Header Ads



கல்முனை பிராந்திய வைத்தியசாலை நிலையும், பொது வைத்தியசாலையின் தேவையும்.

-Dr Ziyad-

ஊருக்கொரு ஆதார வைத்தியசாலையால் பொது வைத்தியசாலை (General Hospital) இற்கான வாய்ப்பை இழந்து வரும் கல்முனை பிராந்தியம். பிரச்சினைகளின் அடிப்படைகளை புரிந்து கொள்ளும் முயற்சியில் இந்த ஆக்கம்.

இலங்கை 25 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிர்வாக மாவாட்டத்துக்கும் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை (RDHS) அடங்கலாக மொத்தம் 26 உள்ளது . அந்த 26வது வரக்காரணம் அம்பாரை மாவட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. 
1. கல்முனை பிராந்தியம் 
2. அம்பாறை பிராந்தியம்

கல்முனைப் பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் இங்கு 7 ஆதார வைத்தியசாலைகள் (Base Hospitals) காணப்படுகின்றன. அதாவது கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு (எனும் Ashraf Memorial Hospital), அக்கறைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில், திருக்கோவில் மற்றும் நிந்தவூர். இவற்றில் கல்முனை North, கல்முனை South மற்றும் அக்கறைப்பற்று ஆகிய மூன்றும் மத்திய அரசாங்கத்திற்கு கீழும் ஏனைய நான்கும் மாகாண அரசாங்கத்திற்கு கீழும் வருகின்றன . இலங்கையில் கல்முனை பிராந்தியம் தான் அதிகளவான  வைத்தியசாலைகளை அதிலும் ஆதார வைத்தியசாலைகளை  கொண்டுள்ளது. இது லண்டனில்  உள்ள சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகம் என்பது ஒரு கூடுதல் தகவல். இதனால் எமக்கான மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நிலமை அப்படி  இல்லை. இது ஏன்? எதனால் ? இதில் மறைந்து கிடக்கும் மர்மம் என்ன ? என்பதை வெளிக்கொணரவே இந்தக் கட்டுரை.

எமது பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் பொது வைத்தியசாலையாக (General Hospital) அம்பாறை மாவாட்டத்துக்கு அம்பாறை பொது வைத்தியசாலையும் அதற்கு அடுத்த படியாக மட்டகளப்பு போதனா வைத்தியசாலையுமே அருகிலுள்ள வைத்தியசாலைகள். இதில் அம்பாறை வைத்தியசாலையை மக்கள் மொழிப் பிரச்சினை, அவ்வைத்தியசாலையில் உள்ள கட்டுப்பாடுகள், தூரம் காரணமாக தவிர்ந்து வருகின்றனர். மட்டக்களப்பு வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால் அது மிக நீண்ட தொலைவில் உள்ளது. ஆகவே கல்முனை பிராந்தியத்துக்கான (RDHS - Kalmunai) ஒரு பொது வைத்தியசாலை காலத்தின் கட்டாயம்.

ஏன் இந்த பொது வைத்தியசாலை என்ற ஒன்று தேவைப்படுகிறது?

