Header Ads



புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்


புத்தளத்தில் தனியாருக்குச் சொந்தமான உப்பு உற்பத்தி வயல்களை முடிக்குரிய காணிகளாக அரசு அறிவித்துக் கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சி, உரிமையாளர்களதும் ஊழியர்களதும் கடும் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காணியை அளவீடு செய்து கையகப்படுத்துவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டபோது நேற்று உப்பு வயல் காணியின் உரிமையாளர்களும் ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அளவீட்டுப் பணியை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயக்கா மேற்கொண்டுள்ளார்.

புத்தளத்தில் தனியாருக்குச் சொந்தமான உப்பு உற்பத்தி வயல்கள் முடிக்குரிய காணிகள் என 1973 இல் விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டு அந்தக் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை வட மேல் மாகாண காணி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்தனர். இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச் சங்கத்தினர் நேற்றுக் காலையில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை புத்தளம் நகரில் நடாத்தினர்.

சங்கத்தின் தலைமையகத்திலிருந்து புத்தள மாவட்ட செயலகம் வரை நடாத்தப்பட்ட இந்த ஊர்வலத்தின் நிறைவில் சங்கத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினர்கள் மேலதிக மாவட்ட செயலாளரைச் சந்தித்து ஆட்சேபனை மகஜரொன்றைக் கையளித்தனர். இந்த மகஜரை கையேற்ற மேலதிக மாவட்டச் செயலாளர், குறித்த காணிகளை அளவீடு செய்யும் பணிகளை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாகவும், இந்தக் காலப்பகுதிக்குள் குறித்த உப்பு வயல்காணிக்களுக்கான உரித்துரிமையை சட்டப்படி நிரூபிக்குமாறும்' சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

மேலதிக மாவட்ட செயலாளருடனான இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். அமீன், சங்க முக்கியஸ்தர்களான எஸ்.என்.எல். சுகையில், ஏ.என்.ஏ.ஏ. அலி சிமாக், சங்கத்தின் பொதுமுகாமையாளர் நஸ்லியா காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு ஏற்ப குறித்த காணிகளை அளவீடு செய்யும் பணிகளை காணி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் நேற்று முதல் இடைநிறுத்தி உள்ளனர். நேற்றுக் காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வாய்க்கால் உரிமையாளர்கள், உப்பு செய்கையாளர்கள் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சென்றவர்கள், 'எங்கள் காணியை அளவீடு செய்யாதே..', காணி அளவீட்டை உடன் நிறுத்து, பத்தாயிரம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே..' உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.

மர்லின் மரிக்கார்

No comments

Powered by Blogger.