மாத்திரமல்லாமல் அவரது மகனின் 5 மாத நிலுவையிலுள்ள கட்டணத்தையும் நாம் ஒன்றிணைந்து  செலுத்த முயல்வோமானால் ஹலால்தீன் குடும்பத்தைப்பற்றி நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

நம்மால் அனைவருக்கும் உதவ முடியாது ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான ஒருசிலருக்கு உதவ முடியும்.

ஒருவர் 1000 ரூபாய்கள் வழங்கினாலே இவரது துயர் துடைக்க முடியுமென எதிர்பார்க்கின்றேன். முதல் ஆயிரத்தை நான் வழங்குகின்றேன் உங்களின் ஒரு ஆயிரம் ரூபாவை வழங்க மேலுள்ள இலக்கத்துக்கு அழையுங்கள்.

இறைவன் நமக்கு கொடுத்தவற்றிலிருந்து கொடுத்து நம் உதவியால் ஒரு குடும்பம் வாழட்டும்..............................

குறித்த செய்தியை பிரசுரித்த மூலம் இலங்கையிலிருந்து தொழிலுக்காக வெளிநாடுகளில் சென்று வாழ்கின்ற மக்கள் மாத்திரமல்லாமல் இலங்கையில் இருக்கக் கூடிய சில தனவந்தர்களும் நேரடியாக குறித்த குடும்பத்தை சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அந்த குடும்பத்துக்கு உதவுமாறு நமது சகோதர சகோதரிகளால் மொத்தமாக 90,000 பணம் கிடைக்கப்பெற்றது.

அதனைக் கொண்டு நாம் 85.000 ரூபாய்க்கு தரமான மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்து அவருக்கு வழங்கி வைத்தோம் அத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு பொருத்துவதற்காக ஒலிபெருக்கி, இதர சாதனங்கள் என்பவற்றையும் நாம் வழங்கி வைத்தோம்.

அத்துடன் அவரது மகன் கல்வி கற்கும் பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அவரது கல்வி நிலை தொடர்பில் அறிந்து கொண்டதுடன், அவருக்கான நிலுவையில் இருந்த தொகையை சிலர் வழங்கி இருந்ததும் மகிழ்ச்சி அளித்தது.

மேலும் குறித்த பாடசாலையில் இருக்கின்ற அம் மாணவனைப் போல வரிய நிலையில் காணப்பட்ட 10 மாணவர்களுக்கு எம்மாலான உதவிகளை நாம் செய்ததோடு, அந்தப் பாடசாலையினுடைய ஒரு வாரத்துக்கான தேநீர் செலவுக்கான பணத்தையும் நாம் வழங்கி வைத்தோம்.

குறித்த மாணவனுடைய படிப்பு முடியும் வரை தாம் உதவி செய்வதாக சிலர் வாக்குறுதிகள் வழங்கினாலும், அவை இன்னும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன என்பதும் கவலையளிக்கின்றது.

எனினும் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை நேர்மையாக உழைத்து வாழ்ந்த ஹலால்தீன் குடும்பத்திற்கு உங்களது உதவிகள் மூலம் உணர்த்தியதற்கு நாம் எமது நன்றிகளை தெரிவிப்பதோடு உங்களது உதவிகளையும் இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.

மேலும் ஜப்னா முஸ்லிம் இணைய தளத்தில் பதியப்பட்ட இந்த ஒரு செய்தியால் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்கின்றது என்ற செய்தியையும் நாம் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றோம்.

அந்த வகையில் ஜப்னா முஸ்லிம் இணைய தளத்திற்கு குறித்த குடும்பம் சார்பாகவும், எமது நன்றிகளை தெரிவிப்பதோடு மேலும் இவ்வாறு சமூகத்தில் பலர் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றார்கள் அடையாளப்படுத்தப்படும்போது அவர்களுக்கும் நிச்சயமாக தாங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையோடு மேலும் தங்களது சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நிறைவு செய்கின்றோம் நன்றி.


3 comments:

  1. Mashallah .
    This is indeed a true journalism.
    As a minority community we need to do such help in great numbers at a large scale .. your example is very good ..

    ReplyDelete

Powered by Blogger.