வெறும் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை அதிகரிப்பதற்கு மாத்திரமா என்றால் நிச்சயமாக இல்லை. இதனை சத்திர சிகிச்சை நிபுணர்களின் (Surgeon) நியமனத்தை கொண்டு புரிய வைக்கலாமென்று நினைக்கிறேன். அதாவது அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பொது வைத்தியசாலைகளில் குறைந்தது 3 அல்லது 4 சத்திர சிகிச்சை நிபுணர்கள் காணப்படுகிறார்கள் (அதுவே பொது வைத்தியசாலை General Hospitals க்குரிய  காடர் Cadre). எனவே ஒரு விபத்து அல்லது ஏதாவது ஒரு அவசர நிலைமை வந்தால் யாராவது ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் அதனைப் பார்வையிடக்கூடிய சாத்தியமுண்டு. பொதுவாக 3 சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஒரு வைத்தியசாலையில் இருந்தால் அந்த மூவருக்கும் ஒரு மாதத்தை  தமது வேலை அட்டவணை (roster) க்கு ஏற்றவாறு  பிரித்துப் பத்துப் பத்து நாட்கள் ஒன்கோல் on call என்ற அடிப்படையில் வரும். எனவே அந்த 10 நாளில் எந்த சத்திர சிகிச்சை நிபுணர் பொறுப்பாக உள்ளாரோ அவருடைய விடுதிக்கு அந்த நோயாளி அனுமதிக்கப்படுவார். அவர் எந்த நேரமும் அந்த நோயாளியை பார்க்கக்கூடிய வசதி ஏற்படும். அதேநேரம் பொதுவைத்தியசாலையாக இருந்தால் Intentship எனும் பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பொதுவாக 24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய நிலைமை இருக்கும். அதேபோல் நிபுணராக பயின்று  கொண்டிருக்கும் வைத்தியர்களும் (Registrar, Senior Registrar) நியமிக்க படுவர் அவர்களும் 24hours × 7day என்ற அடிப்படையில் வைத்திய சாலையின் உள்ளே இருக்க வேண்டும் (Resident) . எனவே நோயாளிகளுக்கு சிறந்த கவனிப்புக் கிடைக்கும். ஆனால்  ஆதார வைத்தியசாலைகளின் நிலைமையை பார்த்தால் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு பிரிவுக்கும் பொதுவாக ஒரு வைத்திய நிபுணரே (One man army) இருப்பர். அதாவது சத்திரசிகிச்சை பிரிவுக்கு ஒரு சத்திரசிகிச்சை நிபுணரே இருப்பார். அதே நேரம் அவருக்கு கீழ் 2 or 3 வைத்தியர்கள் (medical officer ) மட்டுமே இருப்பர். ( Grade A வைத்திய சாலைகளுக்கு இது 4 or 5 வரை இருக்கும்.)

பொதுவாக வைத்திய நிபுணர்களின் பட்டங்களை பார்க்கும்போது "V" என்ற எழுத்து முன்னால் இடப்பட்டிருக்கும். உதாரணமாக surgeon கு VS என்றும் மகப்பேற்று நிபுணருக்கு VOG என்றும் பொது வைத்திய நிபுணருக்கு, சிறு பிள்ளை நிபுணருக்கு VP என்றும் இடப்படும். இந்த V என்ற எழுத்தின் அர்த்தம் "Visiting". அதாவது பொதுவாக வைத்திய நிபுணருக்குரிய வேலை நேரம் 6 மணித்தியாலம் அது காலை 8.00 முதல் பகல் 12.00 மணி வரையும் மாலை 2 .00 மணியிலிருந்து 4.00 மணி வரையும் இருக்கும். அந்தநேரத்தில் விடுதியில் ward இல் உள்ள நோயாளிகளை பார்வையி்டுதல் ward round வைத்தியசாலை  கிளினிக் clinic வரும் நோயாளிகளை பார்வையிடுதல், திகதி கொடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை  (routine surgeries ) மேற் கொள்ளல் போன்றன கடமையாகும். எனினும்  அந்ந சத்திரசிகிச்சை நிபுணர் அந்த வைத்தியசாலைக்கு 24 மணித்தியாலமும் On Call என்ற அடிப்படையில் பொறுப்பாக இருப்பார். வேலை நேரம் முடிந்தாலும் அதே பிரதேசத்தில் எந்த நேரமும் On Call இல் அவதானமாக இருக்க வேண்டும் அதாவது தேவை ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லக்கூடிய தூரத்தில்  இருக்க வேண்டும் . இது ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில்  இருப்பதற்கு ஒப்பானது . ஆத்திரம்,  அவசரத்திற்கு கூட அவரது பிராந்திய  எல்லையை விட்டு வெளியே போக முடியாது . அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்  அதன் கஷ்டம்.  "V" என்ற எழுத்துக்குள் மறைந்து இருக்கும் மர்மம் அதுதான். 24 மணி நேரம் on-call கடமையில் இருந்தாலும் ஒரு நாளைக்கான Overtime கொடுப்பனவு மாகாண வைத்திய சாலைகளில் பொதுவாக 2 மணி நேரமும் , மத்திய அரசாங்க வைத்திய சாலைகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரமுமே Claim பண்ண முடியும். அதாவது வைத்தியர் ஒருவரால் மாதம் ஒன்றுக்கு 120 மணித்தியாலயத்துக்கு மேல் Overtime Claim பண்ண முடியாது.
(இதே நேரம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 6 மணி நேர Shift ஐ முடித்த பின் அவர்கள் அவரவர் வேலைகளை,  தனிப்பட்ட விடயங்களை, வேறு இடங்களுக்கோ சென்று விடலாம்  (no oncall) . இதனால் தான்  நிறைய வைத்திய நிபுணர்கள்  அங்கே வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விடுகின்றனர் என்பதை கருத்தில் கொள்க)

