September 21, 2018

மர்ஹும் பாக்கீர் மாக்காரின் 23வது வருட நினைத்தில், சபாநாயகர் ஆற்றிய உரை

சகல இன மக்களின் மனங்களை 
வெல்வதிலே நல்லிணக்கம் சகவாழ்வு 
சாத்தியமாகும் 
  
அனைத்து இன மக்களின் மனங்களை வெல்ல முடிந்தால் மட்டுமே நாட்டில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்த முடியுமெனவும் நல்லிணக்கம், சகவாழ்வு இதனூடாகவே சாத்தியப்படுமென்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 
அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கு இலகுவாக 
அமைவது, இதயங்களை வெற்றிகொள்வதே என்பதே மதங்களின் கோட்பாடென்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். 


முன்னாள் சபாநாயகர் மர்ஹும் எம். ஏ. பாக்கீர் மாக்காரின் 23வது வருட நினைவு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. 
இதில் "அனைவரையும் ஒன்றுதிரட்டுகின்ற இலங்கைக்கான நோக்கு" எனும் தலைப்பில் உரையாற்றும்போதே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்: 


மூன்று தசாப்த யுத்தத்திற்கு பின் இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி யாது? இதுவே எம்முன்னுள்ள தலைப்பாகும். 
2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் அனைத்து இனங்களையும் உன்றிணைப்பதில் எமக்கு வெற்றியை அடைய முடிந்துள்ளதா? அதை நாங்கள் தவறிவிட்டு செயற்பட்டதாகவே நான் கருதுகிறேன். பௌத்த தர்மத்தின் பிரதான கருப்பொருள் காரண விளைவு விதியாகும். குறிப்பிட்ட ஒரு விடயம் இடம்பெறுவது குறிப்பிட்ட ஒரு விடயத்தை அடிப்படையாக் கொண்டாகும். அதன் மூலம் எமக்கு ஒரு விளைவினைக் காண முடியும். யுத்தம் என்பது நாங்கள் விதைத்தவற்றுக்கு அறுவடையாகப் பெற்ற ஒரு விளைவு மாத்திரமே. அதற்கு ஏதுவான காரணிகள் யாவை? மீண்டும் அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறாதிருக்க வேண்டுமாயின், நாங்கள் அக் காரணியை இல்லாதொழிக்க வேண்டும். 
இலங்கையில் யுத்தம் ஏன் ஆரம்பமான தென்பதை பகுப்பாய்வு செய்வது மிகவும் சிக்கலான விடயம். அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு சமூக, அரசியல் தத்துவத்தை கட்டியெழுப்ப முடியாமற் போனமையே இதற்கான முக்கிய காரணமாகும். 
சுதந்திரத்தை பெற்றுத் தந்த முதலாவது பிரதமர் டீ. எஸ். சேனநாயக்க சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதி, எமக்குப் புகட்டும் பாடம் அளப்பரியது. 
சிங்களம், தமிழ், முஸ்லிம், யுரேஷியன், பெளத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய அனைவருமே இனிமேல் இலங்கையராக இருத்தல் வேண்டுமென அவர் கூறினார். 

