Header Ads



தன்னினச்சேர்க்கை விவகாரத்தை, முஸ்லிம்கள் எவ்வாறு அணுகலாம்..?

– ரிஷாட் நஜிமுதீன் –

தன்னினச்சேர்க்கை விவகாரம் இலங்கையில் இன்னும் சில வருடங்களில் சூடுபிடிக்க இருக்கும் ஓர் தலைப்பு. இந்தியாவில் சட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்- ஆண், பெண்- பெண் உறவு இலங்கையில் சட்டமாக்கப்படுமாயின் அதனை இங்கிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய வினா.

1- இஸ்லாம் தன்னினச்சேர்க்கையை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. அது ஹராமானது என்பதே அதன் தீர்ப்பு. அல்குர்ஆன் லூத் நபியின் சமூகம் இப்பாவ செயலில் ஈடுபட்டதாக கூறுகிறது. சூறா அஃராப் 81-84, ஹூத் 78-83, ஹிஜ்ர் 58-69, அன்பியா 71-75 மற்றும் சூறாக்களான ஷுஅரா, நம்ல், அன்கபூத், ஸாப்பாத் போன்ற சூறாக்களிலும் இது பற்றி பேசியிருக்கிறது. இறுதியில் அந்த சமூகம் அழிக்கப்பட்டதாகவும் அது எச்சரிக்கிறது. எனவே தன்னினச் சேர்க்கை ஹராம் என்ற தீர்ப்பு கால, சூழலுக்கு மாற்றமுறும் ஒன்றல்ல. அது திட்டவட்டமான, எவ்வித மாற்றமும் கொள்ளாத ஒரு தீர்ப்பு. இதற்கு மாற்றமாக யாராவது தீர்ப்பு கூறினால், அவர் யாராகவும் எந்த இயக்கத்தை சார்ந்தவராக இருப்பினும், அவரது கருத்தை நாம் எடுக்க வேண்டியதில்லை.

2- தன்னினச் சேர்க்கையை கடுமையான குற்றம் என உறுதியாக நம்பி ஏற்கும் முஸ்லிம் இன்னொன்றையும் ஏற்கிறான். அது இறைவன் ஏற்படுத்திய சட்டம். அவன் ஹகீம் (நுணுக்கம் மிக்கவன்). அவனது சட்டங்கள் அனைத்தும் மனித நலனை அடிப்படையாகக் கொண்டவை. இன்னொரு வார்த்தையில் கூறுவதாயின் “நலன்களை பெற்றுத்தருவதாகவும் தீங்குகளை தவிர்ப்பதாகவும்” உள்ளன எனலாம். இப்னுல் கையிம், ஷாதிபி போன்றவர்கள் இது பற்றி விரிவான விளக்கங்களை முன்வைத்திருக்கின்றனர். இப்பின்னணியில் அவன் ஹராம் எனக் கூறியிருக்கும் ஆண்-ஆண், பெண்-பெண் தொடர்பும் நிச்சயமாக மனித சமூகத்துக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியது என்பதையும் உறுதியாக நம்புகிறோம். அது ஏற்படுத்தும் தீங்கை மனிதனால் சில போது உடனடியாக புரிந்துகொள்ள முடியுமாக இருக்கலாம். அல்லது அதற்கு சில காலம் எடுக்கலாம்.

3- குறிப்பிட்ட பாவசெயல் தீங்கானது, மனித சமூகத்தை பாதிக்கக்கூடியது என்பதை நம்பும் முஸ்லிம் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறான். அதுதான் “எத்திவைக்கும்” பொறுப்பு. நபிமார்கள் செய்த பொறுப்பு. லூத் நபி செய்த பணி. இன்னொரு வகையில் “எச்சரித்தல்” எனவும் கூற முடியும். இன்றைய சூழலில் எச்சரிப்பது எவ்வாறு? என்பதையும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலின் “மொழி” இங்கு அவசியப்படுகிறது. மொழி என்பதனூடாக உரையாடல் மொழியையே நாடுகிறோம். வித்தியாசமான சிந்தனை முகாம்கள் சார்ந்தவர்கள் தன்னினச் சேர்க்கை கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். தன்னினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் முகாம்கள் இருக்கின்றன. லிபரல் சிந்தனையும் மாக்சிய சிந்தனையும் பச்சை கொடி காட்டுகின்றன. எவ்வித சிந்தனைகளையும் சாராத சில தனிமனிதர்கள் இதனை வரவேற்கின்றனர். சில அரசியல்வாதிகள் தம் அரசியல் காய்நகர்த்தல்களுக்காக அங்கீகரிக்கின்றனர். இவ்வாரான சூழலில் முஸ்லிம்களது உரையாடல் மொழி கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும். பொதுவாக இன்றைய சூழலின் மொழி “ஆய்வு மொழி” எனலாம். ஆய்வு ரீதியான, விஞ்ஞான பூர்வமான தகவல்களை வைத்து முடிவுகளை எம்மால் வடிவமைக்க முடியுமாக இருந்தால் அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக களஆய்வுகள் அவசியமானவை. தன்னினச் சேர்க்கையின் பாதகங்களை ஆய்வுகளினூடாக முன்வைத்து உரையாடுவதே இன்றைக்கு பொருத்தமான மொழியாக இருப்பதுடன் அதனை ஆதரிப்பவர்களை அது சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமையும்.

4- எச்சரிக்கை மொழி எனும் போது இன்னொன்றையும் கூற வேண்டியுள்ளது. அல்குர்ஆன் குற்றங்களில் மூழ்கிப்போன, எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத சமூகங்கள் அழிக்கப்பட்ட விதம் பற்றி பல இடங்களில் கூறுகின்றது. அதே போன்ற அழிவுகள் இன்றைய சமூகங்களுக்கு மிகபெரும்பாலும் வரப்போவதில்லை. ஆனால் சமூகங்கள் மிகப்பலவீனம் பெற்றுப்போய்விடும். பலவீனம் என்பதும் ஒருவகையான அழிவுதானே. எவ்வாறு பலவீனம் பெறும் என்பதை ஆய்வு ரீதியாக எச்சரிப்பதுதான் எம்மீதிருக்கும் பொறுப்பு. அரச அங்கீகாரம் என்பதையும் தாண்டி சிவில்ரீதியாக எம்மால் மனித அறிவிலும், உள்ளங்களிலும் இயங்க முடியும், அவற்றுடன் உரையாட முடியும். நாம் சுமந்திருப்பது மனித முடிவுகளல்ல. இறைவனின் வார்த்தைகள். எத்திவைப்பதும் எச்சரிப்பதும்தான் எமது பொறுப்பு. நாம் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாதே. ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான உரையாடலே அவசியமாகிறது.

“எத்திவைப்பதே உங்கள் மீதான பொறுப்பு” – அல்குர்ஆன்

“உங்களை நீங்களே அழிவுக்குள் போட்டுக்கொள்ளாதீர்கள்” – அல்குர்ஆன்

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

No comments

Powered by Blogger.