ஒரு ஆதார வைத்தியசாலைக்கு விபத்தில் சிக்கிய ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் அவரை கண்காணிக்க வேண்டும். (கண்காணிப்பு என்பது நேரடியாக வருகை தருவதல்ல. தேவை ஏற்பட்டால் அதாவது விடுதி வைத்தியரால் பரிசீலிக்கப்பட்டு அதன் பின் மேலதிக ஆலோசனை அல்லது நிபுணரின் பரிசோதனை  தேவை என கருதினால் மாத்திரம் வருகை தரவேண்டும்.  இல்லாவிட்டால் கடமையில் இருக்கும் வைத்தியருக்கு ஆலோசனை வழங்கல் வேண்டும் ). இது எந்த அளவு சாத்தியம்? ஒருவக்கு குடும்பம், சமூக வாழ்க்கை நல்லது , கெட்டது என்ற நிலைமைகள் இருக்கும் . எனவே அவர் விடுமுறையில் (leave) இல் சென்றால் ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் விபத்தில் சிக்கிய நோயாளிகள் உரிய நேரத்தில் வைத்திய நிபுணரால் பார்க்க முடியாமல் போகலாம் அல்லது ஆலோசனை  வழங்க முடியாமல் போகலாம் . அந்த நேரம் நோயாளியுடன் வருபவர்கள் சண்டை பிடிப்பார்கள், எமது நோயாளியை அம்பாறைக்கோ மட்டக்களப்புக்கோ அனுப்புங்கள் என்று. ஆனால் அந்த நேரத்தில் சட்டம் இடம் தராது. அதாவது ஒரு பொது சத்திரசிகிச்சை நிபுணர் அந்த வைத்தியசாலையில் இருந்தால் அவரது கண்காணிப்புக்கு முடியாத அல்லது அதற்கான பரிகாரத்தை வழங்கும் வசதி இல்லாத நிலைமையாக இருந்தால் மாத்திரமே ஏனைய வைத்தியசாலைக்கு அனுப்பலாம். உதாரணமாக விபத்தில் சிக்கி தலையில் அடிபட்ட ஒரு நோயாளி அனுமதிக்கப்ட்டால் அங்கே வைத்திய நிபுணர் இருந்தாலும்  CT scan எடுக்க வேண்டும் என்ற தேவைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பலாம். அங்கு அனுப்பினாலும் பல நேரங்களில் அவர்கள் கூட்டி வந்த Ambulance ஐ நிற்க சொல்லிவிட்டு CT scan எடுப்பார்கள் அதில் பிரச்சினை இருந்தால் மட்டுமே அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் . இல்லையென்றால் மீண்டும் அனுப்பிய வைத்தியசாலைக்கே திருப்பி அனுப்பப்படும் . 

ஒரு சத்திரசிகிச்சை நிபுணரால் 24 மணித்தியாலமும் கண்காணிப்பு செய்ய முடியாது . மனிதப் பலவீனம் எல்லோருக்கும் உண்டு . ஆனால் ஒரு பொது வைத்திய சாலையில்  (General Hospital )  குறைந்தது இரண்டோ மூண்றோ வைத்திய நிபுணர்கள்  இருப்பதால் ஆள் மாறி ஆள் ஒன்கோல் oncall இல் இருப்பதால்  நடைமுறைச் சிக்கல்கள் எதுவுமில்லாமல் தொடர் (24×7)  கவனிப்பை நோயாளிகளுக்கு வழங்க முடியும்.  இதன்காரணமாகவே  பொது வைத்தியசாலை  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக  அமைகிறது .

