Header Ads



பிரதமர் ரணில் வெறுமனே, கனவு கண்டுகொண்டிருக்கிறார் - மஹிந்த

நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தெளிவான திட்டமேதும் இல்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அவர் வெறுமனே கனவு கண்டுகொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார். 

போயா தின நிகழ்வுகள், தங்காலையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று (24) நடைபெற்ற பின்னர், ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பாதாள உலகக் குழுக்கள், தெற்கில் மாத்திரமன்றி, நாடு முழுவதிலும் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், வடக்கில் காணப்படும் ஆவா குழுவை, உதாரணமாகக் குறிப்பிட்டார். இவ்வாறான குழுக்கள், பொலிஸாரால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார். 

தற்போதைய காலத்தில், தினந்தோறும் கொலைகள் இடம்பெறுகின்றன எனவும், தங்கள் காலத்தில், இவை கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது காணப்படும் இந்நிலையைக் கட்டுப்படுத்த, இயலாத நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது என அவர் தெரிவித்தார். 

பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லுதல், பொருளாதாரத்தைப் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டதோடு, கார்களின் விலை அதிகரிப்பதோடு, பருப்பு, சீனி போன்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும், அதிக செலவாகிறது எனக் குறிப்பிட்டார். அதேபோல், சீனி, இரண்டு களஞ்சியசாலைகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

அதேபோன்று, பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான ஸ்னைப்பர்கள் காணாமற்போயுள்ளன என்றால், அது பாரதூரமான விடயமெனத் தெரிவித்த அவர், அவ்வாறு காணாமற்போன ஸ்னைப்பர்கள், எங்கு பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது எனத் தெரிவித்தார். 

ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் கொல்லப்பட வேண்டுமென்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பாகச் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதைச் சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பான சந்தேகநபர்களுக்கெதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.   

No comments

Powered by Blogger.