Header Ads



ஊனம் இங்கே யாருங்கோ..? இது ஹன்சனியின் கதை

 (ஆதில் அலி சப்ரி)

பல்கலைக்கழகத்தில் சாதாரண மாணவர்களுக்கு மத்தியில் நான் சிறப்புப் பண்புள்ள ஒருவராக விளங்க ஆரம்பித்தேன். எனது பெயரைக் கேட்டால், என்னைத் தெரியாதவர்கள் இல்லை. ஊனத்தின் காரணமாக நான் பிரபல்யமாகவில்லை. எனது விஷேட செயற்பாடுகள் காரணமாகவே என்னை அறிந்துவைத்துள்ளனர்"

ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த அறிக்கையிடல்களில் இடம்பெறும் குறைகளை நெறிப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் சீபீஎம் ஊடக மன்றத்தில் அனுபவப் பகிர்வுக்காக இணைந்துகொண்ட எச்.எம்.ஹன்சனி பினிபாவின் உரையின் ஒரு பகுதியைக் கொண்டு இந்த கதையை ஆரம்பித்துள்ளேன். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் 2ஆம் வருடத்தில் பட்டப்படிப்பைப் பெற்றுவரும் எச்.எம்.ஹன்சனி பினிபா, இலங்கையின் 5ஆவது இளம் பாராளுமன்றத்தில், பார்வைப் புலனற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினராவார். இரு கண்களிலும் முழுமையாக பார்வையற்று பிறவிக் குறையுடன் பிறந்த அவர், 2002ஆம் ஆண்டு பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பில் கண் பார்வையுள்ள 39 மாணவ, மாணவிகளுடன் ஹன்சனி ஒரு பார்வைப் புலனற்ற மாணவியாக இணைந்துகொள்கின்றார். 

ஹன்சனி முதலாம் வகுப்பில் இணைந்துகொண்ட நினைவுகளை எம்மிடம் மீட்டும் போது, ‘எனது தாயின் கையில் தொங்கியபடி முதல் நாள் பாடசாலைக்குச் சென்றேன். ஆசிரியை என்னை மிக்க மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்றார். ஆசிரியர் அவ்வாறு பொறுப்பேற்றதன் காரணமாகவே நான் இப்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். அங்கு அந்த ஆசிரியை ‘உங்கள் குழந்தையை பொறுப்பேற்க முடியாதென்று’ கூறியிருந்தால் எனது வாழ்க்கையின் திசை மாறியிருக்கக்கூடும்.  

1ஆம், 2ஆம் வகுப்புகளில் அதிகமாக படங்களைக் காட்டியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. உதாரணமாக பூக்கள், உயிரினங்கள் மற்றும் எழுத்துக்களைப் பழக்கும் போதும் ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதியே காட்டுகின்றனர். இது பார்வைப் புலனற்ற ஒரு மாணவிக்கு பெரும் சவாலாகும். இந்நிலையில், ஹன்சனியின் ஆரம்ப பிரிவு ஆசிரியரின் பங்களிப்பு இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. அதுகுறித்து அவர் கூறும்போது,  ஆசிரியை அவரது மேசையருகே என்னை அமர்த்திக்கொண்டிருந்தார். உணர்வுபூர்வமாக பாடங்களை போதித்தார். படங்கள் மூலம் மாணவர்களுக்கு விடயங்களை போதிக்கும் போது என்னையும் மறந்துவிடவில்லை. படங்களை எனது கைக்கு வழங்கி, தொட்டு உணரச் செய்தார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் எனது கையைப் பிடித்து எழுத்துக்களைப் பழக்கினார். 

சாதாரண மாணவர்களுடன் பார்வைப் புலனற்ற நிலையில் கல்வியைத் தொடர்ந்த ஹன்சனி, பாடசாலையில் இருக்கும் 5 மணிநேரத்தில், 1 மணி நேரத்தை விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி  போதிக்கும் பிரிவுக்குச் சென்று பிரைல் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டுள்ளார். பார்வைப் புலனற்றோர் பிரைல் என்ற எழுத்துமுறையைப் பயன்படுத்தியே வாசிக்கின்றனர். அது விரல்களால் தொட்டு உணரக்கூடியவாறு மேலேழுந்த புள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.  