சாதாரண பிராந்திய வைத்தியசாலைளை ஆதார வைத்தியசாலைகளக Base Hospital ஆக தரமுயர்த்துவதால் நல்ல சேவை தானே மக்களுக்கு கிடைக்கிறது என நீங்கள் கேட்கலாம் , உண்மை தான் ஆனால் அந்த தரமுயர்த்தலானாது திட்டமிட்ட அடிப்படையில் செய்யப்படவில்லை. ஏனெனில் பிராந்திய வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்படுவதற்கு முன்னர் கல்முனை பிராந்தியத்துக்கான பொது வைத்தியசாலையை நாம் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் நல்ல சேவைகளுக்கு மேலதிகமாக அதைவிட தரமானசேவைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.   நமக்கான முழுமையான,  தரமான  பொது வைத்திய சாலை General Hospital யை  பெற்றுக் கொள்ளாத  வரலாற்று தவறை நாம்  இழைத்து விட்டோம்

இதே நேரம் அம்பாறை பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் அம்பாறை வைத்தியசாலை பொது வைத்தியசாலையாக ஆகும் வரை வேறு எந்த ஆதார வைத்தியசாலைகளும் இருக்கவில்லை . (மஹியங்கனையை தவிர). இதனால்  அம்பாறை வைத்திய சாலை முன் மாதிரியான  ஒரு பொது வைத்திய சாலையாக நல்ல பல சேவைகளை வழங்கி வருகிறது.   கல்முனை பிராந்தியம் ஆளாளுக்கு அரசியல்  போட்டி போட்டு இருக்கும் வைத்தியசாலைகளை ஆதார வைத்தியசாலைகளாக ஆக்கிக் கொண்டதால் பொது வைத்தியசாலை ஒன்றைப் பெறுவதில் நடைமுறை சிக்கல் நிலவுகிறது. இந்த நடைமுறைச் சிக்கல் பல மருத்துவ புறக்கணிப்புகளை, சேவை தாமதங்களை (Medical Negligence) உருவாக்க காரணமாக  அமைகிறது.

ஒரு வைத்திய நிபுணர் மட்டுமே ஒரு வைத்தியசாலையை கண்காணிக்கும் நிலை வரும்போது அவருடைய தேவையின் நிமித்தம் லீவில் இருந்தாலோ , phone off ஆனாலோ , தூங்கிவிட்டாலோ அவரால் கண்காணிக்க முடியாமல் போகும். ஆதார வைத்தியசாலைகள் அதுவும் மகாணசபைக்கு கீழ்வரும் வைத்தியசாலைகள் இருப்பதால் இவ்வைத்தியசாலைகளுக்கு கடமை புரிய வெளிமாவட்டங்களில் இருந்து வைத்திய நிபுணர்கள் வருவதற்கு தயங்குகிறார்கள். காரணம் 24 மணித்தியாலமும் on call ல் இருக்கவேண்டும் . அவசரத்தேவைக்கு லீவ் எடுப்பதாக இருந்தால்கூட ஏனைய வைத்தியசாலையில்லுள்ள நிபுணர் ஒருவர் "Cover-up sign" பண்ண வேண்டும். (மருத்துவத்துறையில் Coverup Sign" பண்ணுவதும் கரண்ட் கம்பியில் கை வைப்பதும் ஒன்றுதான்). அத்துடன் வேற்று மொழி பேசும் வைத்திய நிபுணர்கள் தமது பிள்ளைகளுக்கான பாடசாலை, எமது பிரதேசம் பற்றிய தவறான புரிந்துணர்வுகள் போன்ற காரணங்களால் சுயமாக வர தயங்குகிறார்கள். அதே நேரம் கட்டாய முறையில் நியமிக்க படுவோரும் தமக்குரிய வெளிநாட்டு பயிற்ச்சிக்கு  தெரிவான உடனேயே மாயமாகி விடுகின்றனர். இதனால் பல வைத்தியசாலைகளின் நிபுணர்களுக்கான வெற்றிடம் தொடர்கிறது. இது இன்னும் பல வருடங்களுக்கு தொடரும்.

அதேசமயம் மருத்துவ துணை  சேவைகள் (Para Medical ) உதாரணமாக  medical technicians , physiotherapy,  occupational therapy , போன்ற பல நூறு சேவைகள்,   மருத்துவ விஷேட துறை நிபுணர்கள் (ENT, EYE, CARDIOLOGY, NEUROLOGY ) , உட் கட்டுமான வசதிகள்  தரமான  இரத்த வங்கி,  நவீன ஆய்வு கூட  வசதிகள்,  CT scan, நவீன முறையிலான வைத்திய  உபகரணங்கள்  என்பனவற்றை  இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். இது போன்ற பல நன்மைகளை பொது வைத்தியசாலையினால்  பெற்றுக்கொள்ள முடியும்.

