Header Ads



ஜனாதிபதியின் கோபத்தினால், பதவியை இழந்த தூதுவர்

வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவையும், அங்குள்ள ஐந்து சிறிலங்கா தூதுரக அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

வியன்னாவில் இருந்த சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவுடன் கடந்தவாரம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச 4 மணி நேரம் முயற்சித்தும், பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடைசியாக, அங்குள்ள காவல்காரர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்துள்ளார். தூதரகத்தில் யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதற்குப் பின்னர், குறிப்பிட்ட காவல் காரர், பிரியானி விஜேசேகரவுக்கு சிறிலங்கா அதிபரின் தொலைபேசி அழைப்பு குறித்து தெரியப்படுத்திய போதும், அவர், தொடர்வை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

இதையடுத்தே, கடந்த வெள்ளிக்கிழமை பிரியானி விஜேசேகர மற்றும், தூதரக அதிகாரிகளான தயானி மென்டிஸ், ஜிகான் திசநாயக்க மற்றும் தூதுவரின் தனிப்பட்ட உதவியாளர் உள்ளிட்டவர்கள் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் புதிய தூதுவர் நியமிக்கப்படுவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலரான பிரியானி விஜேசேகர ஓய்வுபெற்ற பின்னர், வியன்னாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர்கள் நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர் என்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், எதற்காக திடீரென அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் விபரிக்கவில்லை

1 comment:

  1. ஜனாதிபதியின் ஒரு நிர்வாக மட்டத்திலான மிகவும் சிறப்பான முடிவு. இதனை நாட்டின் குடிமகன் என்ற வகையில் நாம் பூரணமாக வரவேற்கின்றோம். இது போன்ற முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்படாத காரணங்களால் தான் அரச அதிகாரிகள் திமிராகவும் சட்டத்துக்கு முரணாகவும் நடந்து க கொள்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.