ஹன்சனியின் அனுபவப் பகிர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தரம் 5 புலமைப் பரிசில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் 6ஆம் தரத்திற்கு சென்றதும் 12 பாடங்கள் கற்று, தவணைப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க வேண்டுமென்ற சவால் வந்தது. 3 மணிநேரங்களில் பிரைல் மொழியில் இந்த பரீட்சைகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பது இலகுவானதல்ல. ஆசிரியரொருவர் கேள்விகளை வாசிப்பார். நான் கேள்விகளைக் கிரகித்து பதிலளிப்பேன். இவ்வளவு சிரமங்களுடன் பரீட்சைக்கு தோற்றிய, நான், பெறுபேறுகளின் அடிப்படையில் வகுப்பில் இறுதியானவளாக வரவில்லை. 40 மாணவர்களில் 5க்கும் 10க்கும் இடைப்பட்ட இடங்களையே பெற்றேன். 

என்னை நெருங்கிய முதலாவது சவால் சாதாரண தர பரீட்சையாகும். இரத்மலானை பார்வையற்  
றோர் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றினேன். சாதாரணதர பரீட்சையில் 4பீ மற்றும் 4 எஸ்களுடன் உயர்தரத்துக்கு சித்திபெற்று, உயர்தரத்துக்கு கலைப் பிரிவைத் தெரிவுசெய்தேன். உயர்தர பரீட்சையில் கட்டாயம் 3ஏ சித்தி பெற்று, பல்கலைக்கழகம் நுழைவேன் என ஆசிரியர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். எனக்கு 3ஏ பெற முடியாது போனாலும் 2ஏ, சீ சித்தியுடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானேன்.’ என்றார்.  

பார்வைப் புலனுடன் உடல், உள ரீதியாக சம்பூரணமானவர்களும்கூட கற்றல் மற்றும் பிற வேலைகளில் சோர்வடைகின்றனர். பார்வைப் புலனற்ற ஒருவர் இவ்விடயத்தில் எம்மைவிட அதிகமாகவே சோர்வடைய வாய்ப்புள்ளதை நான் விசேடமாக கூறவேண்டியதில்லை. சோர்வை ஹன்சனி எதிர்கொண்ட விதம் இங்கு கவனிக்கத்தக்கது. அது குறித்து அவர் தெரிவிக்கும் போது, ‘நாம் அதிகமாக விரும்பும் வாசனைத் திரவியத்தை எம்மோடு வைத்திருக்கும் போது அதிகமாக நினைவாற்றல் கிடைக்கும். அதேபோன்று, பரீட்சையில் சோர்வு, சலிப்பு ஏற்படும் போது அந்த வாசனைத் திரவியத்தை நுகர்ந்து புத்துணர்ச்சியுடன் பரீட்சைக்கு புதிதாக முகங்கொடுப்பேன்.’ 

கல்வித் துறையில் பல்கலைக்கழகம், எதிர்கால இலக்குகளில் இளம் பாராளுமன்றம் என அடைவுகளை கண்டுள்ள ஹன்சனியின் வெற்றிக் கதையில் இருந்து நாம் சில படிப்பினைகளுக்கு வரலாம். 

ஹன்சனி பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக பல்வேறு கற்கைகளில் கவனம் செலுத்தினார். பல்கலைக்கழகம் என்பது பாடசாலையைவிடவும் பெரிய வட்டமாகும். பல்கலைக்கழகத்துக்கு பல்
வேறு சூழல்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். பாடசாலைக் காலத்தில் இருந்தே சாதாரண மாணவர்களுடன் செயற்பட்ட ஹன்சனிக்கு அவர்களுடன் பணியாற்றுவது சிரமமாக அமையவில்லை.

கண் பார்வையற்ற ஒரு மாணவி சாதாரண மாணவர்களுடன் ஒரே வகுப்பில் இருக்கும்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்கின்றது என்பது உண்மை. எனவே அவ்வாறான அதிகமானோர் கண் பார்வையற்றோருக்கான 

விஷேட பாடசாலைகளுக்குச் செல்வதையே காண்கின்றோம். சில பெற்றோர் பார்வையற்ற குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாது தம்முடனேயே வைத்துக்கொள்கின்றனர்.


எனினும் பார்வையற்ற மாணவர்களும் சாதாரண மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்றால், சாதாரண மாணவர்களிடையே ஊனமுற்றோர் குறித்து உள்ள பதிவுகளை மாற்றலாம். அவர்கள் பார்க்க, பேச, 

கேட்க முடியாத காரணத்தினால் மாத்திரமே ஊனமுற்றவர்கள் என்ற விளக்கத்தை சாதாரண மாணவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். பார்வையற்றோர் உட்பட  ஊனமுற்றோர் சமூகத்துக்கு வரும் போது, அவர்கள் குறித்த சமூகத்தின் பார்வையிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.  ஊனமுற்ற மாணவர்கள் ஏதாவதொரு வேலையைச் செய்ய முடியாதவர்கள் அல்லர். 

