August 25, 2018

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவுக்கு றிசாத் + ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்

முஸ்லிம் சமூக ஆய்வாளரும், சிறந்த சிந்தனாவாதியும் பன்னூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

கல்வித்துறையிலும், சமூக ஆய்விலும் அன்னாரது அனுபவங்களின் பங்களிப்பு அபரிமிதமானது. 

எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், மன்னார் மண்ணுக்கு பெருமை தேடித் தந்த ஒரு கல்விமான். இவர் பன்முக ஆளுமை படைத்தவர். 

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது “வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு” ஒன்றை தொடங்குவதில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்து, பின்னர் இந்த அமைப்பின் ஊடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்த அரும்பாடுபட்டவர். இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை நூல் வடிவில் கொண்டு வந்தவர்.

வில்பத்துப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட போது, அது தொடர்பில் நூலொன்றை வெளியிட்டு உண்மை நிலையை பிற சமூகத்திற்கு தெளிவு படுத்துவதில் பகீரத பிரயத்தனம் செய்தார்.

தேசிய மீலாத் விழா தொடர்பான நூலொன்றை ஆக்கும் பணியை அவரிடமே ஒப்படைத்திருந்தோம். இறுதியாக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் நானும் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சிலரும் அவரைச் சந்தித்த வேளை, அந்த நூலின் ஆரம்ப வேலைகளைத் தொடங்கியுள்ளதாகவும் இந்தப் பணியை திறம்படச் செய்து தருவேனென்றும் எம்மிடம் தெரிவித்தார்.

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்து முஸ்லிம் சமூகத்தின் இருப்பைப் பேண அவர் காட்டிய அக்கறையையும் தொடர்ச்சியான உழைப்பையும் இந்த கவலையான சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி எல்லை நிர்ணயம் தொடர்பில் தனியான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்து முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்காக குரல் கொடுத்தவர். 

அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றோம்
2

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்வின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு கல்வித்துறையில் ஏற்பட்ட பேரிழப்பாகும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மரணச் செய்தி மிகவும் கவலையளிக்கின்றது. எனது நீண்ட கால நண்பரான அவர் எனது அரசியல் பயணத்தில் பல சந்தர்ப்பங்களில் தேவையான ஆலோசனைகளையும் - ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளார். 
அவர் மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் மாகாண எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கி செயற்பட்டோம். மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மாகாண சபைகள் எல்லை நிர்ணய யோசனை அறிக்கையொன்றை நான் சமர்ப்பித்திருந்தேன். இதனை தயாரிப்பதற்கு ஆலோசனைகளையும் - வழிகாட்டுதல்களையும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் வழங்கியிருந்தார். 
இதேவேளை, வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் ஆவணங்களை தயாரித்து அம்மக்களின் பிரச்சினையை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசம் வரை கொண்டு சென்றதில் இவருக்கு மிகப்பெரும் பங்குள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், அது சம்பந்தமான பிரச்சினைகள் எழும்போது முன்னின்று செயற்பட்டார். 
தான் பெற்ற கல்வி மூலம் சமூகத்துக்கு மிகப்பெரும் சேவையாற்றிய ஒருவர். பேராதனைப் பல்கலைக்கழத்தில் இவரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று உள்நாட்டிலும் - வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர். 
முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், அரசியல் நிலை தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்ந்த சிறந்த ஆய்வாளர், பன்னூலாசிரியர். இவ்வாறு சமூக உணர்வுள்ள ஒரு கல்விமானை நாங்கள் இன்று இழந்துள்ளோம். இது எமது சமூகத்துக்கு கல்வித்துறையில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.  
இவரது இழப்பால் கவலையுற்றுள்ள அன்னாராது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாராது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம். அத்துடன், எல்லா வல்ல இறைவன் அவருடைய தூய நோக்கத்தைப் பொருந்திக் கொண்டு அவருடைய பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்க்கையை இலகுபடுத்தி வைக்க பிரார்த்திக்கின்றேன். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 கருத்துரைகள்:

Post a Comment