பொது வைத்திய சாலையின் ஏனைய பல பாரிய நன்மைகள் விரிவஞ்சி குறிப்பிடவில்லை

ஒரு வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு பின்வரும் காரணிகள்  அவசியமாகின்றன 
01. அதன் அருகிலுள்ள ஏனைய தரம்வாய்ந்த வைத்தியசாலைக்கிடையிலான தூரம்,
02.வைத்தியசாலையின் மூலம் பயன்பெறும் சனத்தொகை (Catchment Population)
03.வைத்தியசாலையிலுள்ள இடவசதி என்பன கருத்தில் கொள்ளப்படும்.

இப்போது நடந்தது என்ன ? 
பல ஆதார வைத்தியசாலைகள் கல்முனை பிராந்தியத்துக்கு வருவதற்கு முன் குறிப்பிட்ட ஒரு வைத்தியசாலையில் அதிகளவான  நோயளிகள் புழக்கம் (Patient Turnover) இருந்தது. இப்போது ஊருக்கு  ஒரு ஆதார வைத்திய சாலைகள் வந்துவிட்டதால் நோயாளிகள் ஒரே வைத்திய சாலையை நோக்கி அல்லாமல் பரவலாக்கம் ஆகியுள்ளது. இதனால் பொது வைத்திய சாலை  ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணி இல்லாமல்  ஆக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரம் ஒரு கேள்வி வரலாம் மாவட்டத்துக்கு என்று ஒரு பொது வைத்தியசாலையே (District General Hospital) இருக்கும் போது எப்படி  இது சாத்தியமென்று. இதனை சாத்திய படுத்தலாம் என தூர நோக்கில் பிளான் பண்ணி  செய்து காட்டியவர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் . அம்பாறை மாவாட்டத்திலேயே 2 சுகாதார சேவைகள் பணிமனை உருவாக்கப்பட்டதன் மூலம் கல்முனை பிராந்தியத்திற்குரிய பொது வைத்தியசாலை உண்டாவதற்குரிய அடித்தளம்  அவரால் ஆரம்பத்திலேயே இடப்பட்டுள்ளது. ஆனால் நாம் ஊருக்கு  ஒரு  ஆதார வைத்தியசாலை என  எவ்வித தூர நோக்கும் இல்லாத விடயத்தில் சண்டை பிடித்து கொண்டிருக்கிறோம். இதனால் பாதிக்கப்பட போவது நாமும் நமது  சந்ததியினரும் தான். நாம் அறச்சீற்றம் கொள்கின்ற வைத்தியசாலயில் நடந்த,  நடந்து கொண்டிருக்கின்ற எல்லாமே நான் இங்கு குறிப்பிடுகின்ற பெரிய வட்டத்தின்  சிறு புள்ளிகள் தாம்.

பொதுவாக சிந்திப்போம். பொதுப்படையாக சிந்திப்போம். ஊர்வாதத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துவிட்டு சமூகத்துக்காக இந்த தேவையை நிறைவேற்ற முன் வாருங்கள். கல்முனை பிராந்தியத்துக்கான (அதிக பயனாளிகளை கொண்ட, இடவசதி உடைய ஒரு வைத்தியசாலையை) பொது வைத்தியசாலையாக தரமுயர்த்துதல் என்ற கோரிக்கையை முன்னிறுத்துவோம். அதுவே எதிர்காலத்தில் நமக்கான தரமான  , சிறந்த வைத்திய சேவைகளை  பெற்று தரும் அடித்தளமாக அமையும். 

எனவே எமது பிராந்திய அரசியல் தலைவர்கள், பெரியவர்கள்,  நலன் விரும்பிகள்  வெறும் குறுகிய வட்டத்துக்குள் இருந்து சிந்திக்காமல் சமூகத்துக்காக இதனை செய்ய முன் வரவேண்டும் . ஒவ்வொரு ஊரும் தமக்கான வைத்தியசாலையை தரமுயர்த்துவது அவசியம் தான் . அதைவிட கல்முனை பிராந்தியத்ர்த்துக்கான பொது வைத்தியசாலை General Hospital காலத்தின் கட்டாய தேவயாகும்.

No comments

Powered by Blogger.