Header Ads



வெற்றிகரமாக ஹஜ் ஏற்பாடுகளை, செய்துமுடித்த சவூதிக்கு பாராட்டுக்கள்


உலக முஸ்லிம்களின் புனித ஹஜ் கடமை இவ்வருடம் இனிதே நிறைவுக்கு வந்துள்ளது. மில்லியன் கணக்கான உலக முஸ்லிம்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சவூதி அரேபிய அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இவ்வருடத்தின் ஹஜ் ஏற்பாடுகளை யாத்திரிகர்களின் நலன்கருதி சவூதி அரேபியா சிறப்பாகத் திட்டமிட்டு மேற்கொண்டதால் எதுவித அசம்பாவித நிகழ்வுகளும் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கதாகும். சவூதி அரேபியாவின் ஹஜ் ஏற்பாடுகளுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வருடம் சுமார் 2 ½ மில்லியன் உலக முஸ்லிம்கள் ஹஜ் கடமைக்காக புனித நகர்களான மக்கா, மதீனாவில் ஒன்று கூடினார்கள். இந்த எண்ணிக்கையிலான மக்களை மக்காவில் வரவேற்பதற்கும் தங்க வைப்பதற்குமான விஸ்தரிப்புப் பணிகளை சவூதி அரேபிய அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு உரியகாலத்தில் பூர்த்தி செய்திருந்தது.

2015 ஆம் ஆண்டு ஹஜ் கடமையின் போது ஹஜ் யாத்திரிகர்கள் மினாவை நோக்கி நகர்ந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் சவூதி அரேபியாவுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவ்வாறான அனர்த்தம் மீளவும் நிகழாதிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி அரசு திட்டமிட்டு மேற்கொண்டமை பாராட்டத்தக்கதாகும். 2015 ஆம் ஆண்டு மினா சனநெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் உயிரிழந்தமை ஒரு வரலாற்றுச் சம்பவமாகும்.

அண்மைக்காலமாக சவூதி அரேபியாவில் பல புதியமாற்றங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உள்நாட்டில் மாத்திரமல்லாது               வெளிநாடுகளிலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை திட்டமிட்டு சிறப்பான முறையில் சவூதி அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றமை பாராட்டத்தக்கதாகும். தொடர்ந்தும் ஹஜ் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படும் என்றே உலக முஸ்லிம் நாடுகள் எதிர்பார்க்கின்றன.

மக்கா மற்றும் மதீனா புனித தலங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்களிப்பே ஹஜ் ஏற்பாடுகளின் வெற்றிக்குக் காரணமாகும்.

இவ்வருட புனித ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்களுக்கிடையே தொற்று நோய்கள் இனங்காணப்படாமை குறிப்பிட்டுக்கூறக்கூடியதொன்றாகும். சவூதி அரேபிய சுகாதார அமைச்சு உலகளாவிய சுகாதார நிலைமைகளுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தமையே இதற்குக் காரணமாகும்.

அத்தோடு விஷேட தேவையுடையோரும் எவ்வித சிரமமுமின்றி ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய ஏற்பாடுகளை சவூதி அரேபிய அரசு செய்து கொடுத்திருந்தது. கண்பார்வையற்றோருக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேசும் கைக்கடிகாரம் மற்றும் வெள்ளைப்பிரம்பு  என்பன வழங்கப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து முடித்துள்ள சவூதி அரேபியா தொடர்ந்துவரும் வருடங்களிலும் முன்னேற்றகரமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மில்லியன் கணக்கான உலக முஸ்லிம்களை ஒன்றுகூட்டி ஹஜ் எனும் சர்வதேச உலக மாநாட்டினை வெற்றிகரமாக நிறைவேற்றிய சவூதி அரசுக்கு எமது பாராட்டுகள்.

(இன்றைய -24- விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

2 comments:

  1. Alhamthulillah. The arrangement fot the Hajj was amazing. May Allah bless Saudi Government.

    ReplyDelete

Powered by Blogger.