இன்றைய உங்கள் கதையாடலுக்கான முன்னுரையை 1948 இல் டீ. எஸ். சேனாநாயக்க வழங்கியுள்ளார். மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவிலும் நாங்கள் அவர் கற்பித்த பாடத்துக்கு ஏற்ப நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? அதிகார அரசியலை அடிப்படையாக கொண்ட கருத்திட்டமொன்றின் மூலம் சகலரையும் ஒன்றிணைப்பதை விடுத்து வெற்றியாளர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களென்று சமூகத்தில் பிரிவினை உருவாக்கப்பட்டது. 
அதனால் சர்வதேச அரங்கில் நாம் தனிமைப் படுத்தப்பட்டதுடன், சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. 
எமக்கு விடுக்கப்பட்ட சவாலை வெற்றி கொள்வதற்கு, இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தேவைப்பட்டது. இலங்கையில் முதல் தடவையாக சமூக நீதி கருதி மக்களை அணிதிரட்டும் பணி 2015 ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றது. 
அனைவரையும் ஒன்றிணைக்கும் இலங்கைக்கான ஒரு நோக்கினை உருவாக்கும் வேலைத் திட்டத்தில், மூன்று தசாப்தகால யுத்தத்தின் கசப்பான நினைவுகளை நீக்கும் வேலைத் திட்டம் முக்கியமானதாகும். 
தற்போதைய அரசாங்கம் நடைமுறைப் படுத்தியுள்ள நல்லிணக்கம் பற்றிய தேசிய வேலைத் திட்டம், காணாமற்போனர் பற்றிய அலுவலகம், பாதிக்கப்பட்டவர்களுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இழப்புகளை எதிரீடு செய்வதற்கான அலுவலகம், உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவாக அறிவுறுத்துதல் முக்கியமானதாகும். 

தேசிய நல்லிணக்கம் பற்றிய பாக்கீர் மாக்கார் நிலையத்துக்கு இது தொடர்பில் ஆற்றக்கூடிய ஏராளமான பணிகள் இருக்கின்றன. 
இத்தகைய வேலைத் திட்டமொன்றை நடை முறைப்படுத்துகையில் அதற்கு தலைமைத்துவம் வழங்குவோரது வகிபாகம் மிகவும் முக்கியமானது. பிரத்தியேக ஒழுங்குப் பத்திரத்தை புறந்தள்ளிவிட்டு பொது ஒழுங்குப் பத்திரமொன்றுக்கேற்ப ஒழுகும் பலம் அவர்களிடம் காணப்படுதல் வேண்டும். தம்மைப் பற்றி சிந்தியாது நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும். இத்தகைய வேலைத் திட்டமொன்றின் இறுதியில் தாம் இருக்கும் நிலையைப் பற்றி அல்லாது நாடு இருக்கும் நிலை பற்றி நினைக்குமளவுக்கு அவர்கள் தூரநோக்கு உடையவர்களாக இருத்தல் அவசியம். அத்தகையதொரு நிலை தற்காலிக பதவியிலான மரியாதையையும் விட நிரந்தர மரியாதையை தமக்கு பெற்றுத் தரும். 
நல்லிணக்கம் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குக் கூட தயக்கம் காட்டிய, அதேபோல் யுத்த வெற்றியுடன் எல்லாமே முடிந்துவிட்டது எனச் சிந்திப்பதற்கு வலியுறுத்திய, அதுபோன்ற கருத்தியல்கள் ஊட்டி வளர்க்கப்பப்பட்ட காலத்தில் பாக்கீர்மாக்கார் இந்த நிலையத்தை ஆரம்பித்தார். 

எவ்வாறாயினும், உண்மையான பிரச்சினை ஓயவில்லை என்பதைக் கண்டுகொண்ட அவர் இந்த நிலையத்தினூடாக அனைவரையும் ஒன்று சேர்க்கும் இலங்கைக்கான ஒரு தொலைநோக்கை வகுத்தமைக்க எடுக்கும் பிரயத்தனத்திற்கு நாட்டின் மதிப்பும் பாராட்டும் உரித்தாக வேண்டும். 
மாவோ சேதுங் கூறியது போல “இருளை சபித்துக்கொண்டிருக்காமல் ஒளி ஏற்றுவதே சிறந்தது” அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடும் தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

1 கருத்துரைகள்:

பாக்கீர் மார்க்கார் அவர்கள் சமாதானத்தின் சின்னம்.  அவருக்கு சுவனத்திலும் உயர் பதவிகளை அல்லாஹ் அருள்வானாக... ஆமீன்.

இலங்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வு '1956'ஐ திருத்தி உச்சரித்து எழுதுவதில்தான் உள்ளது!

Post a Comment