‘நான் பாராளுமன்றம் சென்று அமைச்சரொருவராக வரவேண்டுமென்ற கனவு எப்போதும் எனது உள்ளத்தில் இருந்தது. இன்றாகும் போது நான் எனது கனவை நனவாக்க நெருங்கிவிட்டேன். ஊனமுற்றோரை சமூகம் தாழ்த்தாவிட்டால், அவர்களும் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்’ என ஹன்சனி தனது அனுபவப் பகிர்வை முடித்தார்.   

ஹன்சனியின் அனுபவப் பகிர்வோடு ஊனமுற்றோர் விடயத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள விரிவுரையாளர் குசலா மெத்தசிங்க, ஊனம் என்பது சமூகத்தின் மூலம் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறிய சமூக நிலைமை என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியது. 

உடல் நிலைமை, செயற்பாடு மற்றும் பங்குபற்றல் என்பன எந்தவொரு மனிதனின் சுகாதார நிலைமையை நடத்திச் செல்வதற்கான அடிப்படைகளாகும். மனிதனொருவரின் வினைத்திறன்மிக்க செயற்பாட்டில் தனிமனித காரணிகளைப் போன்றே சூழல் காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. ஊனமுற்ற ஒருவரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அதனால் ஏனையோருடனான சம பங்குபற்றல் வாய்ப்புகள் தடைப்படுகின்றன. 

 ஊனமுற்றோரின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துகின்ற சூழல் காரணிகளை சீர்செய்தல் மற்றும் ஊனமுற்றோரின் பங்குபற்றலுக்கான சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதினூடாக சமூகத்தின் ஊனமுற்றோர் மீதான பார்வையை மாற்றலாம். ஊனமுற்றோருக்கு ஏனையோர் போன்றே கல்வி, பொருளாதார, அபிவிருத்தி மற்றும் சமூக விடயங்களில் சமவாய்ப்பு வழங்குவதின் மூலம் காலப்போக்கில் இவ்விடயத்தை சாத்தியப்படுத்தலாம். 

சீபீஎம் என்ற அரச சார்பற்ற அமைப்பு 2014ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வொன்றுக்கமைய இலங்கையில் 57,830 ஊனமுற்ற, விசேட தேவையுடைய மாணவர்கள் பாடசாலைக் கல்வியைக் கற்றுள்ளனர். இவர்களில் 2,877 பேர் 25 விசேட பாடசாலைகளிலும், 5,125 பேர் 525 அரச பாடசாலைகளின் விசேட பிரிவுகளிலும் 49,825 பேர் பொதுவான அரச பாடசாலைகளில் கற்றுள்ளனர். விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி போதிக்க பயிற்சி பெற்ற 1001 ஆசிரியர்களே உள்ளனர்.  

இலங்கையில் ஊனமுற்ற குழந்தைகளும் பாடசாலைக்குச் செல்லும் நிலைமை உருவாகவேண்டும். அது வெறுமனே ஊனமுற்ற மாணவர்களை சாதாரண மாணவர்களுடன் அமர்த்துவதினூடாக முடிவடைவதல்ல. அவர்கள் தங்கு, தடையின்றி கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பதுமாகும். நாட்டின் கல்விக் கொள்கையில் இனங்காணப்பட்டுள்ள மாற்றங்கள் நிகழவேண்டும். ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர் விழிப்புணர்வுபெற வேண்டும். ஏனைய குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பிறவிக்குறை அல்லது ஊனமுற்றோரை சமூகத்தில் பார்க்கும் கண்ணோட்டத்தில் கணிசமானளவு மாற்றங்கள் ஏற்படவேண்டும். 

சாதாரண மாணவர்களுடன் கல்வி கற்று, இன்று வாழ்க்கையில் பல இலட்சியங்களையும் நெருங்கியுள்ள எச்.எம்.ஹன்சனி பினிபா எமக்கு சிறந்த உதாரணமாகும். ஹன்சனியின் விடயத்தில் சமூகம், பாடசாலைச் சூழல், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சூழல் என அனைத்துமே சாதகமாக அமைந்துள்ளதை அவதானிக்கின்றோம். 

எனினும், ஊனமுற்றோர் விடயத்தில் பெரும்பாலும் இதற்கு மாற்றமான நிலைமையே தொடர்கின்றன. அங்கு சமூகத்தின் கண்ணோட்டம் மாறவேண்டும்.   

ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ! உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லிங்கோ! உள்ளம் நல்லா இருந்தா ஊனம் ஒரு குறை இல்லிங்கோ! உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லிங்கோ! 

No comments

Powered by Blogger.